April 22, 2024
  • April 22, 2024
Breaking News
July 6, 2023

பம்பர் திரைப்பட விமர்சனம்

By 0 508 Views

சோற்றுக்கு லாட்டரி அடித்து திருட்டு வேலைகளில் ஈடுபடும் ரவுடி ஒருவனுக்கு லாட்டரியில் ‘பம்பர் ‘ அடித்தால் என்ன ஆகும் என்கிற கதை. அதை மதம் கடந்த மனிதம் குழைத்துச் சொல்கிறார் இயக்குனர் செல்வகுமார்.

தூத்துக்குடி பகுதியில் ரவுடியாக இருக்கும் நாயகன் வெற்றி, நண்பர்களுடன் சேர்ந்து ராவடியான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். சின்ன மீன்களுக்கு தூண்டில் போட்டு அலுத்துப் போன அவர் பெரிய மீனைப் பிடிக்க வலை வீச, ஆனால், அந்தோ… போலீஸ் விரிக்கும் வலைக்குள் வந்துவிடுகிறார்.

அதிலிருந்து தப்ப சபரிமலைக்கு மாலை போட்டு யாத்திரை செல்ல, பம்பையில் ஒரு லாட்டரி சீட்டு விற்பவருக்கு மனமிரங்கி 10 கோடி பரிசு பெறக்கூடிய பம்பர் லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கி, அசிரத்தையாக அங்கேயே விட்டுவிட்டு ஊர் திரும்பி விடுகிறார்.

அந்த லாட்டரிச் சீட்டை பத்திரப்படுத்தி வைத்திருக்கும் லாட்டரிச் சீட்டு விற்பனையாளரான இஸ்மாயில் என்கிற ஹரிஷ் பெராடிக்கு ஒரு இன்ப அதிர்ச்சித் தகவல் கிடைக்கப் பெறுகிறது – அதேதான்..! அவர் கைப்பற்றி வைத்திருக்கும் லாட்டரி சீட்டுக்கு 10 கோடி விழுந்திருக்கிறது.

அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் சுவாரஸ்யம்.

வெற்றியின் பார்வையே அவரது ரவுடிப் பாத்திரத்திற்கு மிகச் சரியான பார்வையைக் கொடுத்து விடுகிறது. பேச்சு, உடல் மொழி எல்லாவற்றிலும் அந்தப் பாத்திரத்தைத் தூக்கி நிறுத்தி விடுகிறார் வெற்றி.

சொல்லப் போனால் வெற்றிதான் படத்தின் நாயகனா அல்லது இஸ்லாமியராக வரும் ஹரிஷ் பெராடிதான் நாயகனா என்பதில் நமக்கு ஒரு குழப்பமே வந்துவிடுகிறது. ஏனென்றால் ஹரிஷ் பெராடியின் பாத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இதுவரை வந்த அனைத்துப் படங்களிலும் கண்களை இடுக்கி வில்லனாகவே நம்மை பயமுறுத்தி இருக்கும் ஹரிஷ் பெராடிக்கு இந்தப் படத்தில் அத்தனைப் பாவங்களையும் பம்பையில் கழுவிக்கொள்ள ஒரு பாத்திரம் வாய்த்து இருக்கிறது.

“இதைத்தான் இத்தனை நாளா எதிர்பார்த்தேன்…” என்கிற அளவில் ஒரு வயதான இஸ்லாமியராக… அப்பாவித்தனம் மற்றும் அப்பழுக்கற்ற ஈகை குணம் என்று இஸ்மாயிலாகவே வாழ்ந்திருக்கிறார் ஹரிஷ் பெராடி. இந்தப் பாத்திரத்துக்கு அவர் நிச்சயம் ‘பம்பரா’ன  பல விருதுகளைப் பெறுவார்.

இந்த இருவர்தான் இரண்டு மணி நேரம் தாண்டிய கதையை நிர்ணிக்கிறார்கள் என்ற அளவில் மற்றப் பாத்திரங்களில் வருபவர்களில் காவல்துறை அதிகாரி அருவி மதனும், ஏட்டு கவிதா பாரதியும் கவனிக்க வைக்கிறார்கள்.

ஆனால் ஏக பில்டப் கொடுத்து அறிமுகமாகும் அருவி மதன்தான் அடுத்து கதையை நகர்த்திச் செல்வார் என்று பார்த்தால் அடுத்த சில காட்சிகளிலேயே அவரை ஆப் செய்து விடுகிறார்கள். ஆனால் ‘கன்னிங்’ போலீஸ் கவிதா பாரதி கடைசி வரை வந்து பேராசைப் பட்டு ‘பல்பு’ வாங்குவது ஆறுதல்.

வெற்றியின் முறை பெண்ணாக வரும் ஷிவானி நாராயணன், பாவாடை தாவணியில் கூட பளிச்சென்று இருக்கிறார்.

