January 28, 2022
  • January 28, 2022
Breaking News
December 26, 2019

வி1 திரைப்பட விமர்சனம்

By 0 990 Views

‘மர்டர் மிஸ்டரி’ என்றழைக்கக்கூடிய கொலையும் தொடர்பான விசாரணைப் படங்களுக்கு என்றுமே ஒரே ஒரு ஒன் லைன்தான். ‘ஒரு கொலை, அதனை யார் செய்தார்கள் என்ற விசாரணை…’ அவ்வளவுதான்.

ஆனால், அந்த விசாரணை தரும் திடுக்கிடும் திருப்பங்களும், நாம் யாரை கொலையாளி என்று யூகிக்கிறோமோ அவர்கள் இல்லாமல் நாம் எதிர்பார்க்காத ஒரு நபர் கொலைக்குற்றவாளியாக இருப்பதும், கொலைக்கான காரணமும் மட்டுமே இப்படியான படங்களை வேறுபடுத்திக் காட்ட உதவும் சாத்தியங்கள்.

அப்படி இந்தப்படத்திலும் லிவிங் டுகெதர் ஜோடிகளாக லிஜேஷும், காயத்ரியும் இருக்க, ஓர் இரவில் காயத்ரி கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலையைச் செய்தது யார் என்ற விசாரணை லிஜேஷில் தொடங்கி மூன்று பேர்களிடம் நீள்கிறது.

விசாரணையை புதுமுகம் ராம் அருண் காஸ்ட்ரோ ஏற்கிறார். அவரே காவல்துறை அதிகாரியாகவும், தடயவியல் நிபுணராகவும் வருகிறார். அவரது தோற்ற வலு அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்கிறது. ஆனால், அவருக்கு இருக்கும் ‘இருட்டைக் கண்டால் பயம்…’ என்ற ஃபோபியா அவருக்கு பலவீனத்தையும், கதைக்கு பலத்தையும் சேர்க்கிறது.

எல்லா விசாரணை அதிகாரிகளையும் போலவே அவருக்கும் ஒருகட்டத்தில் மேலதிகாரிகளிடம் இருந்து விசாரனையில் இருந்து விடுவிக்கப்படும் நெருக்கடி எழ, உண்மைக் குற்றவாளி தப்பித்துவிடக் கூடாதென்ற காவல் உணர்ச்சியுடன் தனக்கெதிரான நடவடிக்கை மற்றும் போபியாவுடன் போராடி எப்படி கடமையைக் காப்பாற்றுகிறார் என்பது தொய்வில்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

முகம்தான் புதிதாக இருக்கிறதே தவிர காஸ்ட்ரோவின் உணர்வுகளும், நடிப்பும் அவரை ஒரு அனுபவ முகமாகவே காட்டுகின்றன. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. தவிரவும் வெற்றியடைந்த ஹீரோக்களுக்கே பல படங்கள் கடந்த நிலையில்தான் போலீஸ் வேடங்கள் கிடைக்கும் என்றிருக்க இவருக்கு முதல் படத்திலேயே அப்படி அமைந்திருப்பதும் சென்டிமென்டலான அதிர்ஷ்டம்.

அவருடன் பெண் விசாரணை அதிகாரியாக வரும் விஷ்ணுப்ரியா பிள்ளை பெண் போலீஸின் லட்சணங்களுடன் இருந்தாலும் பேசும் தமிழ் அவர் வேற்றுமாநில போலீஸ் போலவே காட்டுகிறது. நாயகி இல்லாத குறையையும் தீர்ப்பதில் விஷ்ணுப்ரியாவின் பங்கு இருக்கிறது. 

லிஜேஷ், காயத்ரி பாத்திரங்களுடன் பொருந்தியிருக்கிறார்கள். காயத்ரியின் அப்பாவாக வருபவரும் கவனிக்க வைக்கிறார். காமெடி இல்லாத குறையை காயத்ரியை ஒரு தலையாகக் காதலிக்கும் லிங்கா தீர்த்து வைக்கிறார்.

ரோனி ரெபேலின் பின்னணி இசையும், கிருஷ்ணசங்கர் டி.எஸ்-ன் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்றவகையில் ஏற்றம் பெற்றிருக்கிறது. இந்த ஜேனர் படங்களுக்கு படத்தொகுபாளர் பங்கு முக்கியத்துவம் பெறும். அந்த வகையில் சி.எஸ்.பிரேம்குமார் தேவையைக் கருத்தில் கொண்டு படத்தைக் கத்தரித்திருக்கிறார்.

‘மெட்ராஸ்’, ‘குற்றம் கடிதல்’, ‘வட சென்னை’ படங்களில் நடிகராக வந்து அசத்திய பாவெல் நவகீதன்தான் இந்தப்பட இயக்குநர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு இயக்குநருக்குள் ஒரு நடிகன் இருப்பது புதிதில்லை. ஆனால், ஒரு நடிகருக்குள் இயக்குநர் இருப்பது அவர் வெற்றிமாறன் போன்ற திறமை மிக்க இயக்குநரின் பாசறையில் இருந்து வந்ததால் இருக்கலாம்.

எடுத்த கதையைத் திறம்படக் கையாண்டிருப்பதுடன் இந்தத் த்ரில்லருக்குள் ஒரு சமூக அவலமான சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தொட்டு ஒரு அபாய சங்கையும் அலற விட்டிருக்கும் நவகீதனைப் பாராட்டலாம்.

வி1 – விழிப்புணர்வு தருவதில் முதலிடம்..!