December 27, 2025
  • December 27, 2025
Breaking News
December 23, 2025

சிறை திரைப்பட விமர்சனம்

இதுவரை எத்தனையோ காவல் துறை சம்பந்தப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. அதில் பெரும்பாலான படங்களில் நாயகனாக நடித்தவர்கள் சப் இன்ஸ்பெக்டராகவோ,  அசிஸ்டன்ட் கமிஷனராகவோ  வந்திருக்கிறார்கள்.

இதில் ஏட்டு என்று அழைக்கக் கூடிய ஹெட் கான்ஸ்டபிளாக நாயகன் வருவது புது விஷயம். அவரது பொறுப்பு எல்லை என்ன, ஒரு காவலர் பொதுமக்களின் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி.

அதற்கு முக்கியக்காரணமாக இருப்பவர் கதையை எழுதி இருப்பதுடன், திரைக்கதையில் பங்காற்றி இருக்கும் தமிழ்.

அதனாலேயே இது டாணாக்காரன் படத்தின் இரண்டாம் பகுதியோ என்று நினைக்க வைக்கிறது.

ஆனாலும் படமாக்கிய விதத்தில் வேறுபட்டு ஒரு புதிய அனுபவத்தை தருகிறது. 

Armed Reserve ஹெட் கான்ஸ்டபிள் ஆக இருக்கும் விக்ரம் பிரபு ஒரு கொலைக் குற்றவாளியை நீதிமன்றம் அழைத்து செல்லும்போது அந்த கைதியைக் காப்பாற்ற அவர் சென்ற பஸ் மீது தாக்குதல் நடக்கிறது. கொடூரமான கொலை வெறி தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் குற்றவாளியை தப்ப விடக்கூடாது என்றும் அவனை சுட்டுக் கொன்று விடுகிறார். அதனால் ஆர்டிஓ விசாரணைக்கும் ஆளாகிறார். 

இந்நிலையில் நண்பன் ஒருவனுக்காக அவன் அழைத்துச் செல்ல வேண்டிய விசாரணைக் கைதியான அக்ஷய் குமாரை இவர் அழைத்துப் போக நேர, அவனும் தப்பித்து விட, அதன் தொடர்ச்சியாக என்ன நடக்கிறது… இதன் முடிவு என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

விக்ரம் பிரபு ஏற்கனவே டாணாகாரனில் நடித்து விட்டதாலோ என்னவோ தானாகவே இந்த பாத்திரத்திற்கு தயாராகி விட்டார். கம்பீரமான பார்வை, கருத்தில் நேர்மை, உடலில் உறுதி என்று அத்தனை பாவங்களிலும் அவரது நடிப்பு ரத்தம் பாய்ந்திருக்கிறது. 

இரண்டாவது நாயகனாகும் எல் கே அக்ஷய்குமாரை விட அந்தப் பாத்திரத்திற்கு பொருத்தமான ஒருவரைத் தேடிப் பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. 

அவர் ஏற்றிருக்கும் இஸ்லாமிய இளைஞர் வேடத்துக்கு உடல் அளவிலும் பொருத்தமாக இருக்கும் அவர் பார்வையில் தெரியும் அப்பாவித்தனமும் அவர் நல்லவராகவே இருக்கக்கூடும் என்பதை அறிவிக்கின்றன. 

கொலையாளியாக இருந்தாலும் ஐந்து வருடங்களாக விசாரணைக் கைதியாகவே நீதிமன்றத்திற்கு வந்து போகும் அந்த பாத்திரத்தின் நிலையை ஒவ்வொரு அங்குலத்திலும அற்புதமாகக் காட்டி நடித்திருக்கிறார் அக்ஷய் கமார்.

அந்த அளவுக்கு இயக்குனர் சுரேஷ் அவரை கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி இருக்கிறார் என்பதும் புரிகிறது.

அவரது காதலியாக வரும் அனிஷ்மா அனில் குமாரையும் அவ்வளவு எளிதாக எடை போட்டு விட முடியாது. நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார் அனிஷ்மா.

அனிஷ்மாவின் தாய் மற்றும் சகோதரி, அவளது கணவராக நடித்திருப்பவர்களும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

விக்ரம் பிரபுவுடன் உதவிக்கு காவலர்களாக வரும் அத்தனை பேரும் அப்படியே காவல்துறையை சேர்ந்தவர்களாக நம்மை நம்ப வைக்கிறார்கள். 

அதிலும் ஒரு காட்சியில் வரும் மூணாறு ரமேஷ் மிரட்டி விடுகிறார். 

குறிப்பாக மூணாறு ரமேஷ் வரும் அந்த ஒரு காட்சி படத்தில் இயக்குனர் பேச விரும்பும் அரசியலின் இதயப்பகுதி எனலாம்.

இவை அனைத்துக்கும் முக்கியமாக முக்கிய காரணமாக இருப்பவர்கள் கதையை எழுதி இருக்கும் தமிழும் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரியும்தான்.

படத்தை நம்பகமாக நாம் உணர காரணமாக இருக்கும் இன்னும் இருவர் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கமும், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனும்.

ஆரம்பக் காட்சியிலேயே இருவரும் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறார்கள் அதற்கு பிறகு நாம் தளரவே இல்லை. அதில் பிலோமின் ராஜின் எடிட்டிங்குக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

இந்தப் படத்தின் ஆச்சரியமான விஷயமே இடைவேளையிலேயே படத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று நம்மால் யூகித்த விட முடிகிறது. ஆனாலும் அது எப்படி நடக்கிறது என்பதில் இயக்குனர் கொடுத்திருக்கும் அழுத்தம் ரசனைக்குரிய படமாக அதை மாற்றி விடுகிறது.

வழக்கமான சினிமாவின் சில கிளிஷேக்கள், கிரிஞ்சான காட்சிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி படத்தில் பல இடங்கள் நம்மை சிலிர்க்க வைத்து விடுகின்றன.

மேற்படி விஷயங்களை சீர்தூக்கி தன்னை செதுக்கிக் கொண்டால் தமிழின் அடுத்த நம்பிக்கைக்குரிய இயக்குனர் ஆக மலர்வார் சுரேஷ் ராஜகுமாரி. 

சிறை – சல்யூட்..!

– வேணுஜி