March 29, 2024
  • March 29, 2024
Breaking News
December 25, 2021

தள்ளிப் போகாதே படத்தின் திரை விமர்சனம்

By 0 495 Views

காலம் காலமாக காதல் கதைகளுக்குப் பஞ்சம் இல்லை. அது ஒரு தலைக் காதலோ, இருதலைக் காதலோ அல்லது முக்கோணக் காதல் கதையோ, அதை எப்படிச் சொல்கிறார்கள், என்ன விதமான பிரச்சனைகளை உள்ளே வைத்து என்ன சுவாரஸ்யத்தைத் தருகிறார்கள்  என்பதைப் பொறுத்தே காதல் கதைகள் வேறுபடுகின்றன.

வித்தியாச காதல் கதைகளை யோசித்து யோசித்து கண்டவுடன் காதல், காணாமல் காதல், தாலி கட்டும் நேரத்தில் கை கூடும் காதல், நிச்சயதார்த்தம் ஆன பின் பூக்கும் காதல், கல்யாணம் ஆன பின்னும் தொடரும் காதல், நீ என்னைக் காதலிக்கா விட்டால் என்ன நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதான காதல் என்று ரவுண்டு கட்டிக் காதல் கதைகளைச் சொல்லி வந்த சினிமாவில் இப்படி இருந்தால் எப்படி… என்று யோசித்து இன்னுமொரு பரிமாணத்தைக் காட்டுகிறது இந்தக் காதல் கதை. 
 
உலக வழக்கமாகவே நாயகனுக்கும், நாயகிக்கும் காதல் பூத்துக் குலுங்க, நாயகி வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க, அந்த நேரம் பார்த்து நாயகன் தன் கல்வி விஷயமாக தள்ளிப்போக, அப்பா பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி விடுகிறார் நாயகி. இதுவும் சில படங்களில் பார்த்த திருப்பம்தான். இப்படி ஒரு திருப்பம் வந்து விட்டாலும் கூட ஹீரோயின் திருமணம் செய்து கொண்ட ஆண் அவளை கொடுமையாக நடத்தத் தொடங்கி அவனுடைய இன்னொரு முகம் தெரிந்து அதன் காரணமாக மீண்டும் அவள் ஹீரோவை தேடிப் போவதாக இருக்கும்.
 
இங்கே அந்தப் பிரச்சனையும் சொல்லப்படவில்லை. நாயகியைத் தேடி வந்த மாப்பிள்ளை 916 ஹால் மார்க் தங்கமாக இருக்க… இதுதான் நம் வாழ்க்கை என்று நாயகியும் சந்தோஷமாக வாழ, ஆனால் நாயகன் மட்டும் அவள் நினைவாகவே இருக்கிறான். அதைத் தெரிந்து கொள்ளும் நாயகி தன் கணவனின் அனுமதியின் பேரில் அவனைத் தன் வீட்டில் பத்து நாள் தங்க வைத்தால் என்ன ஆகும் என்பதுதான் கதை.
 
‘வேலியில் போகிற ஓணான்…’ பழமொழி நினைவுக்கு வருகிறதா..? அதேதான். ஆனால் அதுதானே இயக்குனருக்கு சவாலும், பார்வையாளனுக்கான த்ரில்லும்..? அதை இயக்குனர் ஆர். கண்ணன் எப்படிக் கையாண்டிருக்கிறார் என்பதுதான் அவருக்கான சேலஞ்ச்.
 
இந்தப் படத்தின் பெரிய பலமே இளமை நுரைத்துப் பொங்கும் நாயகனும், நாயகியும்தான். ஆராய்ச்சி மாணவர் வேடத்தில் அதர்வா அத்தனை அழகாக பொருந்தியிருக்கிறார். அதைப்போல் நாயகி அனுபமா பரமேஸ்வரன் அந்த அழகுக்கு அழகு சேர்க்கிறார். நவ நாகரீகத்தில் அசத்தலாக வரும் இருவரும் பளிச் பளிச்சென்று முதல் பார்வையிலேயே மனதில் பதிகிறார்கள். 
 
தாடி வைத்துக் கொண்டாலும் ரொம்பவும் காதல் தோல்வியில் பொங்க வைக்காமல் இருக்கும் அதர்வாவுக்குப் படம் முழுவதும் கலகலப்பாகவே வரும் வேடம். அவரும் ஸ்மார்ட்டாக வந்து கையில் விழுந்த கற்கண்டாக அனுபமாவை அப்படியே காதலிலும் தாங்குகிறார். அனுபமாவின் கணவனிடம், “நீங்க நாலாவதாக பெண் பார்த்த இவள் பிடிக்காமல் போயிருந்தா இன்னொரு பெண்ணைத்தானே கல்யாணம் பண்ணியிருப்பீங்க..? ஆனா, நான் அப்படியில்லை. இவள்தான் வேணும்னு இவளுக்காக எத்தனைக் காலம் ஆனாலும் காத்திருக்கிறவன்…” என்று சொல்லும் இடத்தில் காதலின் ஆழத்தைக் காட்டி விடுகிறார்.
 
