July 27, 2024
  • July 27, 2024
Breaking News
February 27, 2023

தக்ஸ் திரைப்பட விமர்சனம்

By 0 278 Views

சிறைப்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிக்கும் கதைகள் ஹாலிவுட்டில் நிறைய வந்திருக்கின்றன. தமிழிலும் சில படங்கள் இப்படி வந்திருக்கின்றன.

அப்படி மலையாளத்தில ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான படத்தின் தழுவலான கதை அமைப்பைக் கொண்டு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் நடன இயக்குனராக நாம் அறிந்த பிருந்தா.

இந்தப் படத்தில் சிறப்பம்சமே பிரபல விநியோகஸ்ரும் தயாரிப்பாளருமான ஷிபு தமீன்ஸ் மகனான ஹிருது ஹாரூன் இதில் கதாநாயகனாக அறிமுகமாகி இருப்பதுதான். எனவே அவரது வயதுக்கும் ஆற்றலுக்கும் தோதாக இப்படி ஒரு கதையை பிடித்திருக்கிறார் இயக்குனர் பிருந்தா.

படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு கொலை கேசில் ஹிருது ஹாரூன் கைது செய்யப்பட்டு தென் மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கே அவரது கதை பிளாஷ்பேக்காக சொல்லப்படுகிறது.

அதன்படி ஆதரவில்லாத ஹிருது ஹாரூன், பிரபல தென் மாவட்ட தாதா அண்ணாச்சி என்ற தேனப்பனிடம்  வேலை செய்கிறார். அண்ணாச்சியிடம் நல்ல பெயர் எடுத்திருந்தாலும் அனஸ்வரா ராஜனை காதலித்து அவளை திருமணம் செய்து நிம்மதியான வாழ்க்கை வாழ நினைக்கும் போது விடுமா தாதாயிசம்..?

அந்த வஞ்சக சதியில் ஹாரூன் சிறையில் அடைக்கப்பட சிறையிலும் பிரச்சினை ஏற்பட, அதே செல்லில் இருக்கும் பாபி சிம்ஹாவின் கருணைப் பார்வை படுகிறது. 

ஒரு சந்தர்ப்பத்தில் அங்கே இருக்கும் கொடுமையான ஜெயலரான ஆர்.கே. சுரேஷிடம் நல்ல பெயர் வாங்கி அதை வைத்து அவருக்கே தெரியாமல் சிறையில் இருந்து தப்ப ஒரு திட்டம் தீட்டுகிறார் ஹாரூன். அந்த  திட்டம் நிறைவேறியதா… இல்லையா? என்பதே மீதிக்கதை.

முதல் படம் என்றே நம்ப முடியாத அளவுக்கு ஹிருது ஹாரூன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடிப்பு நடனம் சண்டைக் காட்சிகள் அத்தனையிலும் தேர்ந்த நடிகராக தெரிகிறார் ஹாரூன்.

அவரது அப்பாவித்தனமான முகமே காதலிக்க தோதாகவும் அதே நேரத்தில் ஜெயிலரிடம் நம்பகத்தன்மையைப் பெறுவதற்கும், பார்க்கிற நமக்கும் அவர் குற்றம் அற்றவர்தான் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்தவும் செய்கிறது.

நாயகியாக வரும் அனஸ்வரா ராஜன் கொள்ளை அழகு. அவரை ஏன் வசனம் பேச வழியில்லாமல் ஆக்கினார் இயக்குனர் என்பது தெரியவில்லை.

படத்தில் சீனியர் நடிகரான பாபி சிம்ஹாவுக்கு முக்கியத்துவம் இல்லை. அவரது பார்வையும் நடிப்பும் அற்புதமாக இருந்தாலும் ஏதோ செய்யப் போகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி கடைசி வரை பெரிதாக எதையும் செய்யவில்லை.

அதே போல்தான் முரட்டு ஜெயிலராக வரும் ஆர்.கே.சுரேஷ். தொடக்கத்தில் ரொம்பவும் பயமுறுத்திவிட்டு ஹாரூனின் நடிப்பில் ஏமாந்து போகும் ஏமாளியாக வந்து பரிதாபத்தை சம்பாதிக்கிறார். பெரிய அதிகாரிகள் வரவிருக்கும் சுதந்திர தினத்தன்று கைதிகள் தப்பிய ஓடி இருக்க அவர் என்னதான் செய்வாரோ என்று பரிதாபமாக இருக்கிறது.

வறட்சியாக சென்று கொண்டிருக்கும் படத்தில் முனிஷ்காந்த் காமெடி கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

படத்தில் காட்டப்படும் ஜெயிலுக்குள் ஒரு பெட்டிக்கடைதான் இல்லை. அந்த அளவுக்கு படம் முழுவதும் பீடிகள் புகைக்கப் படுகின்றன.

பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவு சின்ன சின்ன இடங்களில் பயணித்திருப்பது மட்டுமல்லாது இரவு காட்சிகளிலும் சிறப்பாக பங்களித்திருக்கிறது

எல்லாப் படங்களிலும் எல்லா காட்சிகளிலும் வாசித்து தள்ளும் இசையமைப்பாளர் சாம். சி. எஸ்ஸின் கைகளில் இருந்து சில இசைக் கருவிகளை பிடுங்கினால்தான் தமிழ்ப் பட உலகம் தப்பிக்கும் போலிருக்கிறது.

படத்தின் நேர்த்தியில் இயக்குனர் பிருந்தா ஜெயிக்கிறார். ஆனால் பட ஆரம்பத்திலிருந்து நம்முடன் ஒன்றாத திரைக்கதையில் தோற்றுவிடுகிறார். முதல் பாதி ஓரளவுக்கு பரபரப்புடன் நகர்ந்தாலும் இரண்டாவது பாதி ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.

இருந்தாலும் படத்தின் நோக்கம் என்னவோ ஹிருது ஹாரூனை ஒரு ஹீரோவாக்குவதுதான். அந்த வேலை கச்சிதமாக முடிந்திருக்கிறது.

தக்ஸ் – ஹிருது ஹாரூனின் விசிட்டிங் கார்டு..!