எஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பதுதான்.
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, டி சிவா ,படத்தின் நாயகி ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், மதுமிதா, மற்றும் பா.ஜ.க கட்சியின் முக்கிய பிரமுகர்களான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநர் பாபு யோகஸ்வரன் பேசியதாவது,
“இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக அமைந்ததிற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும் விஜய் ஆண்டனியும் தான். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்துதான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும் பாரதிராஜாவும் தான். அவர்கள் இந்த மேடையில் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தப்படம் வெற்றியடைய அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..!”
இயக்குநர் மோகன்ராஜா பேசியதாவது,
“ரொம்ப உணர்ச்சிப் பூர்வமான அனுபவம். இந்த மேடையில் நான் நிற்க காரணம் என் மகன். அவன் இப்படத்தில் நடிகனாக அறிமுகமாகிறான். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பத்திரிகையாளர்கள் நிறைய ஆதரவு கொடுத்துள்ளீர்கள். அதுபோல் என் மகனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விஜய் ஆண்டனி என் மகனை நடிக்க கூப்பிட்டார். மேலும் இளையராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார் என்றும் சொன்னார். இதைவிட என் மகனுக்கு பெரிய பெருமை இருக்க முடியாது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது..!”
தயாரிப்பாளர் பெப்சி சிவா பேசியதாவது
“பத்திரிகை நண்பர்களுக்கும் மேடையில் இருப்பவர்களுக்கும் முதல் நன்றி. நான் பெப்சி சிவா ஆக மாறுவதற்கு ஒத்துழைப்பு தந்த பத்திரிகை நண்பர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நன்றி. பாரதிராஜா எனக்கு எல்லா நேரத்திலும் உதவியாக இருப்பவர். பி.ஆர்.ஓ மெளனம் ரவி என் ஆத்மார்த்தமான நண்பர். அவர் மூலமாக எனக்கு நிறைய மீடியா நண்பர்கள் கிடைத்தார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இந்தப்படத்தை என் மனைவிதான் தயாரிக்கிறார். அவர் சார்பாக மெளனம் ரவி அவர்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பதில் பெருமை அடைகிறோம். இந்தபடத்தின் பாடல்கள் 2020ம் ஆண்டு முழுவதும் பேசப்படும். அந்தளவிற்கு அவரின் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. விஜய் ஆண்டனி தான் என்னை தைரியப்படுத்தி இப்படத்தை தயாரிக்க வைத்தார். இந்த முழுப்படத்திலும் அவருடைய பங்களிப்பு மிக அதிகம். தயாரிப்பாளராக என் மனைவி உருவாகி இருந்தாலும் பைனான்ஸியர் உத்தவ், விஜய் ஆண்டனி இருவரும் ஆற்றிய பங்கு மிக அதிகம். இதனிடையே 2000 பேர்களுக்கு அன்னதானம் செய்துவிட்டு தான் இந்த விழாவை துவங்கியுள்ளோம். இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள, வானதி ஸ்ரீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், ராதாரவி உள்பட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி..!”
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது,
“இன்னைக்கு நான் ஒரு மியூசிக் டைரக்டராகி, நடிகனாக இருக்கிறேன் என்றால் அதுக்கு காரணம் இளையராஜா. அவர் ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அவர் ஒரு இசை அமைப்பாளருக்கு இசை அமைத்திருப்பது இதுதான். இந்தத் தயாரிப்பாளர் சிவா சாரைப் பார்க்க பயமாக இருக்கும். அவர் நிறைய செலவு செய்யக்கூடியவர். நிறைய பெரிய நடிகர்களை நடிக்க வைத்துள்ளார். இந்தப்படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர். அவர் பெரிய இயக்குநராக வருவார். மோகன்ராஜா மகன் சிறப்பாக நடித்துள்ளான். இந்தப்படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். பாருங்கள்”
வானதி ஸ்ரீனிவாசன் பேசியதாவது,
“கலைத்துறைக்கும் பா.ஜ.க கட்சிக்கும் இப்போது நெருக்கம் அதிகமாகி வருகிறது. நிறைய சினிமா பிரபலங்கள் சமீபகாலமாக எங்களிடம் வருகிறார்கள். அதனால் தமிழகம் மாற்றத்திற்கான மாநிலமாக மாற இருக்கிறது. ஜி.எஸ்.டி விஷயத்திற்கும் பைரஸி விசயத்திற்கும் உதவி கேட்டிருக்கிறீர்கள். நிச்சயமாக அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பைரஸி என்பதை மக்கள் நினைத்தால் தான் தீர்வு காண முடியும்..!”
இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது,
“சிவா நல்ல படம் எடுக்கணும் என்று நினைப்பவர். விஜய் ஆண்டனி ஒரு ஆச்சர்யமான முகம். ரொம்ப சாதாரணமா இருப்பார். ஆனால் படத்தில் வேறமாதிரி இருக்கிறார். நல்ல இசை அமைப்பாளர் இப்போது நல்ல நடிகர். தமிழரசன் என்ற பெயர் ரொம்ப நல்லாயிருக்கு. இளையராஜாவை மிஞ்சுவதற்கு இனி ஒரு இசை அமைப்பாளர் பிறந்து வந்தாலும் முடியாது. படத்தை ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தாலும் அந்தப்படத்திற்கு உயிர் கொடுத்து விடுவார் இளையராஜா.
பேசாத படத்தை பேச வைத்தவர் இளையராஜா. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் இசைக்கு ஈடு இணையில்லை. இந்த இயக்குநரை சிவா தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயம் பாபு யோகேஸ்வரன் நல்ல இயக்குநராகத்தான் இருப்பான். இனி வரும் இளைஞர்கள் கொஞ்சம் வயலன்ஸ் இல்லாமல் படமெடுங்கள். இது நல்லபடம். சிவா மனசிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியை அடையும்..!”
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது
“பாரதிராஜா இளையராஜாப் பற்றி பேசும் போது இதற்கு மேல் யாராலும் இளையராஜாவை புகழ முடியாது என்று நினைத்தேன். தயாரிப்பாளர் சிவா ஒரு வேலையை எடுத்தால் அதை மிகச்சிறப்பாக முடிக்கக் கூடியவர். அவருடைய துணைவியாரும் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள். திரைத்துறையில் இருக்கும் சில பிரச்சனைகளை சிலர் குறிப்பிட்டார்கள். நிச்சயமாக இது குறித்து உரிய அமைச்சர்களிடம் பேசுவோம். அதன் மூலம் உங்களோட இருப்போம் என்று சொல்லிக்கொள்கிறேன்.
எங்களோடு இணைந்து பயணிக்கும் திரையுலகினரை அன்போடு வரவேற்று வாழ்த்துகிறேன். இந்தப்படம் மிகச்சிறந்த திரைப்படம் என்ற உச்சத்தை தொட வேண்டும். என்று வாழ்த்துகிறேன். இறைவன் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு. விஜய் ஆண்டனி எங்கள் ஊர்க்காரர். எங்கள் ஊர்க்காரரில் நடிகர்களில் யாரும் பெரிதாக வரவில்லை. விஜய் ஆண்டனி மிகப்பெரிய நடிகராக அடையாளம் காண வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..!”