ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்து கடந்த வாரம் வெளியான ‘டிக் டிக் டிக்’ வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவியும் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
பட வெற்றிக்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் விழா நடக்க, அதில் ஆரவ் ரவி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தன் பிறந்த நாளைக் கொண்டாடினார்.
விழாவில் கலந்து கொண்ட எடிட்டர் மோகன், மோகன்ராஜா, ஜெயம் ரவி பேசியதிலிருந்து…
மோகன்ராஜா –
“டிக் டிக் டிக் குழுவின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. இந்தப் படத்தை 56 நாட்களில் முடித்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நிறைய நேரங்களில் ரவியின் உழைப்பு வீணாய் போய் விடுமோ என்று பயந்ததுண்டு. ரவியும் ஒரு கட்டத்தில் உண்மையான உழைப்பை நம்பணுமா என்று நினைத்த காலம் உண்டு. இருந்தும் எல்லா நேரங்களிலும் தன் உழைப்பைக் கொடுத்துக் கொண்டேதான் இருந்தான். அவனுக்குக் கிடைத்த வெற்றியாக இதை நினைத்துக் கொள்கிறேன்..!”
எடிட்டர் மோகன் –
“டிக் டிக் டிக் ஒரு நாயகனின் படம் அல்ல, ஒரு தொழில்நுட்ப கலைஞனின் படம். ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, தொழில்நுட்ப ரீதியில் படம் வெற்றி பெற்று விட்டது. இசையமைப்பாளர் இமான் இந்தி படங்களுக்கும் இசையமைக்க வேண்டும். கதைக்களத்தை உணர்ந்து அருமையாக இசையமைத்து இருக்கிறார்.
சக்தி சௌந்தர்ராஜன் வழக்கமான விஷயங்களை தள்ளி வைத்து விட்டு, நிறைய புதுமையை புகுத்தியிருக்கிறார். ‘மிருதன்’ படத்தில் நடித்தபோது அவனுக்கு முதுகுத் தண்டில் அடி பட்டது. அதன் பிறகும் இந்தக் கதையை கேட்டு இதில் நடிக்க ஒப்புக் கொண்டது அவன் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது..!”
ஜெயம் ரவி –
“உன் உழைப்பை கொடு, வெற்றி வரும்போது வரும்…’ என்பதுதான் என் குடும்பம் கற்றுக் கொடுத்த தாரக மந்திரம். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ரசிகர்கள் தான். நாம் என்ன கொடுத்தாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால்தான் வெற்றி.
ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்க்க காரணம் இயக்குனர் சக்தி. இந்தப் படத்தில் உங்களுக்கு ஜோடி இல்லை, ஒரு மகன் இருக்கிறான். உங்க மகன் நடிச்சா நல்லா இருக்கும் என்றார். கதைக்கு தேவை என்றால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று முடிவு செய்தோம்.
இமான் இவ்வளவு உயரத்துக்கு போனாலும் ரொம்ப தன்னடக்கம் உடையவர். எனக்கும் என் மகனுக்கும் மதன் கார்க்கி எழுதிய ‘குறும்பா…’ பாடல் காலத்துக்கும் என் நினைவில் நிற்கும். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் உழைப்பு அபரிமிதமானது. அவர்களின் உழைப்பைப் பார்த்த பிறகுதான் எங்களுக்கு நம்பிக்கையே வந்தது.
நான் ஹீரோ ஆனபோது என் அப்பா என் பட ஹோர்டிங்கை காரை நிறுத்தி 20 நிமிஷமாக பார்த்துக்கொண்டிருப்பார். அப்போது அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இப்போது என் மகன் ஆரவ் நடித்த குறும்பா பாடலை 2000 முறையாவது பார்த்திருப்பேன். அப்பா மகன் உறவு இப்போது புரிகிறது. எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது என் அண்ணன். நான் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருவதற்கு அவரும் ஒரு காரணமாக இருக்கிறார்..!”
இந்த விழாவில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன், இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, மாஸ்டர் ஆரவ் ரவி, விஎஃப்எக்ஸ் அருண், ஸ்டண்ட் மாஸ்டர் மைக்கேல், எடிட்டர் பிரதீப், கலை இயக்குனர் மூர்த்தி, ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.