November 22, 2024
  • November 22, 2024
Breaking News
July 1, 2018

அறிஞர் அண்ணாவை நீங்கள் எம்.ஜி.ஆர் கட்சியா என்றார்கள் – சைதை துரைசாமி

By 0 1234 Views

‘உலக எம்.ஜி.ஆர் பேரவை’ பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

விழா பற்றிய தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உலக எம்ஜிஆர் பேரவை முக்கிய பிரதிநிதிகளான முருகு பத்மநாபன், சைதை துரைசாமி, ஐசரி கணேஷ், நடிகை லதா கலந்து கொண்டு பேசினர்.

முருகு பத்மநாபன் –

“கடந்த ஆண்டு ஃபிரான்ஸில் எம்.ஜி.ஆர் பக்தர்களின் மாநாடு நடத்தினோம். அதில் சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் புரட்சித் தலைவரின் பக்தர்களை ஓரணியில் இணைப்பது பற்றி நிறைய பேர் வேண்டுகோள் வைத்தனர். அதற்கு செவி சாய்த்து துவங்கப்பட்டதுதான் ‘உலக எம்ஜிஆர் பேரவை’. அதில் 11 பேர் உயர்மட்ட உறுப்பினர்களாக இருக்கிறர்கள்..!”

நடிகை லதா –

“உலகம் முழுக்க எத்தனையோ நாடுகளுக்குஸ் சென்றிருக்கிறேன். எம்ஜிஆர் பக்தர்கள் அங்கெல்லாம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைப்புகளைத் துவங்கி, சேவைகளைச் செய்து வருகிறார்கள் . எந்த அரசியல் கலப்பும் இல்லாமல், எம்ஜிஆர் மீது உள்ள அன்பால், பக்தியால்தான் இந்த மாநாடு நடக்க இருக்கிறது. உலகம் முழுக்க இருந்து பலரும் வந்து கலந்து கொள்ள இருக்கிறார்கள்..!”

மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி –

“வரலாற்றில் ஒரு சிலர் தான் சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள். சிலர் சரித்திரத்தை எழுதுகிறார்கள். ஆனால் சரித்திரத்தை புரட்டி போட்டவர் எம்ஜிஆர் தான். சினிமாவில் ஓய்வு பெறும் வரை நாயகனாகவே நடித்து வெற்றி வாகை சூடியவர். தான் மறைந்தபோது கூட முதல்வராகவே இருந்து மறைந்தவர். இந்த சிறப்பு உலகில் எவருக்குமே கிடையாது.

அவருடைய சினிமாக்கள் எல்லாமே ஆய்வுக்குரியது. படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பாமர மக்களுக்கும் புரியும் வகையில் தன் படங்களில் எடுத்துக் காட்டியவர். அதனால்தான் அவரை ‘வாத்தியார்’ என்று அன்போடு மக்கள் அழைக்கிறார்கள். திமுக கொடியை கூட ‘எம்ஜிஆர் கொடி’ என்றே அழைத்தனர். அறிஞர் அண்ணாவைக் கூட “எம்ஜிஆர் கட்சியா நீங்கள்..?” என்று கேட்கும் அளவுக்கு இருந்தது அவரின் புகழ்.

Ulaga MGR Peravai

Ulaga MGR Peravai

புரட்சித்தலைவர் மறைந்து 30 ஆண்டுகள் கழித்து, இன்றளவும் எம்ஜிஆர் பிறந்தநாள், நினைவு நாளில் மக்கள் பயன்பெறும் வகையில் எம்ஜிஆர் பக்தர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ராமகிருஷ்ண மடம், ரோட்டரி கிளப், ஒய்எம்சிஏ எப்படி செயல்படுகிறதோ அந்த வகையில் இந்த பேரவையும் செயல்பட இருக்கிறது.

புரட்சி தலைவர் பெயரில் இலவச கல்வி, ரத்ததான வங்கி என பல நல்ல விஷயங்களை செய்ய இருக்கிறோம். தன் வாழ்நாள் முழுக்க நாட்டு மக்களை பற்றியே சிந்தித்து வாழ்ந்து, மறைந்தவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் அவர்களைப் பற்றிய ஆய்வு செய்ய அரசு 5 கோடி ஒதுக்கியிருக்கிறது. எம்ஜிஆர் வாழ்வியல் பண்புகள் பள்ளி, கல்லூரிகளில் இடம் பெற வேண்டும்..!”

ஐசரி கணேஷ் –

‘உலக எம்.ஜி.ஆர் பேரவை மாநாட்டுக்கான ஏற்பாடுகளை சைதை துரைசாமி, ஏசி சண்முகம், விஐடி விஸ்வநாதன், மரியஸீனா ஜேப்பியார், நாஞ்சில் வின்சென்ட், குறிஞ்சி வேந்தன், முனிரத்னம், முருகு பத்மனாபன், நடிகை லதா உட்பட 11 பேர் கொண்ட குழு செய்து வருகிறது.

தமிழக ஆளுநர் மாண்புமிகு பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பிக்க இருக்கிறார். உலக நாடுகளில் இருந்து மலேசிய துணை பிரதமர், மொரிஷியஸ் துணை தலைவர், இலங்கை கல்வி அமைச்சர் ஆகியோரும் தமிழகம் முழுக்க இருக்கும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.

தலைவருடன் நடித்தவர்கள், அவர் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்கள் என பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி, ஜாக்குவார் தங்கம் சண்டைக்கலை நிகழ்ச்சி, புரட்சி தலைவர் பற்றிய பட்டிமன்றம், பல்சுவை நிகழ்ச்சிகள், கவியரங்கம், மணவை மாணிக்கம் எழுதிய புத்தகம் வெளியீடு, கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு என காலையில் இருந்து இரவு வரை விழாவை கொண்டாட இருக்கிறோம்.

தமிழக ஆளுநர் விழா நினைவுத் தூணை திறந்து வைக்கிறார். அடுத்த ஆண்டு மலேசியாவில் நடக்கும் இந்த மாநாடு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடக்கும். இந்த விழாவுக்குக் கட்டணம் இல்லை என்பதுடன் அத்தனை பேருக்கும் அறுசுவை உணவும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது..!”