எவருக்கும் அடங்காமல் நினைத்ததை வைராக்கியத்துடன் முடிப்பவரை எமகாதகன் என்பார்கள். அதன் பெண்பால் வடிவம்தான் இது. அப்படி, இறந்தும் தன் வைராக்கியத்தை முடிக்கும் ஒரு பெண்ணின் கதை இது.
கதையின் நாயகியாக வரும் ரூபா கொடுவாயூர் எப்படிப்பட்ட பிடிவாதக்காரர் என்பதை முதல் காட்சியிலேயே நமக்கு தெரியப்படுத்தி வருகிறார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். அத்துடன் அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை இருப்பதும் நமக்குத் தெரிவிக்கப்படுகிறது.
அப்பா ராஜு ராஜப்பன் அம்மா கீதா கைலாசம் அண்ணன் சுபாஷ் ராமசாமி, அண்ணி ஹரிதா மற்றும் பாட்டியுடன் வசித்து வரும் அவரை, ஏதோ ஒரு கோபத்தில் அப்பா அறைந்து விட, பதில் கோபத்துடன் மாடியில் தன் அறைக்குச் செல்கிறார்.
இரவு நெடுநேரம் ஆகியும் சாப்பிட வராமல் அவர் அறையில் விளக்கு எரிவதைப் பார்த்த அம்மா கீதா கைலாசம் அறைக்குள் சென்று பார்க்க அங்கே அவர் தூக்கில் பிணமாகத் தொங்குகிறார். ஒரு அறைக்கு உயிரை விடுவார்களா என்ன என்று குடும்பமே நிலை குலைந்து போகிறது.
ஆனால், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் யாரும் இதை நம்ப மாட்டார்கள் என்பதால் அந்த ஊர் மருத்துவர் ஆலோசனைப்படி மூச்சுத் திணறலால் அவர் இறந்து விட்டதாக ஊருக்குச் சொல்கிறார்கள். ரூபாவுக்கு மூச்சுத் திணறல் இருக்கும் விஷயம் ஊர் அறிந்ததுதான்.
ஊரே கூடி நிற்க பிணத்தை எடுப்பதற்காக அவரைத் தூக்கினால் யாராலும் நகர்த்தக் கூட முடியவில்லை. எத்தனை பேர் முயன்றாலும் முடியாத நிலையில் ஒரு கட்டத்தில் அந்தப் பிணம் எழுந்து உட்கார்ந்து விட ஊரே அல்லோலகல்லோலப் படுகிறது
அதுவரை சாதாரணமாக போய்க்கொண்டிருந்த படத்தின் கதையும் அங்கே எழுந்து உட்கார்ந்து விடுகிறது. அதற்குப் பிறகு பரபரப்பான திருப்பங்கள் தான்.
ஏற்கனவே அவரது வீட்டில் திறக்கப்படாத ஒரு அறைக் கதவை அவரது பாட்டி பார்த்துக்கொண்டே எந்நேரமும் பித்து பிடித்தாற்.போல் உட்கார்ந்து இருக்கிறார். அந்த அறையில் அவரது தங்கை தூக்கு போட்டு இறந்திருக்க, கதவைத் திறந்தால் அந்த வீட்டில் துன்பங்கள் நிகழும் என்ற நம்பிக்கை இருப்பதும் நமக்கு தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இறப்பதற்கு முந்தைய நாள் தான் அந்த அறைக் கதவை வம்படியாகத் திறக்க வைக்கிறார் ரூபா. அவர் இறந்ததற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதையெல்லாம் வைத்து ஒரு இரண்டு மணி நேரப் படத்தை பரபரப்பாக அதே சமயத்தில் இயல்பாக நகர்த்திச் சென்று ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
இரண்டு மூன்று காட்சிகள்தான் நாயகி ரூபா உயிருடன் வந்தது. மற்றபடி படம் நெடுக பிணமாகவேதான் வந்திருக்கிறார். இருந்தாலும் அவர் தொடர்பான கதை நகர்த்தல்கள் பிணத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
படத்தில் இந்தப் பிண நாயகியே கதை நாயகியாகவும் இருக்க, பாதிப் படத்துக்கு மேல் தான் அறிமுகம் ஆகிறார் அவரைக் காதலித்த நாகேந்திர பிரசாத். அதனால் எல்லாம் அவரை நாயகன் என்று சொல்லிவிட முடியாதுதான். ஆனால் சில காட்சிகளே என்றாலும் உணர்ச்சியுடன் நடித்து கவனம் ஈர்க்கிறார்.
படத்துக்குள் நமக்கு நன்றாக முகம் தெரிந்த ஒரே நபர் நாயகியின் அம்மா கீதா கைலாசம்தான். ரூபா ஒரு பக்கம் பிணமாக இருக்க இவர் ஒரு பக்கம் அசைவற்று இருக்க… மற்றவர்கள் எல்லாம் நடித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்…ஆனால், கடைசிக் காட்சியில் உண்மைகள் வெளிவரும்போது உடைந்து உருகி மற்ற எல்லோரையும் பின்னால் தள்ளி விடுகிறார் கீதா.
நாயகியின் அப்பா ராஜு ராஜப்பனின் நடிப்பும் நன்று. ஊர்த் தலைவராக இருக்கும் அவர் குடும்பம் ஊர் சிரிக்கும் அளவில் படும் பாடு அந்தோ பரிதாபம்.
ரூபாவின் அண்ணன் சுபாஷ் ராமசாமியும், அண்ணி ஹரிதாவும் தேவைக்கேற்ற நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
இவர்களுடன் படத்தில் வரும் மற்ற எல்லாப் பாத்திரங்களும் நமக்கு அறிமுகம் இல்லாதவர்களாக இருப்பதே கதைக்கு பெரும் பலத்தைத் தந்து அவர்களை நிஜப் பாத்திரங்களாகவே நம்ப வைக்கிறது.
இசையமைப்பாளர் ஜெஸின் ஜார்ஜ் பாடல்களிலும் பின்னணி இசையிலும் படத்தின் உணர்வை சரியாகக் கடத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்கும் தன் பங்குக்கு நம்மைக் கதை நடக்கும் அந்த கிராமத்துக்கு அழைத்துச் சென்றது போன்ற பிரமையை ஏற்படுத்தியிருக்கிறார். (பிணம் வைக்கப்பட்ட வீட்டுக்குள் இருக்கும் இயற்கையான லைட்டிங் அபாரம்.)
அதை சிதைத்து விடாத வகையில் சரிவிகிதமாக தொகுத்து இருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்.
அமானுஷ்யமான கதைதான் என்றாலும் எந்த இடத்திலும் அகோர முகங்களையோ, பேய்களின் வெறியாட்டங்களையோ காட்டாமல் இயல்பாக நம்மைப் படத்துடன் ஒன்றை வைத்திருக்கும் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் நம்பிக்கை தரும் இளம் இயக்குனர்கள் வரிசையில் இணைகிறார்.
இரண்டாவது பகுதியில் திரைக்கதையில் ஏற்படும் ஒரு தள்ளாட்டத்தைக் கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.
மற்றபடி சாத்தியமான பட்ஜெட்டுக்கு பங்கம் இல்லாமல் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் அசாத்திய படைப்பாக வந்திருக்கிறது படம்.
எமகாதகி – அசையாமல் சாதித்த சந்திரமுகி..!
– வேணுஜி