சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகனுக்கும் திருமணம் செய்வதாக இருவீட்டாரும் நிச்சயம் செய்ததைத் தொடர்ந்து இன்று காலை ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடத்தப் பட்டது.
உறவினர்களும், நண்பர்களும், பிரபலங்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் விருந்தினர்களுக்கு வழக்கமான தேங்காய்ப்பைக்கு மாற்றாக ஒரு புதுமை செய்திருந்தனர்.
வந்தவர்களுக்கு ‘விதைப் பந்து’ ( Seed Ball) தரப்பட்டது. காடுகள் வளர்ப்பிலும், பசுமை உருவாக்கத்திலும் இந்த ‘விதைப் பந்து’ முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ‘விதைப் பந்து’ என்பது மண்ணால் செய்யப்பட்ட ஒரு பந்து ஆகும். இதில் பல வித மரங்களின் விதைகளும் கலந்து காயவைக்கப்படிருக்கும்.
இந்த பந்தை நாம் போகிற இடங்களில் வெற்றிடம் இருந்தால் அங்கே வீசி விட்டுப் போக வேண்டியதுதான். மழைக்காலங்களில் அந்த மண் கரைந்து உள்ளிருக்கும் விதைகள் நிலத்தில் ஊன்றப்பட்டு அந்த மரம் முளைக்க ஆரம்பிக்கும்.
வழக்கமாக புதுமை விரும்பிகள் இதைப் போன்ற விழாக்களில் மரக்கன்றுகள் தருவார்கள். அதுவும் நல்ல விஷயம்தான் என்றாலும் அதை எங்கே நடுவது என்று தெரியாமல் குழம்பித் தவிப்போர் உண்டு. அவர்களுக்கு இந்த விதைப் பந்து நல்ல பரிசாக இருக்கும். வேண்டுமென்று வீசினாலும் வேண்டாமென்று வீசினாலும் விதை முளைப்பது இதில் விந்தை.
அந்தப் பந்துடன் திருமதி. லதா, திரு. ரஜினிகாந்த் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த நல்ல காரியத்தில் சௌந்தர்யா – விசாகன் திருமணத்தை இயற்கையும் ஆசீர்வதிக்கட்டும்..!