October 26, 2021
  • October 26, 2021
Breaking News
October 13, 2021

உடன்பிறப்பே திரைப்பட விமர்சனம்

By 0 22 Views

பாசமலர் காலம் தொட்டு கிழக்குசீமையிலே வரை அண்ணன் தங்கை கதைகள் நிறைய பார்த்தாயிற்று. தன் பங்கிற்கு தானும் ஒரு பாசக்கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் இரா. சரவணன்.

நீங்கள் நான் எல்லோரும் எதிர்பார்க்கிற அதே லைன் தான்.  அண்ணனை விட்டு அகல விரும்பாத தங்கை. தங்கையை தனியே விட்டு விடாத அண்ணன் என்று சசிகுமாரும் ஜோதிகாவும் வாழ்ந்து வர ஜோதிகாவுக்கு சமுத்திரக்கனியுடன் திருமணம் முடித்து வைக்கிறார் சசிகுமார். அப்புறம் அதேதான்… சசிகுமாருக்கும் சமுத்திரகனிக்கும் ஒத்துவராத சூழல் ஏற்பட்டு அண்ணன் தங்கை பாசத்தை விரிசல் விழுகிறது.

அந்த விரிசல் சரியாகி இருவரும் இணைய முடிந்ததா என்பதே கதை.

சசிகுமாருக்கும் சமுத்திரகனிக்கும் அப்படி என்னதான் பகை..? அடிப்படையில் இருவரும் நியாயவாதிகள் தான். ஆனால் சசிகுமார் தன் கண்முன்னே நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்பார். சமுத்திரகனியும் எந்த நியாயத்துக்கும் சட்டப்படிதான் முடிவு காண வேண்டும் என்பதால் அதட்டிக்கூட கேட்க மாட்டார்.

தட்டிக்கேட்கும் கேரக்டரில் சசிகுமார் அருமையாக பொருந்துகிறார். பல இடங்களில் கை நீட்டுவதால் அவரைப் போட்டுத்தள்ள வெளியூரிலிரந்து ஒரு கும்பல் அவரது கிராமத்துக்குள் நுழைந்து அவரை பின்தொடர அவர்கள் வந்த ஜீப் ஒரு நாய் மீது மோதி விடுகிறது. தன்னைத்தான் தாக்க வந்திருக்கிறார்கள் என்று தெரியாத சசிகுமார் ஒரு நாய் மீது மோதியதற்காகவே அவர்களை நாயடி பேயடி அடித்து போட்டு விட்டுப் போகிறார். 

இன்னொரு பக்கம் சமுத்திரக்கனியும் அகிம்சா வாதியாக தன்னிடம் படிக்கும் மாணவர்களை கூட கை நீட்டி அடிக்காத ஆசிரியராக வருகிறார். 

ஆனால் படத்தின் அடிநாதம் அண்ணன் தங்கை பாசம் என்பதால் சசிகுமாரின் தங்கையாக வரும் ஜோதிகாவே படத்தில் முதன்மை பாத்திரமாக இருக்கிறார். 

அவருக்கு இது ஐம்பதாவது படம் என்பது ஹைலைட்.

இதுவரை நாம் படங்களை பார்த்து இருக்கும் ஜோதிகா இயல்புக்கு சற்று அதிகமாகவே உணர்ச்சிகளை பிரதிபலிக்க கூடிய பாத்திரங்களில் வந்திருக்கிறார். அதுவே அவரது தனி அணியாகவும் இருந்து வந்திருக்கிறது.

ஆனால் இந்தப்படத்தில் மிகவும் அடக்கி வாசிக்கக் கூடிய மென்மையான பாத்திரத்தில் மிளிர்கிறார். பாசத்தை காட்ட பக்கம் பக்கமான வசனங்கள் அவருக்கு இல்லை. ஆனால் பார்வையிலும் செயலில் அந்த பாசத்தை காட்ட வேண்டிய சவால் அவருக்கு இருக்க, அண்ணனை பிரிய நேர்ந்த சோகத்தையும் அதே நேரத்தில் கணவனின் வார்த்தையை மீறாத பாத்திரத்திலும் உணர்வு குவியலாக காட்சியளிக்கிறார்.

அண்ணனிடம் பேசமுடியாத சோகத்தில் இருக்கும் அவர் பல வருடங்கள் கழித்து தன் மகனை விட அதிகம் நேசித்த அண்ணன் மகன் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறான் என்று தெரிய வரும் போது அவனைப் பார்க்க காடு மேடெல்லாம் ஓடிவரும் கட்டம் அபாரம். அந்த பாசம் சற்று மிகை போல் தெரிந்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் ஒரு பிளாஷ்பேக் அதற்கு நியாயம் சேர்க்கிறது.

பல வருடங்கள் கழித்து தான் வாழ்ந்த வீட்டுக்கு வரும் சமயத்தில் ஜோ முகத்தில் தெரியும் அந்த பிரகாசம் ஜோர்.

ஜோவின் அண்ணியாக வரும் சிஜா ரோஸின் பாத்திரம் நேர்த்தியான படைப்பு. இப்படி ஒரு பெண் ஒரு குடும்பத்திற்கு கிடைத்தால் அந்த குடும்பத்தில் எந்த பிரச்சனயும் வராது.

பல விதமான பாத்திரங்களில் இதுவரை நாம் பார்த்திருக்கும் கலையரசன் இதில் முக்கிய வில்லனாக இருக்கிறார். அவரது பாத்திரத்தின் தொடக்கம் இத்தனை பெரிய வில்லனாக அவர் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்க முடியாமலே இருக்கிறது. அவரது இல்லத்துக்கு முடிவு கட்டும் இடம் பாபநாசம் படத்தை நினைக்க வைக்கிறது.

என்ன உறவு என்று தெரியாமல் வந்தாலும் சிறிய வயதிலிருந்தே சசிகுமாரின் வீட்டில் வளரும் சூரி நிறைய சிரிக்க வைக்கிறார். அதேநேரத்தில் பசியுடன் வரும் அவரை ஒருவாய் சோறு தின்ன விடாமல் சட்டம் துரத்தும் இடம் நெகிழ வைக்கிறது.

சசிகுமாரின் மகனாக சித்தார்த்தும் ஜோதிகாவின் மகளாக நிவேதிதா சதீஷும் நடித்திருக்கிறார்கள். அவர்களின் திருமண உறவே பகைமையை முடிக்க உதவும் கருவியாக அமைய ஆனால் அங்கிருந்து ஒரு பிரச்சனை கிளம்புவது எதிர்பாராத திருப்பம்.

இமானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் தன்மையை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவு பாசக்கதைக்கு பாந்தமாக அமைந்திருக்கிறது. 

சென்டிமென்ட் சொல்லும் கதைகள் சினிமாவில் அருகிவிட்டதே என்ற நினைப்பவர்களுக்கு சிறப்பு செய்திருக்கும் இந்தப் படம், உறவுகள் அருகிவரும் இந்த காலகட்டத்தில் உயிர்ப்புடன் ஒரு ஆவணமாக அமைந்தும் இருக்கிறது.

உடன்பிறப்பே – உறவுகளின் உயிர்ப்பே..!

– வேணுஜி