சாகித்ய அகாடமி விருது இந்திய அளவில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மதிப்பு மிக்க விருதாகும். இது இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் உள்ளிட்டு பலவகையான எழுத்தாளுமைகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த வருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் 53 வயதான எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றி அவர் எழுதிய சஞ்சாரம் நாவல் இந்த விருதை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்தத் தேர்வு இன்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 27 வருடங்களாக முழுநேர எழுத்தாளராக ‘சஞ்சாரம்’ செய்துவரும் எஸ்.ரா, 5 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுப்புகள், 24 கட்டுரைத் தொகுப்புகள், 3 மொழிபெயர்ப்பு நூல்கள், 9 நாடகங்கள், 4 குழந்தைகளுக்கான நூல்களைப் படைத்துள்ளார். இவை தவிர திரைப்பட திரைக்கதை, வசனங்களையும் எழுதிப் புகழ்பெற்றவர்.
குழந்தைகள் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள இவர், குறிப்பாக டிஸ்லெக்ஸியா பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கதை சொல்லல் முகாம்களை நடித்தி வருகிறார். திரைக்கதை எழுதும் திறமைக்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருவது தவிர சொற்பொழிவு மேடைகளிலும் புகழ்பெற்றவர் எஸ்.ராமகிருஷ்ணன்.
இன்று தான் பிறந்த ‘விருது நகரை’த் தன் விருதால் ‘சாகித்ய அகாடமி விருது நகராகப்’ புகழடைய வைத்திருக்கிறார்.
வாழ்த்துகள் எஸ்.ரா..!