துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சந்தித்த ரஜினிகாந்த் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது…
இங்கே நடந்த கலவரத்தில் வன்முறை செய்தது சமூக விரோதிகளின் செயல். அவர்கள்தான் உள்ளே நுழைந்து போராட்டத்தைத் திசை திருப்பியிருக்கின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அப்படித் தான் நடந்தது. இந்த மாதிரியான சம்பவம் இனி நடக்கக் கூடாது. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். சமூக விரோதிகளின் வசம் சிக்கி விடக்கூடாது.
இப்படிப்பட்ட சமூக விரோதிகளின் செயல்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அந்த விஷயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பாராட்டுகிறேன். அவர் சமூக விரோதிகளை அடக்கி வைத்திருந்தார். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அடக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இனிமேல் அந்த ஆலையைத் திறக்க முடியாது. மனசாட்சி இருந்தால் அந்த ஆலையைத் திறக்க நீதிமன்றம் செல்ல மாட்டார்கள்.
தூத்துக்குடியில் அசாம்பாவிதம் நடந்தததற்கு உளவுத்துறைதான் பொறுப்பு. இன்டெலிஜென்ஸ் தவறால்தான் இது நடந்துள்ளது..
எந்த இடம் என்றாலும் காவலர்கள் மேல் கைவைப்பதை ஏற்க முடியாது. காவலர்களை அடித்தவர்களை சமூக விரோதிகளாக அறிவிக்க வேண்டும். காட்சிகளில் பார்த்து அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கித் தர வேண்டும். அவர்களையே தாக்கினால் இத்தனை கோடி மக்களுக்கு எப்படி பாதுகாப்பு தர முடியும்..?
தமிழகம் போராட்டக் களமாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அடிக்கடி போராட்டம் நடப்பது தீர்வாகாது. இப்போதே விவசாயம் இல்லை. தண்ணீர் இல்லை. போராட்டங்களின் மூலம் இங்கே தொழில்கள் வளராது. வேலையில்லா திண்டாட்டம் பெருகும். அனைத்து பிரச்சினைகளுக்கும் நீதிமன்றம் மூலமே தீர்வு காண முயல வேண்டும்.
பொறுப்பில் இருக்கும் அரசு மக்களுக்குத் தேவையானதை சரியாக செய்ய வேண்டும். ஒரு ஆலையோ அல்லது வேறு ஒன்றோ தொடங்குவதற்கு முன் அதைப்பற்றி முழு சோதனை நடத்திய பின்னரே ஆரம்பிக்க வேண்டும்.
இதற்காக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தீர்வாகாது. எல்லா கட்சிகளும் அரசியல் செய்கிறார்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நேரம் வரும் போது அவர்கள் நியாயத்தைக் காட்டுவார்கள்…!”
தூத்துக்குடி துப்பக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயம் பட்டவர்களுக்கு தலா 10,000 ரூபாயும் அறிவித்து முதற்கட்டமாக ஒன்பது பேர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கினார் ரஜினி.