வில்லன்களைக் கடவுள் அழிப்பதெல்லாம் லோக்கல் படங்கள் என்றால் தன் சொந்தப் பிரச்சினைக்காக கடவுள்களை ஆகாத வில்லன் கடவுள்களையே ஒவ்வொருவராக போட்டுத் தள்ளுவது ஹாலிவுட் ஸ்டைல்.
இதனால் வில்லனிடமிருந்து சக கடவுள்களையும், அவனிடம் சிக்கி இருக்கும் தன் பாதுகாப்பிலுள்ள அஸ்கார்டியன் குழந்தைகளையும் அந்தக் கடவுள்களில் ஒருவரான இடிக் கடவுள் தோர் காக்க முயல்வதுதான் இந்தப்பட லைன்.
இதை சீரியசாக சொன்னால் எங்கே ரொம்ப சீரியஸாக போய்விடுமோ என்று பயந்த (!) இயக்குனர் டைக்கா வைட்டிட்டி இந்த லைனைத் தன் சிக்னேச்சராகக் கொஞ்சம் காமெடியாகவே கையாண்டிருக்கிறார்.
தோராக கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். இந்த வரிசையில் இவர் தோராக வரும் நான்காவது படம் இது. எனவே இனி தோர் என்றால் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தான் என்று ஆனாலும் அவர் தோராக நடிக்கும் கடைசிப் படம் இது என்ற செய்தியும் வலம் வருகிறது. எப்படி இருந்தாலும் தேர் போன்ற பிரமாண்ட உடல் அமைப்பில் தோராக அவரைப் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.
அவருக்கே இன்ஸ்பிரேஷனாகவும் கடவுள் சபையில் தலைவராகவும் இருக்கும் மின்னல் கடவுளை (அந்த வேடத்தில் ரஸல் குரோவ்) வேலைக்கு ஆகாததால் அவர் ஆயுதத்தை வைத்தே போட்டுத் தள்ளும் காட்சி எதிர்பாராதது.
அதே மின்னல் கடவுள் சொடக்குப் போட்டு தோரின் உடையை அகற்ற, அவரது நிர்வாண நிலையைப் பார்த்து மின்னல் கடவுளின் நாயகிகள் மயங்கிச் சரிவதும், நிர்வாண தோரையே நகத்தைக் கடித்தபடி வெறித்துப் பார்ப்பதுவுமாக இயக்குனரின் குறும்பு ரசிக்க வைக்கிறது.
படத்தில் தோரின் காதலி டாக்டர் ஜேன் ஃபாஸ்டராக நடாலி போர்ட்மேன். அவரும் ஒரு தோராக இதில் வந்திருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்.
சின்ன வேடம்தான் என்றாலும் ரொமான்டிக் காமெடியான மின்னல் கடவுளாக ரஸல் க்ரோவை நடிக்க வைத்தது பெரிய விஷயம்.
கடவுளர்களையே கொல்லத் துணிந்த வில்லனாக பேட்மேன் புகழ் கிறிஸ்டியன் பேல். எந்தப் பாத்திரமானாலும் அதில் தன் அடையாளத்தை பதித்து விடும் அவர் நடிப்புதான் இந்தப்படத்தின் ஹை லைட். ஆனால் ஆளே அடையாளம் தெரியாமல் மேக்கப் போட்டு விட்டார்கள்.
பிற வேடங்களில் மேட் டேமன், சாம் நீல், மெல்லிஸா மெக்கர்த்தி, லூக் ஹெம்ஸ்வொர்த் என எல்லாமே பெரிய நடிகர்கள்.
படமாக்கம், கிராபிக்ஸ், இசை எல்லாமே பிரமாண்டம்.
படு சீரியசான படத்துக்குக் கூட காமெடியாக தமிழ்ப் பதிப்பில் வசனம் எழுதுவார்கள் என்றிருக்க அடிப்படையிலேயே காமெடி டிரெண்டில் அமைந்த இந்தப் படத்துக்கு படு காமெடியாக வசனம் எழுதி இருக்கிறார் வசனகர்த்தா.
“சமுத்திரக்கனி அளவுக்கு இல்லைன்னாலும் தோர் தன் பிள்ளையை நல்ல அப்பாவா பார்த்துப்பான்..!” என்பது சாம்பிளுக்கு ஒன்று.
தோர் – தோராயமான சுவாரஸ்யப் படம்.!