பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அதிரடி முடிவெடுத்த ஒரு அதிகாரியின் கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயகன் நட்டி, லாக் அப்பில் அடைத்து வைத்திருக்கும் சில குண்டர்களை அமைச்சரின் மகன் ஒருவன் தனது செல்வாக்கினால் அத்துமீறி வெளியே கொண்டு செல்கிறார்.
அந்நேரம், மாநிலத்திற்கு பிரதமர் வருவதாக இருக்க அவரது பாதுகாப்புக்காக நட்டி செல்கிறார்.
இன்னொரு பக்கம் தனது மகனை காணாமல் அருண் பாண்டியன் அதே காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுக்க, எஸ்.ஐ யாக இருக்கும் மூணாறு ரமேஷ் அதை கண்டு கொள்ளாமல் விடுகிறார்.
மகனைப்பற்றிய தகவல் அறிய போலீஸ் ஸ்டேஷனுக்கு மீண்டும் அருண் பாண்டியன் வர, திருமண பத்திரிகை கொடுக்க பெண் எஸ்.ஐ அக்ஷரா ரெட்டி வர, அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் கணினி வழியே வருகிறது.
அதன்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே வந்தவர்கள் வெளியே செல்ல நினைத்தால் குண்டுகள் வெடிக்கும் எனவும் மூணாறு ரமேஷ் அமர்ந்திருக்கும் நாற்காலியின் அடியிலும் ஒரு வெடிகுண்டு பொருத்தப்பட்டிருக்க அவர் எழுந்தால் குண்டு வெடிக்கும் எனவும் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளைகளும் வருகிறது.
மாநிலத்திற்கு பிரதமர் வரும் வேளையில் தேவையற்ற பதற்றம் வேண்டாம் என்று காவல்துறை மேலதிகாரிகள் ரகசியமாக அந்தப்பிரச்சினையை முடிக்க நினைக்கிறார்கள்.
காவல் நிலையத்துக்கு குண்டு வைத்தது யார் என்பதில் ஒவ்வொருவர் மீதான சந்தேகம் திரும்ப, அது யார், ஏன் என்பதுதான் மீதிக் கதை.
கதை நாயகன் நட்டி இடைவேளைக்கு முன் இரண்டு இரண்டு காட்சிகள் மட்டுமே வருகிறார். படம் கிளைமாக்ஸ் வரும் வேளையில் மீண்டும் உள்ளே வந்து முடிச்சை அவிழ்க்கிறார். அதன் மூலம் அவரே ஹீரோ என்பது நிரூபணம் ஆகிறது.
அவருக்கு ஈடான பாத்திரத்தில் நடித்திருக்கும் அருண் பாண்டியன், வீட்டிற்கு அதிகமாகவே நடித்திருக்கிறார். அவர் மீது ஒரு கட்டத்தில் சந்தேகம் திரும்பும் போது அதை நம்ப முடிகிறது.
உனக்கு போலீஸ் ஸ்டேஷன் காக்கி சட்டைகள் உள்ளேயே நடக்கும் கதையில் கொஞ்சம் ரிலீஃப் பண்ண பெண் சப் இன்ஸ்பெக்டர் அக்ஷரா ரெட்டி அன் யூனிபார்ம் அணிந்து வருவது ஆறுதல் அளிக்கிறது.
அதேபோல் நிலைமையை புரிந்துக்கொண்டு செயல்படுவதில் அவரை கதை நாயகியாகவும் ஆகிறார்.
எழுந்தால் குண்டு வெடிக்கும் என்ற நிலையில் மூணாறு ரவி காட்டுப்பதட்டம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
நீதிபதியாக வரும் வினோதினியும் சூழ்நிலைக் கைதியாவது பரிதாபம்.
ஆனால் இப்படி போலீஸ் ஸ்டேஷனுக்குள் கோர்ட் அமைத்துக் கொள்ள முடியுமா என்பதெல்லாம் லாஜிக் இடிக்கும் விஷயங்கள்.
ஆதித்யா சிவகுமார் – யுவினா இளம் ஜோடி கவர்கிறது. அதிலும் குழந்தையாக பார்த்த யுவினாவை குமரியாகப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது.
கைதியாக வரும் தங்கதுரை, அடாவடி அமைச்சர் உள்ளிட்டோர் பாத்திரங்களுக்கு பொருத்தமாக இருக்கிறார்கள்.
குணா பாலசுப்பிரமணியனின் பின்னணி இசை பொருத்தமாக இருக்கும் அளவுக்கு பாடல்கள் ஈர்க்கவில்லை. தந்தை பாசப் பாடல் மட்டும் ஓகே.
ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷ், ஒரே இடத்தில் படமாக்க நேர்ந்திருப்பதால் கோணங்களை மாற்றிப் போட்டு படத்தை முடித்திருக்கிறார்.
ஒரே இடத்தில் நிகழும் கதையை நகர்த்துவது கடினம். ஆனாலும் அந்த.சவாலை சாமர்த்தியமாக சமாளித்திருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் சுப்பிரமணியன் ரமேஷ்குமார்.
ரைட் – போலாம் ரைட்… ரைட்..!
– வேணுஜி