April 24, 2024
  • April 24, 2024
Breaking News
December 31, 2022

ராங்கி திரைப்பட விமர்சனம்

By 0 401 Views

ஹீரோ இல்லாத கதையில் ஹீரோயினே அந்த வேலையை ஏற்பதுதானே முறை..? அப்படி த்ரிஷாவே இந்த படத்தின் ஹீரோவாக… அதிலும் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய படம் இது.

யாருக்கும் எதற்கும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்ட நாயகி திரிஷா கதை நாயகியாக… பெயரும் அதற்கேற்றாற்போல் தையல் நாயகி என்ற பாத்திரம் ஏற்கிறார். படத்தில் அவர் யாருக்கும் அஞ்சாத பத்திரிகையாளர்.

ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை வடிவத்துக்கு அற்புதமான திரைக்கதை அமைத்து அதை உலகத் தரத்தில் உருவாக்கி இருக்கிறார் அவரது சீடரான இயக்குனர் சரவணன்.

முகப்புத்தகத்தில் உருவாகும் சாதாரண வயசுக் கோளாறு காதல், தோண்டத் துருவ இப்படி ஒரு சர்வதேச பிரச்சனையாக உருவெடுக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது.

த்ரிஷாவின் அண்ணன் மகள் அனஸ்வரா ராஜன் மீது முகப்புத்தகத்தில் மோகம் கொண்ட வாலிபன் விடுக்கும் மிரட்டலை ‘தட்டிக்’ கேட்பது மட்டுமல்லாமல் அப்படி ஜொள் விட்ட அத்தனை பேரையும் நேரில் வரவழைத்து நையப்புடைத்து அனுப்புகிறார் த்ரிஷா. அந்தக் காதலர்களில் ஒருவன் மட்டும் மிஸ்ஸாகி இருக்க, அவன் இருப்பது லிபியாவில் என்று தெரிகிறது.

அவன் யார் என்று விசாரிக்க ஆரம்பித்தால் லிபியப் புரட்சிப்படை போராளி என்று தெரிகிறது. உலகின் பார்வையில் தீவிரவாதி. போர்க்களத்தில் நடுவே பூவாக, அவன் அனஸ்வராவைக் காதலிக்கிறான். அந்தக் காதலில் உண்மையும், நேர்மையும் இருக்க, அவனை வைத்து பரபரப்பான செய்தி வெளியிட்டு பெயர் வாங்கிக் கொள்ளும் த்ரிஷா, அந்தக் காரணத்துக்காகவே அண்ணன் மகள் கணக்கில் அவனைத் தொடர்பில் வைத்திருக்கிறார். 

மோப்பம் பிடிக்கும் சி.பி.ஐ யும், சர்வதேச  வல்லரசுப் படைகளும் சும்மா இருக்குமா..? த்திஷாவையும், அண்ணன் மகளையும் பகடைக் காயாக்கி அந்தத் தீவிரவாதியை கொல்ல திட்டம் தீட்ட, அந்த முயற்சி என்ன ஆனது, தீவிரவாதியின் எல்லை தாண்டிய காதல் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்.

பொன்னியின் செல்வனில் பார்த்த குந்தவையா இது என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவில் அல்ட்ரா மாடல் பெண் பத்திரிகையாளராக அசத்துகிறார் த்ரிஷா.

அண்ணன் மகளை வம்புக்கிழக்கும் வாலிபனைத் தர தர என்று இழுத்துக் கொண்டு போய் நாளை சாத்து சாத்தும் இடத்தில் சிறுத்தை போல் சீறுபவர், லிபிய மண்ணில் தன்னை நோக்கி பாயும் குண்டு மழைகளுக்கு இடையில் வேங்கையாய் பாய்கிறார்.

போலீசோ, சிபிஐயோ சர்வதேசப் படையோ எல்லோரையும் ஒரு எள்ளி நகையாடும் பார்வையாலேயே எதிர்கொள்ளும் த்ரிஷாவின் பாத்திரம் அற்புதம். அவரது ஆக்சன் காட்சிகள் எல்லாம் ‘கில் பில்’ ரகம்.

