December 12, 2024
  • December 12, 2024
Breaking News
November 29, 2024

மாயன் திரைப்பட விமர்சனம்

By 0 195 Views

முன்னொரு காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் மாயன்கள் உலகத்துக்கும், இப்போது இருக்கும் உலகத்துக்கும் ஒரு தொடர்புக் கோடு ஏற்படுத்தினால் அது எப்படி இருக்கும் என்று யோசித்து இருக்கிறார் இயக்குனர் ஜெ.ராஜேஷ் கன்னா.

‘தானுண்டு தன் வேலை உண்டு…’ என்று இருக்கும் ஐடி நிறுவன ஊழியர் நாயகன் வினோத் மோகனுக்கு அம்மாவின் ஆசைப்படி ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த லட்சியமும் இல்லை.

அப்படிப்பட்டவருக்கு திடீரென்று ஒரு மெயில் வருகிறது. ‘வீடு கட்ட லோன் வேண்டுமா என்று கேட்டா..?’ என்று கேட்காதீர்கள். அதில் வருவது ஒரு அதிர்ச்சியான செய்தி.

இன்னும் 13 நாட்களில் உலகம் அழியப் போகிறது என்பதுதான் அந்த அதிர்ச்சி செய்தி. 

முன்பு வாழ்ந்த மாயன்களின் வழி வந்தவர் என்பதால் வினோத்துக்கு மட்டும் அந்த ரகசியம் சொல்லப்படுகிறது. அதை அவர் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் அந்த செய்தி அவரை வந்து சேர்கிறது. 

அப்படி உண்மையிலேயே உலகம் அழிந்ததா அந்த 13 நாட்களில் அவர் அதற்குத் தன்னை எப்படி தயார்ப் படுத்திக் கொண்டார் என்பதெல்லாம்தான் திரைக்கதை.

புதுமுக நாயகன் வினோத் மோகனை, கொஞ்சம் வினோதமாக காட்ட வேண்டும் என்பதற்காகவே முகம் நிறைய ஒரு வித்தியாசமான தாடியையும் மீசையையும் வைத்திருக்கிறார்கள்.  அத்தனை முரட்டு தாடி மீசைக்குள்ளிருக்கும் அவர் முகத்தைப் பார்த்து அடையாளப்படுத்திக் கொள்வதற்கு நாம் பெரும்பாடு பட வேண்டி இருக்கிறது. இதில் அவருக்கான அட்வான்டேஜ், கொஞ்சூண்டு வெளியே தெரியும் முகத்துக்குள் பெரிய எக்ஸ்பிரஷன்கள் எதையும் காட்டி நடிக்க வேண்டியது இல்லை என்பது.

நாயகியாக நடித்திருக்கிறார் பிந்து மாதவி. அவருக்குக் கொடுத்திருக்கும் ஸ்கிரீன் ஸ்பேசும் மிகவும் சிறியதுதான்.

வழககப்படியே போலீஸ் அதிகாரியாகி தன் வழக்கப்படியே நடித்திருக்கிறார் ஜான் விஜய்,

வில்லன்களாக சாய் தீனா, ராஜ சிம்மன் – அவர்களும் தங்கள் வழக்கப்படியே.

சற்றே வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரஞ்சனா நாச்சியார் மற்றும் கஞ்சா கருப்பு,  மரியா, பியா பாஜ்பாயி உள்ளிட்டோரும் அங்கங்கே வந்து போகிறார்கள்.

அருமையான ஒரு லைனைப் பிடித்து விட்ட இயக்குனர் ராஜேஷ் கன்னாவுக்கு அதை சுவாரசியமான படமாக மாற்றுவதில் கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பாதிப் படத்துக்கு மேல் கிராபிக்சையே நம்பி இருக்கிறார்.

அந்த வகையில் ஒளிப்பதிவாளரை விட கிராபிக்ஸ் கலைஞர்களுக்குதான் அதிக வேலை இருந்திருக்கிறது. அவர்களும் பட்ஜெட்டுக்கு தக்கவாறு தங்களால் இயன்றதைச் செய்திருக்கிறார்கள். பல காட்சிகளில் கிராபிக்ஸ் பாராட்டும்படி அமைந்திருப்பது பிளஸ்.

எனவே ஒளிப்பதிவாளர் கே. அருண்பிரசாத்துக்கு பாதிப் படத்துக்குத்தான் வேலை இருந்திருக்கிறது.

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் கதைக்கு ஏற்ற பாடல்களுக்கான மற்றும் பின்னணி இசையைக் கொடுத்திருந்தாலும், வால்யூமை அநியாயத்துக்குக் கூட்டி வைத்திருக்கிறார்

சவுண்டான படமாக வரவேண்டும் என்பதற்காக சத்தத்தைக் கூட்டி வைத்தது யாருடைய ஆலோசனை என்று தெரியவில்லை. படம் முழுதும் அப்படி ஒரு சத்தம்..

ஒரு தேர்ந்த திரைக் கதையை எழுதி இருந்தால் இந்தப் படம் நிச்சயம் கவனிக்கப்பட்டு இருக்கும் – சிறந்த விமர்சனத்தையும் பெற்று இருக்கும். 

மாயன் – வித்தியாசமான முயற்சி – நமக்குத்தான் கொஞ்சம் அயர்ச்சி..!