November 22, 2024
  • November 22, 2024
Breaking News
February 26, 2023

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் திரைப்பட விமர்சனம்

By 0 347 Views

சினிமா சொல்லும் அறிவியலில் ரோபோ காதலித்தாயிற்று. ஆண்ட்ராய்டு ரோபோ ஏவிய வேலையை செய்வதற்கு ஆயிற்று. இந்தப் படத்தில் இனி அடுத்து உலகை ஆளப்போகும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்சை வைத்து ஒரு கற்பனைக் கதையைப் படைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என்.

ஆனால் அதை சீரியஸாகவெல்லாம் கொண்டு போகாமல் காமெடியாக சொல்ல வேண்டும் என்று அவர் முடிவு எடுத்து இருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். 

அதற்குத் தோதாக அகில உலக சூப்பர் ஸ்டார் ஷிவாவும் கிடைக்க அதகளம் ஆரம்பமாகிறது.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸை ஒரு ஸ்மார்ட்போனுக்குள் ஒரு பெண்ணாக உருவகம் செய்து அதை வைத்திருப்பவருக்கு அந்தப் பெண் எல்லா உதவியும் செய்வதைப் போல் வடிவமைக்கிறார் விஞ்ஞானி ஷாரா. அந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பெண்ணுக்கு அவர் வைத்த பெயர்தான் சிம்ரன். ஃபோனுக்குள் இருக்கும் அந்த பெண் வேடத்தில் மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார்.

அதை மார்க்கெட் செய்தால் பெரிய பணம் பார்க்கலாம் என்று பணக்கார தாதா பக்ஸ் முயல, அதற்குள் அந்த மாஸ்டர் ஃபோன் காணாமல் போகிறது. அதை திருடிய லோக்கல் திருடர்கள் அதை ஒரு செல்போன் கடையில் விற்று விட்டு போக, அது உணவு டெலிவரி செய்யும் ஷிவாவின் கையில் கிடைக்கிறது.

போனுக்குள் இருக்கும் மேகா ஆகாஷ் ஷிவா மீது மைல் கொண்டு அவருக்காக எல்லா உதவிகளும் செய்து வறிய நிலையில் இருந்த அவரைப் பெரிய பணக்காரன் ஆக்குகிறது. அதில் ஷிவா மகிழ்ந்தாலும் மேகா ஆகாஷின் காதலை ஏற்க மறுக்கிறார்.

ஒரு போனை போய் எப்படி காதலிப்பது என்ற எண்ணத்தில் அவர் அஞ்சு குரியனைக் காதலிக்க ஆரம்பிக்க, அதில் டென்ஷனான மேகா ஆகாஷ், தன் அறிவை வைத்து அவரை மீண்டும் தெருவுக்கு கொண்டு வருகிறது.

அத்துடன் இல்லாமல் அஞ்சு குரியனுக்கும் அவருக்கும் இருக்கும் காதலை பிரிக்க எல்லா டகால்டி வேலைகளையும் செய்கிறது. இதைத் தாண்டி ஷிவா காதலில் வென்றாரா, மேகா ஆகாஷின் காதல் ஜெயித்ததா என்பதுதான் மீதி கதை.

ஷிவாவுக்கு செம ஜாலியான வேடம். அவரும் ரசித்து நடித்து நம்மை சிரிக்க வைக்கிறார். அஞ்சு குரியினைப் பார்த்ததும் காதல் கொண்டு ஒரு கதவின் பூட்டை திறந்து அவரை காப்பாற்றியதை, “உங்கள கஷ்டப்பட்டு காப்பாற்றினேன்..!” என்று சொல்லியே லவ்வுவதில் ஆகட்டும், மேகா ஆகாஷின் உதவியால் ட்ரோன் வைத்து உணவுகளை மாடிக்கு எல்லாம் டெலிவரி செய்வதில் ஆகட்டும் கலக்குகிறார் ஷிவா.

ஃபோனுக்குள் இருக்கும் பெண் என்பதால் மேகா ஆகாஷுக்கு வெளியுலக தொடர்பு எதுவும் இல்லாமல போனுக்குள் இருக்கும் தனி உலகில் வாழ்வதாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்.

தன்னை ஷிவா காதலிக்கவில்லை என்றதும் டென்ஷனாகி எல்லா உறவுகளையும் குழப்பப்படுத்தி அவர் ஏக ரகளை செய்வதை ரசிக்கலாம்.

அஞ்சு குரியன் அழகும் நம்மை கவர்கிறது அவர் எதற்காக ஷிவாவை காதலிக்கிறார் என்ற உண்மையை இடைவேளைக்கு முன்னரே தெளிவாக சொல்லிவிடுவது பின் பாதியை சுவாரஸ்யம் இல்லாமல் ஆக்குகிறது.

ஷிவா விட்ட இடைவெளிகளை அவரது அப்பாவாக வரும் மனோவும், நண்பராக வரும் மாகாபாவும் பூர்த்தி செய்கிறார்கள். போதாக்குறைக்கு செல்போன் திருடர்களாக பாலாவும் கூத்தடிக்கிறார்கள்.

தன்னை உருவாக்கிய ஷாராவை மேகா ஆகாஷ் டாடி என்று அழைப்பதும் சிம்ரனை சாராவும் மகள் போலவே பார்ப்பதும் நல்ல காமெடி. அதேபோல் ஷாராவை பக்ஸ் கொடுமைப்படுத்தும் போதெல்லாம் அவரது மகளான மேகா ஆகாஷ் பக்சின் கையிருப்பிலிருந்து கோடி கோடியாக காலி பண்ணுவதை ரசிக்கலாம்.

ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவும், லியோன் ஜேம்ஸ் இசையும் படத்துக்கு பொருத்தமாக இருக்கின்றன.

ஒரு அறிவியல் கதையை மகிழ்ச்சியுடன் சிரிக்க சிரிக்க சொல்ல முடிவெடுத்த இயக்குனர் விக்னேஷ் ஷா முயற்சியைப் பாராட்டலாம்.

ஆனால் முதல் பாதியிலேயே மொத்த கதையும் முடிந்து போக, இரண்டாவது பாதியை வேறு வேறு பாதையில் இழுத்து முடித்திருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

இருந்தாலும் இந்த சிங்கிள் ஷங்கரையும் ஸ்மார்ட் போன் சிம்ரனையும் ஜாலியாக ரசிக்க முடியும்.