October 30, 2024
  • October 30, 2024
Breaking News
March 15, 2024

பிரேமலு திரைப்பட விமர்சனம்

By 0 167 Views

இந்த மல்லுவுட்காரர்களுக்கு இருக்கும் நக்கல் வேறு யாருக்கும் வராது. இதுவும் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு (ரெட் ஜயண்ட் புண்ணியத்தால்) தமிழ் பேசி வந்திருக்கும் படம்தான்.

இதில் என்ன நக்கல் என்கிறீர்களா? தலைப்பைப் பார்த்ததும் ஏதோ தெலுங்குப் படம் என்றுதான் நமக்கு தோன்றும். ஆனால் ஹைதராபாத்தில் நடக்கும் ஒரு காதல் படம் என்பதால் அப்படி நக்கலாக ‘லு’ போட்டு டைட்டில் வைத்திருக்கிறார் இயக்குனர்.

அத்துடன் ஒரு ரொமான்டிக் காமெடி படத்துக்கு இதை விடப் பொருத்தமான தலைப்பை வைக்க முடியாது. காதலுக்குக் காதலும் ஆயிற்று- நகைச்சுவைக்கு நகைச்சுவையும் ஆயிற்று.

லைன் மிகச் சாதாரணமானதுதான் காதலிக்கும் வயதில் காதலுக்கு ஏங்கி காதலியை தேடி அலையும் ஒரு இளைஞன் காதலில் வெற்றி பெற்றானா (பெறாமலா இருப்பான்..?) என்பதுதான் அந்த மெல்லிய கோடு.

இதுபோன்ற காதல் படங்களில் காதலிக்கும் யுவனையும், யுவதியையும் பளிச்சென்று ஃப்ரெஷ்ஷாகக் காட்டி விட்டாலே போதும், படம் பாதி வெற்றி அடைந்துவிடும். மீதி வெற்றிக்கு தடங்கல் இல்லாத தெளிவான திரைக்கதையைச் சொல்லிவிட வேண்டும்.

இவை இரண்டையுமே மிகச் சரியாக கொடுத்து தன் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் இயக்குனர் கிரிஷ்.ஏ.டி.

தமிழ்நாட்டின் சேலத்தில் ஆரம்பித்து கேரளா போய் (தமிழ் வெர்ஷனில் சென்னை…) அங்கிருந்து ஹைதராபாத்துக்கு பறக்கிறது திரைக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் நஸ்லேனுக்கு அப்பாவித்தனமான அழகிய முகம். அதுவே அவரைக் காதலிக்க வைத்து விடுகிறது. படிப்பிலும் சுட்டியாக இல்லாமல் நாளைக்கு என்ன செய்யப் போகிறோம் என்கிற தெளிவான முடிவில்லாமல்… எதிர்காலத்துக்கு பெற்றவர்களை எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாமல்… ஆனால் உருகி உருகி காதலிக்க மட்டும் முடியும்… தைரியத்திற்காக சரக்கு அடித்தால் மட்டையாகி விட முடியும் என்கிற வேடத்தில் நஸ்லேன் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

கல்லூரியில் முதல் காதல் பூத்து,  பொத்தேன்று விழுந்தாலும் ஹைதராபாத்தில் துளிர்விடும் அடுத்த காதலில் கிளை பரப்பி வேரூன்றிக் கொள்கிறார் அவர்.

அதற்குத் தோதாக அமைந்து விட்டார் காதலி மமிதா பைஜூ. கொஞ்சம் பழைய சுகன்யா, கொஞ்சம் ஓவியா, கொஞ்சம் சுனைனா இவர்களைச் சரிவிகித அளவில் கலந்தால் வந்துவிடும் பைஜூவின் முகம்.

அந்தக் களையான முகத்தில் சுளையான உதடுகளை விரித்து ஏ…ஏ… என்று பார்க்கும்போது அப்படி ஒரு திகட்டாத அழகு. அப்பழுக்கற்ற அந்த முகத்தில் ஆச்சரியம், காதல், நகைச்சுவை, சின்னக் கோபம், அதைவிட சின்ன அழுகை என்று எல்லாமே ஸ்விட்சைப்  போட்டால் எரியும் பல்பாக பளிச்சென்று வருகிறது. 

இந்த வருடம் முழுவதும் பைஜுவால் தென்னிந்திய சினிமா பற்றிக் கொண்டிருக்கும்.

வில்லனாக வரும் ஷியாம் மோகனின் நடிப்பையும் சொல்லியாக வேண்டும். பார்வைக்கு பிரித்விராஜின் தம்பி போல் இருப்பவர் ஆரம்பத்தில் ஒரு நாயகனாகவே தோன்றி மமிதாவை இலகுவாகக் கவர்ந்து நஸ்லேனின் வருகைக்குப் பின்னால் மட்டுமே வில்லனாகிறார்.

அவர் சொல்லும் அந்த ஜேகே… ஆரம்பத்தில் ரசிக்க வைத்து கடைசியில் ‘கெக்கே பிக்கே’ என்று ஆகிவிடுவது பரிதாபம்.

இந்த மூன்று பேருக்கு ஈடு கொடுக்கும் துணை நடிகர்களாக வரும் அல்தாப் சலீமும், அகிலா பார்கவனும் கூட கிடைத்த இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

படத்தை ரசித்து ரசித்து திரைக்கதை ஆக்கி இருக்கிறார்கள்.

நஸ்லேனும், மமிதாவும் சந்தித்துக் கொள்ளும் அந்தத் திருமண வைபவம், அனைவரும் செல்லும் ஒருநாள் ஹைதராபாத் டூர், மமிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், ஓடும் ரயிலில் மமிதாவுக்கு பச்சிலை மருந்து வாங்கிக் கொண்டு வரும் நஸ்லேனின் ரயில் பயணம் என்று ஒவ்வொரு காட்சியையும் இளமையில் தோய்த்து உற்சாகத்தில் உலர்த்தி எழுதி இருக்கிறார்கள்.

கடைசிக் காட்சியில் மட்டுமே வெடிக்கும் மமிதாவின் காதல் நாம் எதிர்பார்ப்பதுதான் என்றாலும், ஏர்போர்ட்டில் முடிவடையும் கிளைமாக்ஸில் ஃப்ளைட் பயணத்தைக் கேன்சல் செய்துவிட்டு நஸ்லேன் வந்துவிடுவார் என்று(ம்) நாம் எதிர்பார்ப்பது நடக்காமல் போகிறது.

படம் முழுவதும் காமெடியிலேயே கடப்பது மிகப்பெரிய பலம். சீரியசான கட்டத்தில் கூட “என் சுயரூபம் உனக்கு தெரியாது…” என்று நஸ்லேன் கண்களை உருட்ட, அவரை ஒரு கட்டத்தில் ஆடை இல்லாமல் பார்த்திருக்கும் மமிதா அசால்டாக, “அதெல்லாமே தெரியும்… பாத்திருக்கேன்…” என்று சொல்வது அப்படி ஒரு ‘நச்’ காமெடி.

விஷ்ணு விஜய்யின் இசையும், அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவும் இந்தப் படம் டேக் ஆஃப் ஆக இரண்டு இறக்கைகள் ஆகியிருக்கின்றன.

பிரேமலு – ஜாலிலோ காதலு..!

– வேணுஜி