November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பாக்யராஜ் தலைமையிலான எழுத்தாளர் சங்கம் என்னதான் செய்கிறது..?
October 1, 2019

பாக்யராஜ் தலைமையிலான எழுத்தாளர் சங்கம் என்னதான் செய்கிறது..?

By 0 875 Views

கே.பாக்யராஜைத் தலைவராகக் கொண்டுள்ளதால் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் பெயர் அடிக்கடி முக்கியச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. காரணம், அவ்வப்போது எழும் கதைப் பஞ்சாயத்துகளில் நடுநிலைமையோடு அவர் பெற்றுத் தரும் நியாயங்கள்.

ஆனால், அந்தச் சங்கத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கின்றனவா..? “இல்லவே இல்லை…” என்கிறார் ‘அனிதா பத்மா பிருந்தா’ என்ற படத்தை இயக்கும் ஏ.எல்.சூர்யா. 

இதே டைட்டிலில் இவர் பெற்ற சினிமா அனுபவங்களைத் தொகுத்து நூலாகவே வெளியிட்டிருக்கிறார். அந்த நூல் பரபரப்பாக விற்பனையும் ஆகி வருகிறது. அந்தக் கதையை இப்போது படமாக்கும் முயற்சியிலிருக்கும் சூர்யா, கதை, திரைக்கதை, வசனமெழுதி இயக்கித் தயாரித்து இசையமைத்து, நாயகனாக நடித்து என்று ஒளிப்பதிவைத் தவிர அத்தனைப் பொறுப்புகளிலும் தன்னைப் பொருத்திக்கொண்டு இயங்கி வருகிறார்.

இந்நிலையில் அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்பதால் முறையாக அதற்கென்று இருக்கும் சங்கங்களில் உறுப்பினராகிவிட வேண்டும் என்ற நியாயமான ஆசையில் முதலில் கம்பெனியையும், டைட்டிலையும் பதிவு செய்தார். அடுத்து மேற்படி கதாசிரியர் சங்கத்தில் உறுப்பினராகிவிட முயற்சி செய்தார்.

அதன் விளைவாக அந்த சங்கப் பொறுப்பாளர்கள் அவரிடம் உறுப்பினர் சேர்க்கைக் கட்டணமாக ரூ.7,000 வரைவோலை எடுத்துத் தரச் சொல்லியிருக்கின்றனர். இவரும் எடுத்துத் தர, ஆறு மாதமாக அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையாம்.

ஒருமுறை பலமுறை என்று சென்று வந்ததில் அலைச்சல்தான் மிச்சமானதே தவிர, அங்கிருப்பவர்கள் பொறுப்பாக பதில் சொல்லவில்லையாம். வெறுத்துப் போன சூர்யா ஒருகட்டத்தில் வெகுண்டு “மீடியாவுக்கு இந்த விஷயத்தைக் கொண்டுபோனால்தான் நீங்கள் முறைப்படி இயங்குவீர்கள் போலிருக்கிறது..!” என்று சொல்ல “உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள்…” என்று பதில் வந்திருக்கிறது.

“ஆரம்பமே இப்படி என்றால் இவர்களை நம்பி எப்படி பிரச்சினைகளை முன்வைப்பது..? என்னைப் போல் இன்னும் எத்தனைப் பேர் உறுப்பினராக முடியாமல் காத்துக் கொண்டிருக்கின்றனரோ..?” என்று அங்கலாய்க்கிறார் சூர்யா.

நீதிமான் கே.பாக்யராஜிடம் இவர் இந்தக் கோரிக்கையையும் மீடியாக்கள் மூலம் இப்போது பஞ்சாயத்தாகவே வைக்கிறார். என்ன செய்யப் போகிறார் கே.பாக்யராஜ்..?