September 16, 2024
  • September 16, 2024
Breaking News
August 21, 2024

போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்பட விமர்சனம்

By 0 266 Views

வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்திக்கும் நல்லது, கெட்டதுகளை சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் ஒரே ஒரு பயணத்தில் நமக்கு விளக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் மைக்கேல் கே.ராஜா.

பிண ஊர்தி ஓட்டி வாழ்க்கை நடத்தும் விமல், அபலைப் பெண்ணான மேரி ரிக்கெட்ஸ்சுக்கு வாழ்க்கை கொடுக்க அதன் காரணமாக கர்ப்பமாகிறார் மேரி. இரண்டு முறை கர்ப்பம் தரித்து உயிரற்ற குழந்தைகளைச் சுமந்து மூன்றாவது தரிக்கும் கர்ப்பம் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த, அதற்காக பிரசவத்தைத் தன் வசதிக்கு மேலான மருத்துவமனையில் வைத்துப் பார்க்க நினைக்கிறார் விமல். 

அதற்காக ஒரு பெரிய மனிதரின் பிணத்தை சென்னையில் இருந்து திருநெல்வேலி கொண்டு சேர்க்க நினைக்கிறார். அதற்கு பெரும் தொகையும் பேசி முடிவாக அந்தப் பயணம் அவர் எதிர்பார்த்தபடி நடந்ததா என்பதுதான் கதையின் நாடி. 

தன் பாத்திரம் உணர்ந்து அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார் விமல். மனைவியை ஆபத்தான நிலையில் விட்டுச் சென்றாலும், பணம் சம்பாதிக்க வேறு வழியில்லாமல் அவளைப் பிரிவதுடன், அதுவும் ஒரு கட்டத்தில் முடியாது என்று விரும்பி தற்கொலைக்கு முயல்கைளில் நம் பரிதாபத்தை சம்பாதித்துக் கொள்கிறார்.

வழக்கமான பாடல், சண்டைக் காட்சிகள் என்று இல்லாத திரைக்கதையில் இடையில் வந்து நிற்கும் ஒரு சண்டைக் காட்சி கூட விமல் பாத்திரத்தின் இயல்பைக் கெடுக்காமல் இருக்கிறது. 

அமைதியாக வந்து அவரைத் தூக்கிச் சாப்பிடும் வேடத்தில் வருகிறார் திருநெல்வேலிக்காரரான கருணாஸ். கூத்துக்காரரான அவர் அந்தக் கூத்துக் கலையும் வழக்கொழிந்து போக வேலை வெட்டி இல்லாமல் சொந்த ஊருக்குப் பயணப்படும் வேலையில் அதற்கு வழிச் செலவும் இல்லாமல் விமலின் பிண ஊர்தியில் கெஞ்சிக் கூத்தாடி ஏறிக் கொள்கிறார்.

அவர் வழிநெடுக செய்யும் சேட்டைகளும் அலப்பரையும், அப்பாவித்தனமும், நகைச்சுவையும், மனிதாபிமானமும் வாழ்க்கையின் புரிதலும்தான் படத்தையும் வண்டியையும் ஒட்டிச் செல்கின்றன.

உண்மையான மனிதநேயம்தான் சாதாரண மனிதர்களை தேவதைகள் ஆகும் என்று அவர் விமலுக்குப் புரிய வைப்பதும், அப்படி ஒரு காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுக்கப் போய் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கிய அவர்கள் உயிரைக் காப்பாற்றுவதில் தன்னை ஒரு தேவதையாக விமல் உணர்வது அற்புதமான கட்டம்.

நாயகியாக வரும் மேரி ரிக்கெட்ஸ்க்கு கர்ப்பத்தை சுமப்பதை விட வேறு ஏதும் சுமைகள் இல்லை. 

பிணமாகச் செல்லும் பெரிய மனிதரின் நேரடிக் குடும்பமும், அவரது வைப்பாட்டி  குடும்பமும், பிணம் தங்களுக்குதான் சேர வேண்டும் என்று அடித்துக் கொள்ளும் பிரச்சினையில் மூத்த குடும்பத்தின் ஆடுகளம் நரேன், இளைய குடும்பத்தின் பவன், தீபா சங்கரும் தங்கள் உரிமைப் போராட்டத்தின் உணர்ச்சிகளை நன்றாக வெளிகாட்டியிருக்கிறார்கள். 

இடையில் வரும் காதல் ஜோடியில் பெண்ணைப் பெற்றவராக வரும் சாதி வெறியர் அருள்தாஸ், தொடக்கத்தில் உக்கிரமும் கடைசியில் நெகிழ்ச்சியும் காட்டி இருக்கிறார்.

விமல் பிணத்தைத்  தொலைக்கும் அந்த இடைவேளைக் காட்சி அவரைவிட நமக்குதான் பதட்டத்தை தருகிறது. 

இன்ன பிற பாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். 

அற்புதமான கதை. ஆனால் திரைக்கதைதான்  விமல் ஓட்டி வரும் பிண ஊர்தி போலவே அங்கங்கே நின்று, தள்ளித் தள்ளியே பயணிக்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது.

தனி ஆளான கருணாஸுக்கு விமல் தரும் இறுதி மரியாதை ஏற்புடையதுதான். ஆனால் அதற்காக அறம் இல்லாமல் நம்பிக்கை வைத்த குடும்பத்துக்கு ஒரு துரோகத்தை விமல் செய்து இருப்பது சரியா என்பது விவாதிக்க வேண்டிய விஷயம். 

வைப்பாட்டி குடும்பம் என்பதற்காக ஆடுகளம் நரேன் குடும்பத்தினரை விட பவன் குடும்பத்தை இயக்குனர் பழி தீர்த்து இருக்கிறார் என்றே சொல்லலாம். 

போகுமிடம் வெகு தூரமில்லை – கொடுத்த காசுக்கு சேதாரமில்லை..!