November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • தலைக்கூத்தல் திரைப்பட விமர்சனம்
January 31, 2023

தலைக்கூத்தல் திரைப்பட விமர்சனம்

By 0 665 Views

தமிழ்நாட்டில் விருதுநகர் பகுதிகளில் நடந்த… நடக்கிற (?) கொடூரமான ஒரு நிகழ்வுதான் இந்த தலைக்கூத்தல். 

வயோதிகத்தால் படுத்த படுக்கையாகிவிடும் முதியோரை பார்த்துக்கொள்ள வழி இல்லாமல் அதிகமான இளநீரை குடிக்க கொடுத்து எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிர்ந்த நீரால் ஊற்றி விட ஜன்னி வந்து அவர்கள் மரிப்பார்கள். 

கிட்டத்தட்ட பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லும் முறையை போன்றது தான் இந்த முதியோருக்கு தலைக்கூத்தல் நிகழ்வும்.

அப்படி ஒரு நிகழ்வை வாழ்க்கையும் வேதனையுமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

கோவில்பட்டியில் நிகழ்கிற கதை. கட்டிடம் கட்டும் வேலையில் இருக்கும் போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து அசைவின்றி படுத்த படுக்கையாகி விட்ட அப்பா கலைச்செல்வனை மகன் சமுத்திரக்கனி கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார்.

அவரது இயற்கை உபாதைகளை அள்ளி எடுத்து போடவும், படுக்கையை சரி பண்ணவும் அவரை பராமரித்துக் கொள்ளவுமே சமுத்திரக்கனிக்கு நேரம் போய்விட, வருமானம் தரக்கூடிய தன் கட்டுமானப் பணியை விட்டுவிட்டு இரவு நேர வாட்ச்மேன் வேலைக்குச் செல்கிறார்.

அந்த வருமானம் போதாத நிலையில் அவர் மனைவி வசுந்தராவும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு போக அவர்களுக்குச் சொந்தமான பழைய வீட்டில் ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதுபோன்ற சமயங்களில் பொது நிகழ்வாகவே இந்தத் தலைக் கூத்தல் பல குடும்பங்களில் நிறைவேறி விட சமுத்திரகனியையும் அதற்கு வற்புறுத்துகிறது, குடும்பமும் அந்த சமூகமும். ஆனால் இயற்கையாக வந்த உயிர் இயற்கையாகவேதான் பிரிய வேண்டும் என்ற பிடிவாதத்தில் எவர் சொல்லியும் கேட்காமல் கடனாளியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் சமுத்திரகனியின் வாழ்க்கை என்னவானது, அப்பாவை மரணத்திலிருந்து மீட்டு வர அவரால் முடிந்ததா என்பதே மீதிக்கதை.

உயிர்ப்புமிக்க எத்தனையோ வேடங்களில் நடித்து விட்ட சமுத்திரக்கனிக்கு இந்த படத்தில் ஏற்றிருக்கும் பாத்திரம் இன்னொரு பெரும் பொறுப்பு. ஆனாலும் தந்தை மீதான பாசத்தால் அவரைக் கொன்று விட மனமில்லாமல் தவிப்பதும் அதே நேரத்தில் மனைவி கூட தன் அருகில் வர மறுக்கும் வெறுப்பை சம்பாதித்தும், கடன் காரருக்கு பதில் சொல்லி மாளாத பொழுதுமாக அவர் இதில் ஏற்றிருக்கும் பழனி என்கிற பாத்திரம் மிக பளுவானது.

அப்பா மரணத்தின் தருவாயில் இருக்கிறார் என்ற நிலையிலும் நம்பிக்கையை தளர விடாமல் அவருக்கு ரத்த கொதிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவை சரிபார்த்து, “எல்லாம் சரியா இருக்கு…” என்ற நம்பிக்கை வார்த்தைகள் பேசி அப்பாவுக்கு புத்துயிரூட்ட முயலும் இந்தப் பாத்திரம் கனியின் நடிப்பு ஆயுளை நீட்டிக்கும் நெல்லிக்கனி. 