பிளேக்பெர்ரி கண்களும், செர்ரிப்பழ உதடுகளுமாக வரும் அனுபமா தமிழுக்கு இனிய முகம். அந்தக் களையான முகத்துக்குத் தோதாகவே சரியான காதலனும், அருமையான கணவனும், அன்பான அப்பாவுமாக அமையைப் பெற்றிருப்பதை ரசிக்க முடிகிறது. 
 
வழக்கமாக காதலித்தவளின் கணவன் கொஞ்சம் வில்லத்தனத்துடன் இருப்பதே அகில உலக சினிமாவும். ஆனால், இந்தப்படத்தில் அனுபமாவின் கணவனாக வரும் அமிதாஷ் பிரதானின் அழகும், பழகும் பாங்கும் அதர்வாவைவிட எந்த விதத்திலும் குறைவாகவே இல்லை. அவரைக் கடுப்பேற்ற பல வழிகளிலும் அதர்வா முயன்றாலும் அதை இனிய புன்னகையாலும், குற்றமற்ற செயல்களாலும் எளிதாகக் கடந்து சமன் செய்கிறார் அமிதாஷ்.
 
இன்னும் கேட்டால் ஒரு கட்டத்தில் இந்த அழகான குடும்பத்துக்குள் இவர் ஏதும் ஏழரையை இழுத்துவிடக் கூடாதே என்று அதர்வாவின் மீதே நமக்குக் கோபம் வருவது நிஜம். இதில் என்னதான் பிரச்சினை வந்து விடப்போகிறதென்று பார்த்தால் கிளைமாக்ஸ் நெருங்குமிடத்தில் வெடிக்கிறது அந்தப் பிரச்சினை. 
 
காமெடியன் வேண்டுமே என்று சாஸ்திரத்துக்காக ஓரிரு ஆரம்பக் காட்சிகளில் வரும் காமெடி ஜெகன் சிரிக்க வைக்க சில முயற்சிகள் செய்கிறார். அதற்குப் பின் அவர் காணாமல் போக, அந்த வேலையை காளி வெங்கட்டும், அனுபமாவின் அப்பாவான ஆடுகளம் நரேனுமே ஏற்கிறார்கள்.
 
நாம் தினமும் பார்க்கும் சென்னையை ஐரோப்பிய அழகுடன் காட்டி ரசிக்க வைத்திருக்கும் சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு மூன்றாவது ஹீரோவாகிறது. சென்னையையே அவ்வளவு வனப்புடன் காட்ட இவரால் முடிகிறதென்றால் ஐரோப்பா எப்படி இருக்கும்..? பாதிப்படம் அங்கேதான். பூலோக சொர்க்கமாகவே காட்சிக் களம் இவரால் விரிகிறது. அதனாலேயே கதை மாந்தர்கள் தேவர்களும், தேவதைகளுமாகத் தோன்றுகிறார்கள். அதற்குத் தோதாக அமைந்திருக்கிறது கோபி சுந்தரின் இசை.
 
அழகான ஃபீல் குட் படமான இந்தக் காதல் கதையை நவீனமாகத் தந்திருக்கும் இயக்குனர், பின் பாதியைப் போன்றே முதல் பாதியிலும் வேகம் கூட்டி இருந்தால் இன்னும் ரசித்திருக்க முடியும். அன்பான அப்பாவாக நரேன் இருக்க, இவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அனுபமா ஏன் தன் காதலை அவரிடம் முன்னிறுத்தவே இல்லை என்பதும் நமக்கு எழும் கேள்வி.
 
நின்னுக்கோரி தெலுங்குப்பட தழுவலான இந்தப்படத்தில் கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ஒரு வரி வசனம் இந்தப்படத்தின் ஜீவன் மட்டுமல்ல – மனிதத் தேடலுக்கே அச்சாரம். அது, “நம்ம தேடுறது நம்ம பக்கத்திலேயேதான் இருக்கும். ஆனா அதுக்காக நாம ரொம்ப தூரம் சுத்தி வந்துக்கிட்டு இருப்போம்..!”
 
தள்ளிப் போகாதே – காதலின் செகண்ட் சான்ஸ்..!