சிறைச்சாலைகளுக்கு உள்ளே இருப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை ; அதேபோல் வெளியில் இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிற அதே தோசையை திருப்பிப் போட்டிருப்பதுடன், ‘இங்கு இரண்டு வழிதான்- ஒன்று, சொர்க்கவாசலில் மண்டியிட்டுக் கிடக்க வேண்டும், அல்லது நரகத்தில் ராஜாவாக இருக்க வேண்டும்…’ என்று ஒரு புரியாத தத்துவத்தையும் உள்ளே வைத்துக் கதை சொல்கிறார் இயக்குனர் சித்தார்த் விஷ்வநாத்.
அவர் அதற்கு எடுத்துக் கொண்டிருக்கிற களம் சிறை. அதிலும் 1999இல் நடந்த உண்மைக் கதையான பாக்ஸர் வடிவேலுவின் கடைசிக் காலத்தில் நடந்த சிறை அனுபவத்தையும், அது தொடர்பான கலவரத்தையும் அடிப்படையாகக்கொண்டு கூடவே கொஞ்சம் கற்பனையையும் கலந்து கதை பண்ணி இருக்கிறார்.
ஆனால் பாக்ஸர் வடிவேலு பாத்திரம் சற்று வில்லத்தனம் கலந்திருப்பதால் நாயகன் என்ற ஒரு அம்சம் படத்துக்கு வேண்டுமே..? அதற்காக ஆர்ஜே பாலாஜியின் பாத்திரத்தை புதிதாக உருவாக்கி ஒட்ட வைத்திருக்கிறார்.
ரோட்டோரத்தில் பிளாட்பார டிபன் கடை வைத்துப் பிழைப்பு நடத்தி வரும் நாயகன் ஆர்.ஜே. பாலாஜிக்கு இரண்டு திட்டங்கள்தான். ஒன்று பிளாட்பாரக் கடையை ஹோட்டலாக விஸ்தரிக்க வேண்டும். இன்னொன்று அம்மாவின் யானைக்கால் நோயை அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தி விட வேண்டும்.
மூன்றாவது திட்டமாக சானியா ஐயப்பனுடன் காதலும் ஒன்று இருக்கிறது. சானியாவுடன் கிடைக்கிற கேப்பில் எல்லாம் சப்ஜாடாக எல்லாவற்றையும் செய்து விட்டு, கல்யாணம் மட்டும் ஹோட்டல் வைத்த பிறகுதான் என்று கட்டுப்பாடாக (?) இருப்பவருக்கு திடீர் பிரச்சனை ஒன்று முளைத்து அதன் காரணமாக ஜெயிலில் தள்ளப்படுகிறார்.
அதுவும் கொலைக் குற்றத்தில் எனும் போது தள்ளாடிப் போகும் அவர், சிறைக்குள் இருக்கும் ஒரு தாதாவின் கதையை முடிக்க பகடைக்காய் ஆக்கப்பட்டு உண்மையிலேயே கொலைகாரனாக மாறிப் போக இந்த கதையின் முடிவு என்ன என்பதை முழுப் படமும் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
ஆர்.ஜே.பாலாஜியை இந்தப் பட கெட்டப்பில் பார்த்தால் அசப்பில் பராசக்தி சிவாஜி கணேசன் மாதிரி இருக்கிறார். ஆனால் அவரைப் போல நடிக்கிறாரா என்றெல்லாம் அவத்தமாகக் கேட்கக் கூடாது.
அவரது வழக்கமான லொட லொடா கேரக்டரை விட்டு விட்டு கொஞ்சம் சீரியசாக நடித்திருப்பது வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் உணர்ச்சிவசப்படும் போதெல்லாம் ஒரு கத்து கத்துகிறாரே அது காதைப் பொத்திக்கொள்ள வைக்கிறது. பின்னால் அவர் சிறையைக் கட்டி ஆள்கிற தாதாவாக மாறுகிறார் என்பதெல்லாம்… குருவி தலையில் பலாப்பழம்..!
நாம் நன்கறிந்த பாக்சர் வடிவேலுவின் நகலெடுத்த கேரக்டரில் சிகாமணி என்ற ரவுடியாக செல்வராகவன் வருகிறார். அவர் கன்ட்ரோலில் தான் சென்னை சென்ட்ரல் ஜெயில் இருக்கிறது என்கிறார்கள். அவரையும் அந்த ஜெயிலையும் பார்த்தால் அப்படியெல்லாம் எந்தத் தடயமும் இல்லை. அதிலும் தான் திருந்தி விட்டதாக அவர் சொல்லிக் கண்டே இருப்பதால் அவர் மீது எந்தவிதமான பயமும், பதட்டமும் வரவில்லை.
