October 30, 2024
  • October 30, 2024
Breaking News
July 6, 2023

ராயர் பரம்பரை திரைப்பட விமர்சனம்

By 0 225 Views

சாதி மத பேதங்களைச் சுட்டிக்காட்டி நிறைய படங்கள் வந்து கொண்டிருப்பதால் இதுவும் அப்படிப்பட்ட ஒரு சீரியசான படம் என்று நினைத்து விட வேண்டாம். சிரிப்பை சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இந்தப் பட இயக்குனர் ராம்நாத்.டி.

கதை நடக்கும் கிராமத்தில் ராயர் என்கிற பாத்திரத்தில் வரும் ஆனந்தராஜ் வைத்ததுதான் சட்டம். அதிலும் அவரது தங்கை காதல் திருமணம் புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட, அவரது பெண் குழந்தையான சரண்யா நாயரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.

முகப்புத்தகத்தில் சரண்யாவை ஃபாலோ பண்ணிய காரணத்துக்காக ஒருவன் கையை சிதைக்கிறார். அதற்கேற்றாற் போல் சோதிடரும் அவள் திருமணம் காதல் திருமணமாகத்தான் நடைபெறும் என்று சொல்லி வைக்க, ராயரின் முழு நேர வேலையே ஆயராக மாறி மகள் பின்னாலேயே அலைந்து கொண்டிருக்க நேர்கிறது.

அதே ஊரில் இருக்கும் மொட்டை ராஜேந்திரன் கா.கா.பி.க என்ற கட்சியை நடத்திக் கொண்டு காதலர்களைப் பிரிக்கும் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கிறார். அப்படியே யாராவது காதலித்தாலும் அவர்களுக்கு இன்ஸ்டன்ட்  தாலியைக் கொடுத்து திருமணமும் செய்து வைக்கிறார்.

அதே கட்சியில் செயலாளராக இருக்கும் (கழுகு) கிருஷ்ணாதான் படத்தின் நாயகன். காதலுக்கு எதிரியாக அவர் செயல்பட்டாலும் கிருத்திகாவும், அன்ஷுலா ஜித்தேஷ் தவானும் அவரை துரத்தித் துரத்திக் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் அவர் சரண்யாவைதான் ஒரு கட்டத்தில் காதலித்துக் கைப்பிடிப்பார் என்பதை நூற்றாண்டு கால சினிமா நம் மரபணுக்களில் ஏற்றி வைத்திருக்கும் எண்ணம் கணிக்க, அந்த எண்ணத்துக்குக் குந்தகம் வைக்காமல் திரைக்கதை போய் அப்படியே முடிகிறது. 

அது எப்படி என்பதில்தான் இயக்குனர் தனது திறமையைக் காட்டி இருக்க வேண்டும். அவரும் காமெடி என்ற பெயரில் நம்மைச் சிரிக்க வைக்க படாதபாடு படுகிறார். இரண்டு மணி நேர அவரது போராட்டத்தில் கிளைமாக்சில் கொஞ்சம் சிரிக்க முடிகிறது.

நாயகன் கிருஷ்ணாவின் எனர்ஜிக்கு போதுமானதாகக் கதை இல்லாவிட்டாலும் கிடைத்த கேப்பில் எல்லாம் தனது அபார சக்தியை வெளிப்படுத்தி நடனம், ஆக்சன் என்று வெளுத்துக் கட்டி இருக்கிறார்.

சரண்யா நாயருக்கு வழக்கமான ஹீரோயின் வேடம். இடைவேளை வரை அவ்வப்போது வந்து போகிறவர், கிருஷ்ணா சொல்லும் பிளாஷ்பேக்கில் இருந்து கொஞ்சம் முக்கியத்துவம் பெறுகிறார்.

கிருஷ்ணாவைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் இரண்டாவது மூன்றாவது நாயகிகள் எங்கிருந்து வருகிறார்கள், எதற்காக அவரைக் காதலிக்கிறார்கள் – அவர்களுக்கு வீடு வாசல் ஏதாவது இருக்கிறதா என்கிற எந்த விதமான பயோடேட்டாவும் படத்தில் சொல்லப்படவில்லை.

ஆனந்தராஜ் வழக்கம்போல் வில்லனாக அதே சமயத்தில் காமெடியனாகவும் வருகிறார். அவர் சொல்லும் “ஐ நோ, ஆல் டோன்ட் நோ… ஆல் டோன்ட் நோ, ஐ நோ…” என்கிற ஆங்கிலப் பதம் ஆங்கிலத்தையே பதம் பார்க்கிறது.

படத்தில் காமெடிக்கென்று வரும் மொட்டை  ராஜேந்திரன், மனோபாலா, பாவா லக்ஷ்மணன், சேஷு, டைகர் தங்கதுரை போன்றோர் நாம் எதிர்பார்ப்பதைத் தாண்டி இயக்குனர் எதிர்பார்த்த நகைச்சுவையைக் கொடுத்திருக்கிறார்கள்.

கிருஷ்ணாவின் நண்பனாக வரும் கல்லூரி வினோத் பாவம், கிருஷ்ணாவுக்காக நிறைய அடி வாங்குகிறார்.

இரண்டாவது பாதியில் இலவச இணைப்பாக  கஸ்தூரியும், கிளைமாக்ஸில் பவர் ஸ்டார் சீனிவாசனும் வருகிறார்கள்.

படத்தில் பவர் ஸ்டாருக்கு கொடுக்கிற ‘சீமான் செங்கல்வராயன்’ பில்டப்பும் அவர் வந்து இறங்குகிற விதமும் அதுவரை பொறுமை காத்த நமக்கு ஆறுதலான சிரிப்பைத் தருகிறது. இந்த காமெடியை ‘நாம் தமிழர்’ செந்தமிழன் சீமான் கண்ணில் காட்டாமல் இருப்பது நல்லது.

கணேஷ் ராகவேந்திராவின் இசை இந்தப் படத்துக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்திருக்கிறது. பிற பட பாடல்களின் வாடை அடித்தாலும் பாடல்கள் கமர்சியலாக இருக்கின்றன.

பளிச்சென்று துல்லியமாகப் படம் பிடித்திருக்கும் விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவுக்கு பாராட்டுகள்.

மோகன் ராஜாவின் பாடல்களில் வாழ்க்கை பற்றிய தத்துவ பாடல் கவனிக்க வைக்கிறது.

ராயர் பரம்பரை – ராவான அலப்பறை..!