அவர் ஒரு பக்கம் நடிப்பில் அசத்திக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் அலட்டிக் கொள்ளாமல் நடித்து பாத்திரமாகவே மாறிப் போயிருக்கிறார் அவரது மனைவியாக வரும் வசுந்தரா. அப்பாவை பார்த்துக் கொள்ள ஆரம்பித்ததும் கனியின் கவனம் தன் பக்கம் வரவில்லை என்று தெரிந்து கொண்டு கிடைத்த இடத்தில் எல்லாம் தன் எதிர்ப்பை பதிவு செய்வதில் வசுந்தரா வாழ்ந்திருக்கிறார்.

அப்பா கண்ணை திறப்பாரா என்று கனி சோதித்துக் கொண்டிருக்க, “அவர் எப்பவோ கண்ணை மூடிட்டார்… ஆனா உனக்குதான் இன்னும் கண்ணு தொறக்கல…” என்று வார்த்தையாலேயே ஈட்டி பாய்ச்சும் வசுந்தரா பல குடும்பத்து மனைவியரின் உதாரணப் பாத்திரம்.

தன் எதிர்ப்பை சட்டை கூட செய்யாமல் சமுத்திரக்கனி நடந்து கொண்டிருப்பதை பார்த்ததும் அவருக்கு வைத்திருந்த சோற்றை எடுத்து நாய்க்கு போட்டு அவரை பட்டினி போட்டாலும் மறுநாள் அந்த தவறை உணர்ந்து தன் தம்பியிடம் சொல்லி அவருக்கு உணவு வாங்கி கொடுக்க சொல்வதில் மனைவிக்குள் இருக்கும் ஒரு தாயையும் பதிவு செய்திருக்கிறார் வசுந்தரா.

தான் பேசுவதெல்லாம் மாமனாருக்கு கேட்கும் என்ற உண்மை தெரிந்த வினாடியில் வசுந்தராவின் முகத்தில் தெரியும் பதற்றத்தையும், மாமனாரிடம் சென்று மன்னிப்புக் கேட்பதையும் ரசிக்கலாம்.

ஆனால், கண்ணுக்குத் தெரிந்த இந்த இருவரின் நடிப்பைவிட கவனத்துக்கு வராமல், கிட்டத்தட்ட பினமாகப் படுத்திருக்கும் அந்த அப்பா வேடத்தை ஏற்றிருப்பவர் பின்னியிருக்கிறார். படம் முழுதும் கிட்டத்தட்ட சடலமாகவே என்ன ஒரு ஜீவனான நடிப்பு.

இந்தக் கதையினூடே அவ்வப்போது வந்து போகும் கதிர் – கதானந்தியின் காதல் காட்சிக் கவிதை. போகப்போக கதிர் யார் என்பதை நாமே புரிந்து கொள்ள வைத்திருக்கும் இயக்கம் அல்டிமேட்.

அத்துடன் கதிருக்கும், மரணப்படுக்கையில் இருக்கும் கனியின் அப்பாவுக்குமான மிகச் சாயல், சத்யஜித் ராயின் படங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் அற்புதம். 

வெல்டன் இயக்குனர்..!

கனியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி, கனி தோழனாக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ், வசுந்தராவின் அப்பாவாக நடித்திருக்கும் பெரியவர், குறி சொல்லும் திருநங்கை வையாபுரி என்று படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும், மிகச் சரியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஊருக்குள் ஒரு சாவு விழுந்து விட்ட நேரத்தில் யாரும் கருவிருந்து வைக்கவும் அதை ஊர் மக்கள் சென்று சாப்பிடவும் இயலாது. இது போன்று அங்கங்கே தெரியும் சில குறைகளை தவிர்த்து இருந்தால் படைப்பு முழுமை பெற்றிருக்கும்.

மார்ட்டின் துன்ராஜின் புகைப்பதிவு கண்ணன் நாராயணனின் இசையும் தலைக்கூத்தலும் இளநீரும் போல பின்னிப் பிணைந்து இருக்கின்றன.

இதைப் போன்ற தரமான படங்களை தரும் ஒய் நாட் சசிகாந்த் பாராட்டுக்குரியவர்.

இந்த விருதுநகர் முத்திரைப்படத்திற்கு நிறைய விருதுகள் காத்திருக்கின்றன. 

தலைக்கூத்தல் – விளிம்புநிலை மனிதர்களின் வெளியே கேட்காத விசும்பல்..!

– வேணுஜி