உலகமெல்லாம் வலிமை அப்டேட்ஸ் கேட்டுக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஆக்ஷன் ட்ரீட்டாக வந்திருக்கும் படம். ஆனால் அஜீத்துக்கு ஆக்ஷனைக் காட்டிலும் சென்டிமென்ட் நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது என்பதால் அதையும் கலந்து ஒரு கதை பின்னி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். படம் அந்த அளவுக்குப் பின்னியிருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.
வலிமையாக வாழ்ந்தால் நாம் குற்றமே செய்தாலும் தவறாகாது என்று நினைக்கும் வில்லன், அவனைக் குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டுமானால் அவனை விட வலிமை பொருந்தி இருக்க வேண்டிய ஹீரோ என்று ஆரம்பித்து முதல் பாதியை எழுதி இருக்கிறார் வினோத்.
கொலம்பியாவில் ஆரம்பிக்கும் படம் அங்கிருந்து போதை மருந்துகள் கண்டெய்னரில் ஏற்றப்பட்டு கப்பல் வரும் வழியில் புதுச்சேரி கடலில் திருட்டுத் தனமாக சில மூட்டைகள் இறக்கப்பட்டு அவை சென்னைக்கும் கடத்தப்படுகின்றன.
இதை மோப்பம் பிடித்து போலீஸ் அங்கு செல்வதற்குள் இன்னொரு கும்பல் அவற்றைக் களவாடி விட, அதைப்பிடிக்க போலீசுக்கு துப்பு இல்லை. அதாவது எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. சென்னை போலீஸ் கமிஷனர் செல்வா எப்படி சென்னையைக் காப்பாற்ற போகிறோம், இதற்கு திறமையான ‘ஒரு’ போலீஸ் வேண்டும் என்று நினைக்கிறார். ஆமாம்… நீங்கள் நினைப்பது சரிதான். அந்த ‘ஒரு’ போலீஸ் அஜீத்தேதான். அவரோ மதுரையில் ரவுடிகளை பெண்டு எடுத்துக் கொண்டிருக்கிறார்.
மதுரையில் பெண்டு எடுப்பவரை டெபுடேஷனில் எடுத்து அவரை வைத்து சென்னையை செல்வா எப்படி சுத்தமாக்குகிறார் என்று விரட்டி விரட்டி ( வில்லன்களைத்தான் ) சொல்லி இருக்கிறார்கள்.
தவறில்லை. ஆனால் அதைக் கொஞ்சம் புதிய களத்தில் சொல்லி இருக்கலாம். இதுவரை பார்த்த கதையையே பார்ப்பதில் பார்வையாளருக்கான புதிய அனுபவம் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை.
இதை இயக்குனரும் உணர்ந்தே போதை மருந்து எப்படிக் களவாடப் படுகிறது, அதற்கான தொகையைப் பெற என்ன செய்கிறார்கள், போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி அது எப்படி விநியோகம் ஆகிறது என்பதை கொஞ்சம் புதிய ரூட்டில் கள ஆய்வு ( ?) நடத்தி சொல்லி இருக்கிறார் இயக்குநர். அந்த நெட்ஒர்க் அசத்தலாக இருக்கிறது.
அதேபோல் போதை மருந்துக் கடத்தல் என்பது கோடிகள் புழங்கும் வேலை. ஆனால், தாலிச் செயின் அறுப்பது சில்லரைத் திருட்டு. அதைச் செய்பவன் இதைச் செய்ய மாட்டான் என்று போலீஸ் காலா காலமாக கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மாற்றி புதிய ரூட்டில் சிந்திக்கச் சொல்கிறது படம் – அதாவது அப்படிச் சிந்திக்கச் சொல்கிறார் அஸிஸ்டன்ட் கமிஷனர் அஜீத்.
இப்படிப் பரபரவென்று பறக்கிறது முதல் பாதிப்படம். அதுவும் நம்ம ஹீரோ அடிப்படையில் ஒரு பைக் ரேஸர் ஆக இருக்க, வில்லனும் அதிரடி பைக் ரேஸராக இருக்க, ரேஸிங், சேஸிங் என்று பறந்து பறந்து இண்டர் வெல் வந்து விட , அதில் வில்லனை ஹீரோவும் ஜெயித்து விட, கிட்டத்தட்ட படம் முடிந்தே விட்ட பீலிங்…
எப்படித்தான் இரண்டாவது பாதி எப்படி நகரும் என்ற கேள்வி நமக்கு எழுவதைப் போலவே ஒரு கேள்வி எச்.வினோத்துக்கும் எழுந்திருக்கும். அஜீத்துக்குதான் குடும்ப சென்டிமென்ட்டும் ஒர்க் அவுட் ஆகுமே என்று அதை வைத்து இரண்டாவது பாதியை ‘பேட்ச் அப்’ செய்திருக்கிறார் அவர்.
அதனால், ஆரம்பித்த லைனைக் கொஞ்சம் மாற்றி எல்லா வலிமையிலும் சிறந்தது தாய்ப் பாசம்தான் என்று படத்தை முடிக்கிறார்.
