இருக்கிற இரண்டரை மணி நேரத்தில் ஒரு கதையை உருப்படியாக சொல்லி முடிப்பதே பெரிய விஷயம் என்று இருக்க, அதற்குள் ஐந்து கதைகளைத் திணித்து அந்தாலஜியாகத் தந்திருக்கிறார் இந்தப் பட இயக்குநர் பிரிட்டோ ஜே.பி.
தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டியில் வைத்து தன் காதலனை மரியாதைக் குறைவாக நடத்திய அம்மாவிடம் கோபித்துக் கொண்டு ரயில் ஏறுகிறார் நாயகி லவ்லின்.
ரயிலில் அவரின் நிலையைப் பேச்சுக் கொடுத்து புரிந்து கொண்ட டிக்கெட் பரிசோதகர் யோகி பாபு இந்த உலகில் உறவுகள் எப்படி எல்லாம் சின்னா பின்னப் படுத்தப்பட்டுக் கிடக்கின்றன என்பதை ஐந்து கதைகளின் மூலம் புரிய வைக்கிறார்.
லவ்லின் அந்தக் கதைகளின் மூலம் புரிந்து கொண்டது என்ன என்பதுதான் மொத்தப் படத்தின் கதை முடிவு.
யோகி பாபு சொல்லும் முதல் கதை மகா டெரர். சாதிய கொடுமைகளுக்கு பயந்து மும்பை செல்லும் ஒரு காதல் ஜோடி அனாவசியமாக இரண்டு தாதாக்களின் மோதலுக்குள் எதிர்பாராமல் சிக்கிப் பிரிய நேர, அதன் முடிவு என்ன என்பது கண்கலங்க வைக்கிறது.
இரண்டாவது கதையில் இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து அவர்களை அரும்பாடு பட்டு வளர்த்து வயதான நிலையில் இருக்கும் பெற்றோர், இரண்டு மகன்களாலும் ஆதரவில்லாமல் தவிக்கும் தவிப்பைச் சொல்கிறது.
மூன்றாவது கதை மீனவக் குப்பத்தில் நடக்கிறது. அங்கே ஒரு தாய் புற்றுநோய் பீடித்து மரணப்படுக்கையில் விழ, அவள் பெற்ற மகனும் வளர்ப்பு மகனும் அவளைக் காப்பாற்ற முயலும் பணத்திறகான போராட்டமே எப்படி அம்மாவின் உயிருக்கு உலையாக வந்து நிற்கிறது என்று சொல்கிறது.
நான்காவது கதையும் ஒரு உருக்கமான தாயின் நிலையைச் சொல்கிறது அவளது மகனும் மருமகளும் வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு சென்று விட, ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருக்கும் அவளுக்கு ஆதரவாக ஒரு ஆட்டோ டிரைவர் மகனாக வந்து வாய்க்கிறார்.
இந்த திடீர் அம்மா மகன் உறவே அந்த ஆட்டோ டிரைவரின் காதலுக்கு எப்படி எதிரியாகிறது என்று போகிறது.
இப்படிப் போகிற கதைகளில் நடித்திருப்பவர்களின் லிஸ்ட்டை எழுதினாலே அது இந்தப் படத்தின் திரைக்கதைக்கு ஈடான நீளத்தைக் கொண்டிருக்கும்.
அதனால் நான்கு கதைகளுக்கும் பொத்தாம் பொதுவாக வைத்துப் பார்த்தால், முதல் கதையில் மும்பை தாதாவாக வரும் நட்டி நடராஜின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது. இந்த முதல் கதையே அனைத்து கதைகளிலும் முதல் தரமான கதையாகவும் இருக்கிறது.
இரண்டாவது கதையில் வயதான தம்பதியாக வரும் பாரதிராஜா, வடிவுக்கரசியின் நடிப்பும் அபாரம். இது நாட்டில் அன்றாடம் நடக்கும் கதையாக இருக்க, அவர்களது நடிப்பும் சேர்ந்து நம்மைக் கதையுடன் கட்டிப் போடுகிறது.
மற்ற கதைகளில் வரும் ரியோ ராஜ் துளசி, சாண்டியின் நடிப்பும் மெத்தப் பொருத்தம்.
பிரதான கதையில் வரும் லவ்லின் கண்கள் பேசும் நடிப்பு லவ்லி. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்கிற ரீதியாக லவ்லினின் அம்மாவாக அவரது நிஜ அம்மா விஜி சந்திரசேகரே இலவசமாக நடித்துக் கொடுத்துவிட்டார் போலிருக்கிறது.
வழக்கமாக தன்னுடன் நடிப்பவர்களைக் கலாய்க்கும் யோகி பாபு, உணர்வுடன் கதை சொல்லியாக வருவது வித்தியாசமாக இருக்கிறது.
இதில் ஒரே ஒரு கதையைக் கையில் எடுத்துக் கொண்டே விளையாடியிருக்க முடியும் இயக்குநர் பிரிட்டோ ஜே.பியால். ஆனால் இத்தனைக் கதைகளையும் எடுத்துக்கொண்டு அவரும் சிரமப்பட்டு நம்மையும் பின் பாதியில் கொஞ்சம் சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்.
ஆனாலும் அவர் மேற்கொண்ட மெனக்கெடலுக்குத் தலை வணங்க வேண்டி இருக்கிறது.
மல்லிகா அர்ஜுன், மணிகண்டன் ராஜா ஆகியோரின் ஒளிப்பதிவும் , தேவ பிரகாஷ் ரீகனின் இசையும் அந்தக் கதைகளை தாங்கிப் பிடித்திருக்கின்றன.
நிறம் மாறும் உலகில் – கதை கதையாம் காரணமாம்..!
– வேணுஜி