தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(30.07.2021)சென்னையில் நடைபெற்றது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாகதிரையரங்குகள்தொடர்பாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் இராதாகிருஷ்ணனிடம் கேட்ட கேள்விகளும் அவரது பதில்களும்.
இந்தக் கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன?
“திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு விற்பனை முழுக்க கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும், இணையத்தில் நுழைவுச்சீட்டு பதிவு செய்யும்போது கிடைக்கிற சேவைத் தொகையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வேண்டும்,
திரைப்படங்களுக்கு நடுவில் போடப்படும் விளம்பரங்களில் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு, க்யூப், யுஎஃப்ஓ போன்ற நிறுவனங்களுக்கு விஎஃப்எஃப் எனப்படும் ஒளிபரப்புக்கருவிக்கான தவணைக் கட்டணம் கட்டமாட்டோம், திரையரங்கு உரிமையாளர்கள் சிண்டிகேட் எனப்படும் மறைமுகக்கூட்டணி வைக்கக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் போட்டுள்ளோம்….”
இவை அனைத்தும் ஏற்கனவே போடப்பட்ட தீர்மானங்கள்தானே?
“ஆம், விஷால் தலைமையிலான சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்தபோது இவை பேசப்பட்டன. தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள் முன்வைக்கப்பட்டு திரையரங்கு உரிமையாளர்களும் ஏற்றுக்கொண்டவைதான் இவை…”
அதன்பின் என்ன நடந்தது ?
“அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கடம்பூர் ராஜு,கே.சி.வீரமணி ஆகிய அமைச்சர்கள் முன்னிலையில் இந்த விசயங்கள் பேசப்பட்டன. ஆனால், அவை நடைமுறைக்கு வரவேயில்லை. அமைச்சர்களும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இப்போதைய முதலமைச்சர் எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மையோடு நடக்கிறார்.
அதேபோல இந்தத் துறையிலும் எல்லா இடங்களிலும் குறிப்பாக திரையரங்குகளில் வெளிப்படைத்தன்மை இருக்க அரசாங்கம் ஆவன செய்ய வேண்டுமெனக் கோருகிறோம்…”
ஒருதுறையில்ஏற்படும்சிக்கலை அரசாங்கம் தீர்த்துவைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது சரியா?
“திரையரங்குகளில் விற்கப்படும் நுழைவுச்சீட்டுகளின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு வரி வருவாய் கிடைக்கிறது. ஆனால் இவர்கள் முறையான கணக்கு கொடுக்காததால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் நானூறு கோடியிலிருந்து அதிகபட்சம் ஆயிரம் கோடிவரை அரசாங்கத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இந்த வருவாய் சரியான முறையில் அரசாங்கத்துக்குப் போய்ச்சேர்ந்தால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு மனியம் உள்ளிட்ட பல சலுகைகளை உரிமையுடன் கேட்டுப் பெற முடியும். எனவே எங்கள் கோரிக்கையை திரையரங்குக்காரர்கள் ஏற்கவில்லையென்றால் அரசாங்கத்திடம் முறையிடவுள்ளோம்…”
தயாரிப்பாளர்கள் சங்கம் மூன்றாகப் பிரிந்திருப்பதால் மற்ற சங்கங்களுடன் திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்பந்தம் போட்டால் என்ன செய்வீர்கள்?
“நாங்கள் எல்லாத் தயாரிப்பாளர்களுக்காகவும்தான் பேசுகிறோம். சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்படாமல் செயல்படுகிறவர்கள் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்…”
நடப்புதயாரிப்பாளர்கள்சங்கம்உட்பட எல்லோரையும் ஒருங்கிணைப்போம் என்று தேர்தல் நேரத்தில் சொன்னீர்களே?
“நாங்கள் ஒன்றாகிவிடக்கூடாது என்பதற்காக சில தீயசக்திகள் வேலை பார்க்கின்றன. அவற்றைத் தாண்டி நல்லது நடக்கும்…”
நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியனவற்றுக்கு தணிக்கைச்சான்றுக்கான பரிந்துரைக்கடிதம் கொடுக்கும் அங்கீகாரத்தை அரசாங்கமே வழங்கியுள்ளதே. இனிமேல் உங்களுடன் இணையவேண்டிய தேவை என்ன?
“ஏழுபேர் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்தால் அதற்கு இந்த அங்கீகாரம் கிடைத்துவிடும், இது ஒரு படத்தைத் தயாரித்த பின் தணிக்கைக்குப் போகும் நேரத்தில் செய்யவேண்டிய விசயம். ஆனால் ஒரு படத்தை உருவாக்குவதற்குப் பல விசயங்கள் தேவை…”
தொழிலாளர்கள் சங்கமும் அந்த அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாகச் சொல்லப்படுகிறதே.?
“திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் சம்பளம் மற்றும் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் எங்கள் சங்கம்தான் போட்டுவருகிறது. வருங்காலத்திலும் அதுவே தொடரும்…”