நேற்று மாலை 4 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார்.
சென்னை, ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறி விட்டு அவர் இணைப்பை துண்டித்து விட்டார்.
அது தொடர்பாக கட்டுப்பாட்டு அறை போலீசார் அஜித் வீடு அமைந்துள்ள காவல் எல்லையான நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து நீலாங்கரை போலீசார் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை மேற்கொண்டனர்.
நீண்ட நேர சோதனைக்குப் பின்னர் அது வெறும் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அது விழுப்புரம் மாவட்டத்தை காண்பித்துள்ளது.
மேலும் அந்த செல்போன் எண் விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்த புவனேஷ்வர் (வயது 20) என்பவருடையது என தெரியவந்தது.
அது தொடர்பாக சென்னை போலீசார் மரக்காணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து மரக்காணம், கூனிமேடு குப்பத்தில் இருந்த புவேனஷ்வரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர். பின்பு சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் புவனேஷ்வரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஐபிக்களின் வீடுகளுக்கு புவனேஷ்வர் அடிக்கல் மிரட்டல் விடுத்து வந்துள்ளதும்,
கடந்த மாதம் நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதானதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஜாமினில் வெளிவந்த அவர் மீண்டும் அஜித் வீட்டுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.