அவருக்கு அடுத்து நம் மனதை கவர்பவர் அவரது அண்ணன் மகளாக வரும் அனஸ்வரா ராஜன்தான்.

உண்மையில் ஒரு முகப்புத்தக கணக்கே இல்லாமல் பிரச்சனையில் சிக்குவதில் இருந்து லிபிய போராளி காதலிக்கும் இந்தியப் பெண்ணாவது வரை அவருடைய தொடர்பு அவற்றில் எதுவுமே இல்லாமல் இருப்பதுதான் நெகிழ்வான விஷயம்.

அத்தை எதற்காக தன்னை கோபிக்கிறாள், எதற்காக தன்னை ஆடைகளை அவிழ்க்க சொல்கிறாள், எதற்காக வெளிநாடு கூட்டிச் செல்கிறாள் என்றெல்லாம் புரியாமல் அப்பாவித் தனத்துடன் தெரியும் அந்தப் பால் வடியும் அழகில் அவளுக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்ற பயம் நம் மனதைப் பிசைகிறது.

தான் காதலிக்கும் பெண் எந்த தேசத்தில் எந்த ஊரில் எந்த மூலையில் வாழ்கிறாள் என்று தெரிந்து கொள்ளாமல் உருகி உருகி காதலிக்கும் ஆலிம் என்ற அந்த லிபிய காதல் போராளியை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. தன்னுடன் தொடர்பில் வந்து தன்னை காதலிப்பது யார் என்பது கூட தெரியாமல் இருக்கும் அவனது அப்பாவித்தனமும் கூட நெகிழ வைக்கிறது.

உயிர்விடும் கடைசி தருணத்தில் தன்னுடைய காதலியைத் தன் மண்ணிலேயே பார்த்துவிட்ட மகிழ்வில் அவன் சாய்வதும் அவன் எதற்காக தன்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே சாகிறான் என்பது தெரியாமல் அனஸ்வரா விழிக்க… இது இதுவரை இல்லாத – இதுவரை சொல்லாத காதலாக அது இருக்கிறது.

அந்த இடத்தில் இயக்குனருக்கு கைதட்ட தோன்றுகிறது.

அத்துடன் கடைசி செய்தியாக அவன் உலகுக்கு விட்டு செல்லும் வாசகம், “எங்கள் நாட்டு வளம்தான் என்னையும் என் தலைவனையும் கொன்றது. உங்கள் நாட்டிலும் நிறைய வளங்கள் உள்ளன. எச்சரிக்கையாக இருங்கள்..!” என்பதுதான் அது.

சர்வதேச எதேச்சதிகார ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முழக்கம் அது. அங்கே ஒரு முறை இயக்குனருக்கு கைதட்டுகிறோம்.

தமிழில் பேசாமல் இருந்திருந்தால் இதை ஒரு தமிழ் படம் என்றே கொள்ள முடியாது. அப்படி ஒரு உலக தரத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. லிபியா சென்று படம் பிடிக்க வசதி இல்லாததால் அந்தப் பகுதிகளை உஸ்பகிஸ்தானில் எடுத்திருக்கிறார்கள்.

அதன் பாராட்டுக்கள் அனைத்தையும் இயக்குனரையும் ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேலையும் சென்று சேர வேண்டும். ஸ்டண்ட் மாஸ்டருக்கும் அந்தப் பாராட்டில் ஒரு பகுதி போய் சேர்ந்தாக வேண்டும்.

இனிமையான பாடலிலும், பரபரப்பான பின்னணி இசையிலும் இசையமைப்பாளர் சி.சத்யாவின்  ஸ்கோர் எகிருகிறது.

லிபியா, அமெரிக்கா என்று பெயர்கள் வரக்கூடாது என்று ஏகப்பட்ட இடங்களில் வசனங்களை மௌனமாக்கி இருக்கிறார்கள். ஆனாலும் நமக்கு அதெல்லாம் புரிந்து விடுகிறது என்பதுதான் சென்சருக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி.

ராங்கி – எல்லை தாண்டிய காதல் தீவிரவாதம்..!