November 26, 2024
  • November 26, 2024
Breaking News
May 8, 2022

இன்று அன்னையர் தினம் – உருவான கதை

By 0 1037 Views

நிபந்தைனையில்லாத அன்பு.. எல்லையற்ற பாசம்.. சுயநலமில்லாத உறவு என்றால் அது தாய்ப்பாசம் மட்டுமே.. எவ்வித எதிர்பார்ப்புமின்றி நமக்காகவே வாழ்வது அம்மா மட்டும் தான். அதனால் தான் நம் முன்னோர்கள் ‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை’ என்று அன்னையை போற்றினர். அப்படிப்பட்ட அன்னையை கௌரவிக்கவும், மரியாதை செலுத்தவும் தான் இந்த அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வரும் 2-வது ஞாயிற்றுக்கிழமை உலகின் பெரும்பாலான நாடுகளில் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்று மே 8-ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்த அன்னையர் தினம் எப்படி உருவானது என்பதை பார்க்கலாமா?..

அமெரிக்காவைச் சேர்ந்த ஜீவ்ஸ் ஜர்விஸ் என்பவரின் மகள் அன்னா மேரி ஜர்விஸ். இவர் தனது தாயின் அறிவுரையின் பேரில், குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக ”மதர்ஸ் டே ஒர்க் கிளப்” என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் அடிக்கடி மருத்துவர்களை வரவழைத்து, குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியான வாழ்க்கை, குழந்தைகளுக்கு எவ்வாறு கல்வி கற்பிப்பது போன்ற பயிற்சிகளை தாய்மார்களுக்கு வழங்கினார்.

ஒருமுறை தனது தாய் நடத்தி வந்த ஞாயிற்றுக் கிழமை பள்ளியில் பாடம் நடத்தி கொண்டிருந்த அன்னா ஜார்விஸுக்கு தனது தாய் கூறியது நினைவில் வந்தது. அன்னையை போற்றுவதற்கு ஒரு நாள் ”அன்னையர் தினம்” வரும் என்று அவரது தாய் அடிக்கடி கூறியது அவரை தொந்தரவு செய்தது. இதுபற்றியே தொடர்ந்து சிந்தித்து கொண்டிருந்தார் அன்னா. அதன்பின்னர் அவரது அம்மா 1905ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். எனினும் தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் வகையில், 1908, மே 10ஆம் தேதி அன்னையர்களை வரவழைத்து அவர்களுக்கு பூச்செண்டுகள் கொடுத்து அவர்களை வாழ்த்தி அனுப்பினார். அன்றைய தினத்தை அன்னையர் தினமாகவே அவர் கொண்டாடினார். மேலும் அன்னையர்களை கௌரவிக்கும் விதமாக ஒரு தினத்தை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து அன்னா மேரி போராட்டம் நடத்தினார். அவரின் கோரிக்கை தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், அமெரிக்காவின் 28வது அதிபரான தாமஸ் உட்ரோ வில்சன், அன்னையர் தினத்துக்கான பிரகடனத்தில் 1914, மே 9 ஆம் தேதி கையெழுத்திட்டார்.

அதன்படி, அன்னையர்களுக்கு மரியாதை, அன்பு செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டு, மே மாதத்தில் வரும் 2வது ஞாயிறு அன்னையர் தினமாக கொண்டாடப்படும், அன்று தேசிய விடுமுறை விடப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் மே 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஹாங்காய், பிரேசில், கம்போடியா, பின்லாந்து, ஜெர்மனி என உலகின் பெரும்பாலான நாடுகளில் மே 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், பிரிட்டன், அயர்லாந்து, நைஜீரியா போன்ற நாடுகள் மார்ச் 4வது ஞாயிற்றுக்கிழமையும், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா, ஈராக், ஜோர்டான், குவைத் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் மார்ச் 21-ம் தேதியும் அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றன.

மகள், சகோதரி, மனைவி, என எத்தனை பரிமாணங்கள் இருந்தாலும், தாயாகும் போது மட்டுமே ஒரு பெண் முழுமையடைகிறாள். தன் நலம் கருதாமல், பிள்ளைகளின் நலன், குடும்பத்தின் நலனை மட்டுமே சிந்திக்கும் அன்னையர்களை கொண்டாட ஒரு தினம் போதாது என்றாலும், அன்னையர் தினத்திலாவது அவர்களுக்கு மரியாதையையும், கௌரவத்தையும் அனைத்து அன்னைகளுக்கு அளிப்போம்..

.