மீண்டும் எழுந்து வந்திருக்கும் இயக்குநர் சேரனின் ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’ திரைப்படம் அவரது 11-வது படைப்பாகும்.
படத்தில் சேரனின் தங்கையாக நாயகி காவ்யா சுரேஷ் நடிக்க, மாப்பிள்ளையாக நாயகன் உமாபதி ராமையா நடித்துள்ளார். சேரனின் தாய் மாமனாக தம்பி ராமையா நடிக்க மாப்பிள்ளையின் அக்காவாக நடிகை சுகன்யா நடித்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, கார்த்திக் தங்கவேல், கோபி நயினார், நடிகைகள் மீனா, சுகன்யா, மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நடந்த கமலா தியேட்டரின் முகப்பை திருமண மண்டம்போல் வாழை மரம், தோரணங்கள் கட்டி அலங்கரித்து இருந்தார்கள். தியேட்டருக்குள் நுழைந்ததும் மேள தாள நாதஸ்வரக் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படக் குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பட்டு வேட்டி-சட்டை, பட்டு சேலை அணிந்திருந்தார்கள். விழாவில் விருந்தினர்கள் பேசியதிலிருந்து…
கவிஞர் வைரமுத்து –
“சேரன் கதையை எழுதுபவர் அல்ல.. செதுக்குபவர். ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’ என்ற படத்தை இப்போது அவர் இயக்கியிருக்கிறார்.
மனித குல வரலாற்றில் திருமணம் என்ற நிறுவனம் மிகவும் புதியது. மனித குலம் தனது வசதிக்கு கட்டமைத்துக்கொண்ட பிற்கால நாகரிகம்தான் திருமணம். இந்த நாகரிகம் மாறாது என்று சொல்ல முடியாது. இது மாற்றங்களோடு தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கலாம்.
பல ஆயிரம் ஆண்டுகளைக் கொண்ட நாகரிகங்கள் அழிந்ததைப்போல், சில ஆயிரம் ஆண்டுகள் கொண்ட இந்தத் திருமண பந்தங்களும் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இத்திரைப்படம் திருமணத்தைத் திருத்தப் பார்க்கிறதா..? அல்லது திருமணத்தையே நிறுத்தப் பார்க்கிறதா…’ என்பதைப் படம் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்..!”
கே.எஸ்.ரவிக்குமார் –
“சேரன் உங்ககிட்டயா உதவி இயக்குநரா இருந்தாரு என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
ஏனென்றால் நான் பக்கா கமர்சியல் இயக்குநர். ஆனால் சேரனோ கிளாஸ் இயக்குநர். ரெண்டு பேருக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது. ஆனாலும் அவர் எனது மாணவரா இருந்து என் பெயருக்கும், புகழுக்கும் பெருமை சேர்த்துக்கிட்டிருக்கார்.
சேரனின் இந்தத் திருமணம் நிச்சயமாக வெற்றி பெறும். வெற்றி பெற்றாக வேண்டும். இதேபோல் அவருடைய வீட்டிலும் இந்தாண்டே இரண்டு திருமணங்கள் நடக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்..!”
இயக்குநர் இமயம் பாரதிராஜா –
“எனக்குப் பிறகு கிராமியக் கதைகளில் அழுத்தமாகவும், நுணுக்கமாகவும் காட்சியமைப்பையும், கதாபாத்திரங்களையும் வடிவமைத்தவன் சேரன்தான். இத்திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்..!”
சேரன் –
“ஒரு திருமணம் நடந்தேறும்போது அந்தக் குடும்பத்தில் ஏற்படும் பொருளாதாரச் சிக்கலை இத்திரைப்படம் பேசுகிறது.
பொருளாதாரம்தான் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் மூல காரணி. பொருளாதாரம்தான் உறவுகளைத் தீர்மானிக்கிறது. நமது வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட சிக்கல் கொண்ட ஒரு திருமணத்தை எப்படி நல்லபடியாக நடத்தி முடிக்கிறோம் என்பதுதான் இத்திரைப்படம்.
என் ஒவ்வொரு திரைப்படமும் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் உதவும்வகையில்தான் இருந்திருக்கின்றன. அந்த வரிசையில் இத்திரைப்படமும் உருவாகியிருக்கிறது…!
அட்சதை போடாத குறையாக அரங்கைவிட்டு வெளியே வந்தோம்..!