இன்றைய காலகட்டத்தில் பிரம்மாண்ட படம் என்றால் கோடிகளைக் கொட்டி எடுப்பது மட்டுமில்லாமல் நம்மை புதிய அனுபவத்துக்குள் தள்ள வேண்டும் என்று இயக்குனர்கள் எண்ணுவதாக இருக்கிறது.
கதையைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. இதுவும் அப்படி ஒரு நம்ப முடியாத உலகத்தில்தான் நடக்கிறது.
சுதந்திர இந்தியாவின் அடிமைகளாக தங்கள் இனத்துக்கு மட்டும் குடியுரிமை கிடைக்காமல் போராடும் சவாரி என்ற இனத்தைப் பற்றிய கதை இது.
ஓலா, ஊபர் எல்லாம் சவாரி அனுமதி கிடைத்த விட இந்த சவாரி இன மக்களுக்கு மட்டும் குடியுரிமை கிடைக்காமல் அங்கே இங்கே அலைந்து திரிந்து குலதெய்வம் சொல்லியபடி ஒரு இடத்தில் குழுமி குடி இருக்கிறார்கள்.
ஆனால் அந்த இடத்துக்கு உரிமையாளராக இருக்கும் வில்லன் மோகன் பாபு அவர்களை அடிமையாக பயன்படுத்துவதோடு குடியுரிமை கிடைக்காமலே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அந்த கூட்டத்தில் இருக்கும் சோனாலி குல்கர்னியின் மகனாக பிறக்கிறார் நானி. வெல்லம் கலந்த நீரை மட்டுமே குழந்தைகளுக்கு உணவாக கொடுக்கும் நிலையில் தன் பிள்ளைக்கு டீயும் பன்னும் (அதை சத்தான உணவு என்கிறார்கள்) வாங்கிக் கொடுத்து வளர்க்கிறார் சோனாலி.
டீயும் பண்ணும் வாங்கும் அளவிற்கு ஒரு அடிமைப் பெண்ணுக்கு அவ்வளவு செல்வம் எப்படி வந்தது என்று தெரியும்போது தன் அம்மாவைப் பற்றி அறிந்து கூனிக்குறுகிப் போகும் நானி, பண்ணும் ரகளையில் சிறைக்குப் போய் வாலிபனாக திரும்பி வருகிறார்.
அப்போதும் அம்மாவின் மேல் உள்ள கோபம் ஆறாத நிலையில் கயாடு லோகரின் தொடர்பு கிடைத்து அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
பின்னர் தன் அடிமைச் சமூகம் பற்றி அறிந்து வில்லனுடன் நேருக்கு நேர் மோதி அவரால் ஜெயிக்க முடிந்ததா..? அவரது அன்பை அம்மா பெற்றாரா என்பதெல்லாம் மீதி கதை.
சடையன் என்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இரண்டு சடை பின்னலுடன் வருகிறார் நானி. அவர் ஏன் அப்படி நீளமான பின்னலோடு அலைகிறார் என்பதற்கு தனியாக ஒரு கதை இருக்கிறது. அதை விடுங்கள்.
நாயகியாக நடித்திருக்கும் கயாடு லோஹர் வரும் காட்சிகள் எல்லாம் டிஸ்க்ளைமர் போடும் அளவுக்கு தம்மடித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் அவரது தந்தை பட்ட கடனை அடைக்க, அம்மா படம் பிடிக்க தன் நிர்வாண படங்கள் எடுத்து பதிவேற்றிக் கொண்டிருக்கிறார். அதெல்லாம் நம்மை குஷி ஏற்றதான் என்பது வேறு விஷயம்.
வில்லனாக நடித்திருக்கும் மோகன் பாபுவுக்கு வயதானதே தெரியாமல் கம்பீரமாக தோற்றமளிக்கிறார். அதிலும் அவர் இளமையாக வரும் போது உண்மையிலேயே இளமையாக தெரிகிறார். அவர் வில்லன் என்றாலும் கடைசியில் நானியின் கையில் அடி வாங்கி சாவாரோ என்கிற நம் பயத்தை புரிந்து கொண்டு வேறு மாதிரியான கிளைமாக்ஸ் வைத்திருக்கிறார் இயக்குனர்.
நானியின் அம்மாவாக நடித்திருக்கும் சோனாலி குல்கர்னி, (பி சி ஸ்ரீராம் இயக்கிய மே மாதம் படத்தின் அன்றைய நாயகி) யின் மெருகு குலையாத வனப்பும் நடிப்பும் நச்சென்று இருக்கிறது.
இவர்களுடன் சம்பூர்னேஷ் பாபு, தணிகலபரணி, விஷிகா, கிருஷ்ண தேஜா, ஈஸ்வரி ராவ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
எங்கேயும் இருட்டு எப்போதும் மழை என்கிற இயற்கை சூழலை தன்னால் முடிந்த வரையில் பிரம்மாண்டப்படுத்தி காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய்,
படத்தில் இருக்கும் குறைகளைப் பற்றி யாராவது கமெண்ட் அடித்தால் கூட அதெல்லாம் அடுத்தவர் காதில் விழாத அளவுக்கு அனிருத் இசை ஓங்கி ஒலிக்கிறது. பாடல்கள் சற்று சுமார் ரகம்தான்..
எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீகாந்த் ஓடெலா, கதை நிகழும் இடத்தை ஒரு செட்டாக போட்டுக்கொண்டு அவர் பாட்டுக்கு படம் பிடித்து தள்ளி இருக்கிறார்.
அம்மா பாலியல் வேலை செய்வதும், காதலி நிர்வாண படங்கள் எடுத்து வெளியிடுவதாக இருக்கும் ஒரு நாயகனின் கதையை எப்படி இவர் சொல்ல நினைத்தார் அதை எப்படி ஒரு நாயகன் ஒத்துக்கொண்டு நடித்தார் என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள்.
கடைசியில் திடீரென்று நாம் அதிகம் அறிந்து வைத்திருக்கும் தெலுங்கு அரசியல் தலைவர்கள் ஆன என் டி ஆர், சந்திரசேகர ராவ் எல்லோரும் கதைக்குள் வந்து போகிறார்கள்.
அப்படியானால் அவர்கள் காலத்தில் வாழ்ந்த உண்மை கதையா இது என்று நாம் யோசிக்க இடம் இருக்கிறது. எனில் அதைச் சொல்லிவிட்டே செய்திருக்கலாம்.
தி பேரடைஸ் – சங்கிலி உடைத்த சடையன்..!
– வேணுஜி