இன்று முற்பகலில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது குடியரசு துணைத் தலைவரால் வழங்கப்பட்டது. அந்த மகிழ்ச்சியுடன் ரஜினிக்கு இன்னொரு மகிழ்ச்சியும் இன்று பிற்பகலில் கூடியது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினி, ‘HOOTE’ என்ற வாய்ஸ் மூலம் தொடர்பு கொள்ளும் புதிய சமூக வலைதளம் ஒன்றை இன்று தொடங்கினார்.
இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக ஊடக தளமான இதற்கு ‘hoote’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை சன்னி போக்கலா என்பவருடன் இணைந்து அவர் தொடங்கியுள்ளார்.
பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் எழுத்துகளை தட்டச்சு செய்து நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது போல இந்த வலைத்தளத்தில் நம் கருததுகளையும் எண்ணங்களையும் குரல் மூலம் தெரிவிக்க முடியும். ஒரு முறைக்கு அறுபது வினாடிகள் நம் குரலைப் பதிவு செய்து பகிர முடியும்.
இதை ரஜினி தன் குரலில் பதிவு செய்து நேரலையில் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது…
“எனக்கு எல்லாமே என் அப்பாதான். அவரின் ஆசியுடன் இதை தொடங்குகிறேன்.
அப்பாவுக்கு எழுதத் தெரியாது. அதனால் தமிழில் ஏதாவது சில வேண்டும் என்றால் வாய்சில்தான் அனுப்புவார்.
ஒருமுறை படப்பிடிப்பில் இருந்த தலைவர் எனக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜில் அவர் குரலை கேட்கும் போது எனக்கு இந்த ஹூட் வாய்ஸ் சோஷியல் மீடியா குறித்த யோசனை தோன்றியது.
எல்லோருக்கும் எழுதப் படிக்க தெரியாது. எழுதத் தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் மற்ற சமூக வலைதளங்கள் போல் இல்லாமல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட தங்கள் குரலில் இதில் பதிவு செய்யலாம்.
அத்துடன் எந்த மொழியிலும் இதைப் பதிவு செய்து அதன் பொருளை இன்னொரு மொழியிலும் மாற்றம் செய்து கேட்க முடியும். எல்லா இந்திய மொழிகளிலும் இதில் பதிவு செய்ய முடியும்.
டிவிட்டரில் குருவியின் குரலில் வைத்து தலைப்பு இட்டதைப் போல இந்த சமூக வலைதளத்தின் பெயரை ஆந்தையின் குரலில் ஹூட் என்று வைத்திருக்கிறேன். ஆந்தையின் குரல் நல்ல சகுனம் வழங்கும் என்பார்கள்..! ” என்றார்.
ரஜினிக்கு தமிழ் எழுத தெரியாது என்ற தகவல் மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்காதா..? என்று அவரிடம் கேட்டபோது, ” இது வெளிப்படையான விஷயம்தான்… இதனால் மக்களுக்கு அவர் மீது அன்பு குறைந்து விடுமா என்ன..? ஆனால் அவருக்குப் பல மொழிகள் பேசவும், படிக்கவும் தெரியும்..!” என்றார்.
இந்த வெளிப்படைத் தன்மைதான் ரஜினியை இன்னும் நெருக்கமாக வைத்திருக்கிறது..!