வெற்றியின் நண்பர்களாக வருபவர்கள், ஹரிஷ் போராடியின் குடும்பத்தினராக வருபவர்கள் அத்தனை பேரும் பாத்திரத்தில் ஒன்றித் தெரிவது பாராட்டும்படி இருக்கிறது.

முதல் பாதியில் சாவதானமாகச் செல்கிற கதை இரண்டாவது பாதியில் சூடு பிடிக்கிறது. இதுதான் முடிவாக இருக்கும் என்று நமக்குப் புரிகிற வேலையில் ‘அதுவே முடிவாக இருந்து விடாது’ என்கிற அளவில் நம்மைத் திசை திருப்ப நிறைய மெனக்கெடல்களை மேற்கொண்டு இருக்கிறார் இயக்குனர்.

அந்த மெனக்கடல்களில் லாஜிக் மீறல்கள் ஏற்படுவது அவருக்குத் தவிர்க்க முடியாததாகி இருக்கிறது.

ஹரிஷ் பெராடி மீது எந்த விதத்திலும் வெற்றிக்கு சாஃப்ட் கார்னர் வந்து விடக்கூடாது என்று நினைத்த இயக்குனர் கடைசி வரை அவரை சந்தேகப்பட்டு கொண்டே இருப்பதில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை.

அதேபோல் வெற்றிக்கு ஐயப்பன் மாலை போட்டு நல்ல வழியில் திருப்பி விட்டதற்காக நடு ரோட்டில் வைத்து மாலை போட்ட குருசாமியின் காலில் நெடுஞ்சாங்கிடையாக விழும் வெற்றியின் அம்மா ஆதிரா பாண்டிலஷ்மி, தன் மகனின் வாழ்க்கையையே திருப்பிப் போடப் போகும் 10 கோடி ரூபாய் லாட்டரிச் சீட்டை கையில் கொண்டு வந்து கொடுக்கும் ஒரு பெரியவரை சந்தேகப் பார்வை பார்த்து வீட்டுக்குள் கூட அனுமதிக்காமல் ரோட்டிலேயே உட்கார வைத்திருப்பது அநியாயத்துக்கு லாஜிக் மீறல்.

அதே காரணத்துக்காக ஹரிஷ் பெராடியின் அத்தனைக் குடும்பச் சுமைகளையும் நமக்குக் கடத்தும் இயக்குனர் வெற்றியின் கண்களில் ஒரு கஷ்டத்தையும் காட்டாமலேயே கதையை நகர்த்தி செல்கிறார். இதுவும் ஒரு லாஜிக் சறுக்கல்.

இதெல்லாம் கிளைமாக்சை நாம் யூகித்து விடக்கூடாது என்பதற்காக அவர் செய்த தந்திரங்கள். ஆனால் அதையும் மீறி நாம் யூகித்தபடியே தான் கிளைமாக்ஸ் முடிகிறது.

இந்த சில காரணங்களால் நல்ல படமாக இருந்த போதிலும் நம்பகமான படமாக இருப்பதில் பம்பர் பின் தங்குகிறது.

அதேபோல் நறுக்கென்று சொல்லவேண்டிய கதையை நீளமாக இழுத்து இருப்பதிலும் ஒருவித சோர்வு வருகிறது. 

மத நல்லிணக்கம் சொல்லும் படமாக இது இருந்தாலும் இந்தக் கதைக்கு அது தேவையில்லாததாக இருக்கிறது.

இயக்குனர் சபரிமலை ஐயப்பனின் தீவிர பக்தர் போலிருக்கிறது. ஆரம்பத்தில் ‘பம்பா’ என்ற பெயர் வைத்து கடைசியில் பம்பர் என்று மாற்றியிருப்பாரோ என்று கூட சந்தேகம் வருகிறது.

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் உணர்வுகளை மீட்டித் தருகிறது. பின்னணி இசைத்திருக்கும் கிருஷ்ணாவுக்கும் பாராட்டுகள்.

தூத்துக்குடி, சபரி மலை, கேரள ட்ரோன் ஷாட் என்று கண்ணில் ஒற்றிக் கொள்ளும் ஒளிப்பதிவைத் தந்த வினோத் ரத்தினசாமிக்கும் சபாஷ் சொல்லலாம்.

படம் நெடுக பேசப்படும் தூத்துக்குடி மண்ணின் உச்சரிப்பைக் கேட்க இதமாக இருக்கிறது.

எல்லா சுயநலமிகளுக்கும் அபரிமிதமான பணம் ஒன்று மட்டுமே ஆறுதல் தரும் என்பது போன்ற முடிவும் கூட ஏற்புடையது அல்ல. அதை வைத்து அவர்களது சுயநலம் இன்னும் பெருகத்தான் செய்யும்.

பம்பர் – அடிக்கிற படமாக இல்லாவிட்டாலும் கொடுத்த காசுக்கு திருப்தியைத் தரும்..!