ஆனால் சிறை அதிகாரிகள் எல்லோரும் அவரைப் பார்த்தால் ஏன் பயப்படுகிறார்கள் என்று புரியவில்லை. அதிலும் திகார் ஜெயிலையே நடுங்க வைத்தவர் என்று சொல்லப்படும் புது எஸ்.பி கூட அவரைப் பார்த்தால் கொஞ்சம் பம்மியபடியே இருக்கிறார்.
அப்படிப்பட்ட டெராரான சிறை அதிகாரியாக நடித்திருக்கும் ஷரப் யுதீன், அறிமுகத்தில் கெத்து காட்டுவதோடு சரி அதற்கு பின் வேறு ஒன்றையும் செய்யவில்லை.
நியாயப்படி தனக்கு வந்திருக்க வேண்டிய அதிகார பதவி அது என்று நம்பி அது கிடைக்காமல் போகும் கருணாஸ் நடிப்பு தனி ரகம்.
சிறைக் கலவரம் பற்றிய விசாரணை நடத்தும் அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக அல்சர் வந்தவராக அவ்வாப்போது ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பது படத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.
டைகர் மணியாக நடித்திருக்கும் ஹக்கிம்ஷா, கிச்சன் பொறுப்பாளர் பாலாஜி சக்திவேல், சீலன் வேடத்தில் நடித்திருக்கும் அந்தோணிதாசன் தேசுதாஸ், ரவி ராகவேந்திரா, கென்ரிக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாமுவேல் ராபின்சன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் துணைப் பாத்திரங்களுக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறார்கள்.
பிரின்ஸ் ஆண்டர்சனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது. சிறைக் கலவரத்தைக் காட்சிப்படுத்தி இருப்பது அவர் திறமைக்குச் சான்று.
இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை படத்தின் உணர்ச்சியில் இருந்து விலகி வேறு ஒரு அனுபவத்தைத் தர முயற்சிக்கிறது.
தமிழ் பிரபா, அஷ்வின் ரவிச்சந்திரன், சித்தார்த் விஷ்வநாத் ஆகியோரது எழுத்தில் நாம் ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிற உண்மைக் கதை மட்டும் உணர்ச்சிகரமாக இருக்கிறது அவர்களாக உருவாக்கிய புனை கதை எந்த நம்பகமும், இலக்கும் இல்லாமல் நகர்கிறது.
முதல் பாதியில் பரபரப்பாக நகரும் படம் பின் பாதியில் தொய்வடைந்து யாரை வில்லன் ஆக்குவது என்று தெரியாமல் மாறி மாறி ஒவ்வொருவரின் கோர்ட்டிலும் பந்தைப் போட்டு கடைசியில் ஒரு குழப்பு குழப்பி முடிக்கிறார்கள்.
விசாரணை செய்யும் நட்டியாவது கடைசியில் அதைக் கண்டுபிடித்து விடுவார் என்று பார்த்தால் அவரும் அரைகுறையாக அனுமானத்துடன் கேசை முடித்து கையெழுத்து போட்டு ஃபைலை மூடிவைக்கிறார்.
சென்ட்ரல் ஜெயிலில் வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு என்று தனி செல்லே இருக்க உள்ளூர் கைதிகளுடன் அவர் எப்படி பழகிக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரைக் கொன்ற எஸ்பி அந்த நாட்டு எம்பஸிக்கு எல்லாம் பயப்படவில்லை. ஆனால் செல்வராகவன் மீது கை வைப்பதற்கு மட்டும் தொடை நடுங்குகிறார்.
பட ஓட்டத்தில் அங்கங்கே மகாநதி விருமாண்டி படங்கள் நினைவுக்கு வந்த போகின்றன.
அப்பாவியாக சிறைக்குள் செல்லும் ஆர்.ஜே. பாலாஜி சம்பந்தமே இல்லாமல் சில நாட்கள் பழகிய பாலாஜி சக்திவேலைக் கொன்றதற்காக எஸ்பியைக் கொன்று ஏன் கொலைகாரர் ஆகவேணடும் என்பது புரியவே இல்லை. இத்தனைக்கும் பாலாஜி சக்திவேல் சாகும்போது ஆர்.ஜே.பாலாஜியை துரோகி என்று நினைத்துக் கொண்டே சாகிறார்.
சிறந்த படம் என்றால் அதில் ஒரு இஸ்லாமியர், ஒரு கிறிஸ்தவர், ஒரு இலங்கை தமிழர், ஒரு திருநங்கை இவர்களெல்லாம் இருந்தாக வேண்டும்… அதிலும் நல்லவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் ஒரு காட்சியில் புத்தர் வந்தாக வேண்டும் என்கிற கிளிஷேவுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம்.
இவற்றையெல்லாம் தாண்டி படத்தின் நோக்கம் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.
சொர்க்கவாசல் – நரகத்தின் நிழலில்..!
– வேணுஜி