என்னைத் ‘தல’ என்று அழைக்காதீர்கள் என்று சொல்லி விட்டாலும் அஜித்தைத் திரையில் பாத்தால் ‘ தல ‘ என்றே விளிக்க ஆர்வம் தோன்றுகிறது. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அவரை மிஞ்ச யார் இருக்கிறார்கள்..? அவரது நிஜ ஹீரோயிஸமான பைக் ரேஸிங்கையே படத்தில் இயக்குனர் வைத்துவிட, அதில் ஒன்றி, கற்பனைக் காட்சிகளையும் உண்மையாகவே எண்ணி ரசிக்கிறோம். என்ன ஒன்று, அந்த களையான முகத்தில் மாற்றி மாற்றிக் காட்டும் பாசம், கண்டிப்பு, கோபம் உள்ளிட்ட அத்தனை உணர்ச்சிகளுக்கும் ஒரே மாடுலேஷனில் அவர் பேசிக் கொண்டிருப்பதுதான் ஒட்டாமல் ஒலிக்கிறது.
அவருக்கு ஜோடி தேவைப்படாத திரைக்கதையாக இருக்க, ஆனால், அந்த வெறுமை வந்து விடக் கூடாதென்று ஹூமா குரேஷியைப் போட்டிருக்கிறார்கள். அவரும் ஒரு பெண் காவல் அதிகாரியாக வந்து ஒரு ‘தல’யாக அஜீத்தைக் காதலித்துக் கொண்டிருக்கிறார்.
அஜீத்தின் அம்மாவாக சுமித்ரா பொருத்தமாக இருக்கிறார். அவரது இளைய வயது கேரக்டருக்கு சுமித்ராவின் நிஜ மகள் உமாவையே பயன்படுத்தியிருப்பது அதைவிடப் பொருத்தம். ஆனால், கணவன் இல்லாத நிலையில் அவரது மூன்று மகன்களில் அஜீத்தை மட்டுமே அவர் சரியாக வளர்க்க, மற்ற இருவரும் வீணாகப் போனது ஏன் என்று தெரியவில்லை.
அஜீத்தின் அண்ணனாக வரும் அச்யுத் குமார் ஒரு குடிகாரர். தம்பியோ வழி மாறிப் போகிறார். அதேபோல் அஜீத்தின் சகோதரியைக் கட்டிக் கொடுத்த வீட்டில் இவர்களை எப்போதும் இழிவாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் குடும்ப அமைப்பில் ஒரு ஒட்டுதலே ஏற்படவில்லை.
மெயின் வில்லனாக வரும் கார்த்திகேயாவுக்கு ஆஞ்சநேயா உடற்கட்டு. அதில் டேட்டூ வேறு போட்டுக்கொண்டு அசத்தலாக இருக்கிறார். படித்த வேலையில்லாத இளைஞர்களை மூளைச்சலவை செய்து தவறான பாதைக்குத் திருப்பி விடுவதில் பயமுறுத்துகிறார்.
அஜீத்தின் தம்பியாக வரும் ராஜ் அய்யப்பாவுக்கு சொல்லத்தக்க வேடம். ஒரு பொறியாளராக இருந்தும் உருப்படியான வேலை கிடைக்காமல் அவமானப்படும் அவர் இன்றைய பொறியியல் பட்டதாரிகளைக் கண்முன் நிறுத்துகிறார். தவறான வழிக்குப் போனாலும் பாசத்துக்குக் கட்டுப்படுவதில் நெகிழ வைக்கிறார்.
போலீஸுக்குள்ளேயே இருக்கும் கறுப்பு ஆடுகளான சத்யா சுந்தரையும், தினேஷ் பிரபாகரையும் பார்த்த உடனேயே நமக்குத் தெரிந்து விடுகிறது அவர்கள்தான் சதிக்கு உடந்தை என்று. ஆனால், அது போலீஸ் கமிஷனருக்கும், அஜீத்துக்கும் கூட கடைசியில்தான் தெரிகிறது. அவ்வளவு வீக்கான அப்பாவிகளா இருவரும்..?
போதை மருந்துப் பழக்கம் நம் மண்ணிலும் வேரூன்றி விட்டதென்னவோ உண்மைதான். ஆனால். இப்படிப் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் அதை பிரமாண்டமாகச் சொல்லி சொல்லியே சினிமாக்காரர்கள் இன்னும் வளர்த்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.
முன் பாதியிலும், பின் பாதியிலும் வரும் ஒன்றரை மணிநேர பரபர ஆக்ஷன் காட்சிகளில் திலீப் சுப்பராயன் மலைக்க வைத்திருக்கிறார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு இருந்தும் பல காட்சிகள் ‘பலே’. சில காட்சிகள் செல்போனில் எடுத்ததைப் போல் இருப்பது ஏனோ..? யுவன் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்து விட்டன.
வலிமை – இனி வசூல் அப்டேட்டைதான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்..!
Related