மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் விஜய் ஒரு பக்கம் ‘தலைவி’ என்று எடுக்கும் முயற்சியிலிருக்க, இன்னொரு பக்கம் கௌதம் மேனன் அதே ‘ஜெ’வின் பையோபிக் ஒன்றை சீரியலாக எடுத்து விடுகிறார்.
ஆனால், அதற்கான அறிவிப்பில் ‘ஜெ’ பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாமல் ‘ஒரு பிரபல அரசியல்வாதி’யின் கதை என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள். ‘குயின்’ என்று தலைப்பிடப்பட்ட அந்த சீரியல் பற்றி இன்று வெளியான தகவல் குறிப்பில்…
‘குயின்’ சீரியலின் கதை நாமறிந்த ஒரு பிரபல அரசியல் வாதியின் ஆளுமை மற்றும் அவருடைய குணாதிசயங்கள் மற்றும் இரும்பு கரம் கொண்டு ஆட்சி செய்த திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரம்யா கிருஷ்ணன் இதில் பிரபல அரசியல் வாதியாக நடித்திருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் இந்த சீரியலை எழுதியிருக்கிறார் ரேஷ்மா கட்டாலா. இதை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கியுள்ளனர்.
MX Player ல் பார்க்கக்கூடிய இந்த முன்னணி தமிழ் வெப் சீரியல், பிராந்திய பொழிகளான இந்தி, தெலுங்கு மற்றும் பெங்காலி, மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது.
இந்த குயின் வெப் சீரியல் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான MX Player ல் கட்டணமில்லாமல் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்…’
என்று இருக்கிறது. ‘ஜெ’ பெயரை சொல்ல தயக்கமா, பயமா மேனனுக்கு..?