படத்தின் தலைப்பையும், இதற்கான புகைப்படங்களையும் பார்த்துவிட்டு “இந்தப்படத்துக்கெல்லாம் விமர்சனம் அவசியமா..?” என்ற கேள்வி எழலாம். படம் பார்க்கும்வரை அதே நினைப்புதான் இருந்தது. ஆனால், பார்த்து முடித்தவுடன் ஏற்பட்ட விளைவு வேறு… மேலே படியுங்கள்..!
படம் எப்படிப்பட்டது என்று தலைப்பிலேயே ‘வெட்டு ஒன்று, துண்டு இரண்டு…’ என்று வீச்சரிவாள் வீசியதைப் போல சொல்லி விட்டார் இயக்குநர் ‘நாகா’ என்கிற நாகராஜ். (நாகா என்ற பெயரிலும் நாகராஜ் (தினந்தோறும்) என்ற பெயரிலும் ஏற்கனவே இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர் வேறு… வேண்டுமானால் இவரை ‘வன்முறை பகுதி’ நாகா என்று இனி கொள்ளலாம்..!)
வன்முறை என்றாலே வட சென்னைக் கதைகள் வரும் வரை அது மதுரை… இன்னும் டீப்பான வன்முறை என்றால் தேனிதான் என்பது சினிமா சொல்லும் ரத்த சரித்திரம். அப்படி அந்தப் பகுதியில் நடந்த ஒரு கோபமும், துரோகமும் நிறைந்த கதைதான் இந்தப்படம்.
ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொள்வதாகச் சொல்லி ஒரு கிராமத்தில் ஆரம்பிக்கும் படத்தில் அதற்கு பக்கத்து கிராமத்தில் சொத்துக்காக அண்ணனைக் கொலை செய்த தம்பி (கே.ஆர்.ஜெய்மாரி) ஜெயிலிலிருந்து வெளியே வர, அவரைக் கொலை செய்யும் முயற்சியில் அவர் கொன்ற அண்ணனின் மகன்கள் (மனோகரா, ராஜா) ஈடுபட்டு ஜெயிலுக்குப் போகும் காட்சிகள் இடம்பெறுகின்றன.
இதற்குப் பின்னான ஹீரோவின் அறிமுகத்தில் மேற்படி முதல் கிராமத்தில் ‘மணிகண்டன்’ என்ற புதுமுகம் கரடுமுரடாக அறிமுகம் ஆகிறார். நாள் முழுதும் குடிப்பதும், பெண்களைக் கிண்டல் செய்வதும், வாய்த்தகராறு முற்றி அடிததடியில் ஈடுபடும் வெட்டி ஆபீசராக இருக்கும் இவரது அலப்பறையினாலேயே மேற்படி இரண்டு கிராமங்களுக்கும் பொதுவான கோவிலில் திருவிழாவே நடைபெறாமல் இருப்பது தனிக்கதை.
என்ன செய்தும் திருந்தாத இவருக்குத் திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவார் என்று நினைத்து அவரது தாய் ‘திண்டுக்கல் தனம்’ பக்கத்து ஊர் மனோகரா, ராஜா சகோதரர்களின் தங்கையைப் (ரபீஸா ஜாபர்) பேசி முடிக்கிறார்.
அதுவரை குடியும், கும்மாளமுமாக இருந்த மணிகண்டன், ரபீஸாவைக் கண்ட மாத்திரத்திலேயே குடியும், குடித்தனமுமாக வாழ ஆசைப்பட்டு திருந்த நினைக்கிறார். ஆனால், அந்தப் பக்கத்தில் அண்ணன், தம்பி செய்த பாவச் செயலும், இந்தப் பக்கம் இவர் செய்த பாவச் செயலும் இவர்களின் நல்வாழ்வுக்கு எப்படி பாதகமாகின்றன என்பதுதான் கதை.
இதைவிட இந்தக் கதையை சுருக்கமாக சொல்ல முடியாது. இதைவிட இலகுவாக ஒரு படத்தை எடுக்கவும் முடியாது.
படத்தின் சிறப்பம்சம் நடிக, நடிகையர். ‘திண்டுக்கல் தனம்’ தவிர வேறு யாரையும் நமக்குத் தெரியாது. ஆனால், படம் முடிந்து வெளியே வரும்போது அனைவரும் தெரிந்த முகங்கள் போலாகிறார்கள். ஹீரோவும், ஹீரோயினும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறார் இயக்குநர்.
அடுத்த அம்சம் தெளிவான திரைக்கதையும், சினிமாத்தனமில்லாத இயல்பான இயக்கமும். படத்தை அந்தந்த ஊர்களுக்கே சென்று நேரில் பார்ப்பதைப் போலவே இருப்பது மிகப்பெரிய பலம். அந்த வகையில் சினிமாவில் எந்தப் பயிற்சியும் எடுக்காத ‘இயக்குநர் நாகா’வைப் பாராட்டியே ஆக வேண்டும்.
ஒளிப்பதிவும் (டி.மகேஷ்) இசையும் கூட சினிமாத்தனமில்லாமல் இயல்பு நிலையிலேயே பயணித்திருக்கின்றன.
வளமான பட்ஜெட்டும், இன்னும் கொஞ்சம் ‘கிரியேட்டிவிட்டி’யும், முகம் தெரிந்த நடிகர்களும் இருந்திருந்தால் இன்னொரு ‘பருத்தி வீரன்’ அல்லது ‘சுப்ரமணியபுரம்’ போல் வந்திருக்க வேண்டிய படம்.
ஆனால், ரசிகர்களை முட்டாள்களாக நினைத்து எடுக்கப்படும் பிரமாண்டப்படங்களுக்கு மத்தியில் ரசிகர்களை ஏமாற்ற நினைக்காமல் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் சிறப்பானதுதான். தலைப்பு படத்தின் குறைகளுள் தலையாயது.
தீபாவளிக்கு ஐந்தே நாள்கள் முன்பு திரைக்கு வருவதே இதன் ‘தில்’. அந்த ஐந்து நாள் சரியாக ஓடினாலே இவர்களுக்கு அது ‘ஆஸ்கர் விருது’ கிடைத்ததைப் போல…
வன்முறை பகுதி – எந்த எதிர்பார்ப்பும் வைக்காமல் வைக்காமல் போனால் ஏமாற்றாத படைப்பு.
– வேணுஜி