ரஜினிகாந்த் நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி 2014 ஆம் ஆண்டு வெளியான ‘லிங்கா’ திரைப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்தார்.
பொன்குமரன் எழுதிய இந்தக் கதை முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக்கின் வாழ்க்கையை தழுவியது. இதற்கு கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்கினார். இந்நிலையில் படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர், ‘லிங்கா’ படத்தின் கதை தனது ‘முல்லை வனம் 999’ படத்தின் கதை என்று மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம் ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு படத்தை ரிலீஸ் செய்து கொள்ள உத்தரவிட்டது. இதில் உளைச்சலுக்கு ஆளான தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ரஜினி படத்தை சொன்னபடி, சொன்ன தேதியில் வெளியிட பத்து கோடி ரூபாயை நீதிமன்றத்தில் கட்டி படத்தை ரிலீஸ் செய்தார்.
இருந்தும் இந்த வழக்கு சுமார் 5 வருடங்களாக நடந்து கொண்டிருந்த நிலையில், தனது கதை என்பதற்கான சரியான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்க்க முடியாத ரவிரத்னம் வழக்கை வாபஸ் பெற்றுவிட, நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.
அதனால் ‘லிங்கா’ கதை பொன்குமரன் என்பவரால் எழுதப்பட்டது என்று நிரூபணம் செய்யப்பட்டதால், ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதையாசிரியர் பொன்குமரன் ஆகியோர் மீது இருந்த களங்கம் நீங்கியது. இது குறித்த விவரங்களை கே.எஸ்.ரவிகுமாரும், ராக்லைன் வெங்கடேஷும் மீடியாக்களிடம் தெரிவித்தனர்.
அப்போது பேசிய கே.எஸ்.ரவிக்குமார், “நான் ஒரு கதையை சொல்லும் போது அது சரியாக ரிஜிஸ்டர் செய்திருக்கிறதா என்று பார்த்து தான் செய்வேன். எதிர் தரப்பில் தாக்கல் செய்த எல்லா சாட்சியங்களையும் விசாரித்த பின் எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து நல்ல தீர்ப்பை வழங்கினார்கள். பல மீடியாக்களிலும் இது திருடப்பட்ட கதை என்பதாகவே செய்திகள் வெளியான நிலையில் கதை பொங்குமரன் எழுதியதுதான் என்ற உண்மையை அதே மீடியாக்களிடம் சொல்லவே உங்களை சந்திக்கிறோம்.
கதைத் திருட்டு சம்பந்தப்பட்ட கேஸ்களில் இப்படி ஒரு சாதகமான தீர்ப்பு வந்தது எங்களுக்குத் தான் என்று நினைக்கிறேன். கதையை முதலில் ரிஜிஸ்டர் செய்யுங்கள். அதன்பிறகு ரைட்டர் யூனியன் இருக்கிறது அங்கு செல்லுங்கள்..!” என்றார்.
தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், “படம் எடுத்த சவாலைவிட விட திடீரென்று பத்து கோடி கட்ட நேர்ந்தது பெரிய கஷ்டமாக இருந்தது. உடனே வங்கியில் பேசி எப்படியோ சமாளித்தோம். ஒருவேளை அந்த படம் அந்த சந்தர்ப்பத்தில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் என்னவாகி இருக்கும்.
வெளியீட்டு வேளையில் இப்படி வந்து ப்ளாக் மெயில் செய்வது சரியல்ல. அந்த நேரத்தில் ரஜினி சார் எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்தார். இந்தப்படப் பாடலிலேயே ‘உண்மை ஒருநாள் வெல்லும்… உலகம் உன் பேர் சொல்லும்..” என்று வரும். அது இப்போது நிரூபணம் ஆனது. அதனால் அவர்கள் மேல் நான் வழக்கு எதுவும் போடப்போவதில்லை. இனி இப்படி நடக்கக்கூடாது..!” என்றார்.
ஆக, நீதிமன்றம் ரஜினி, கே.எஸ்.ரவிகுமார், ராக்லைன் வெங்கடேஷ் மீதிருந்த களங்கத்தைத் துடைத்து விட்டது..!