September 16, 2024
  • September 16, 2024
Breaking News
August 23, 2024

சாலா திரைப்பட விமர்சனம்

By 0 84 Views

குடியின் கேடுகளைப் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளன. அவற்றிலிருந்து சற்று வித்தியாசமாக மதுபானத் தொழிலைத் செய்து கொண்டிருக்கும் ஒருவரே அதற்கு எதிராக மாறுவதுதான் இந்தப் படத்தின் தனித்தன்மை.

பட ஆரம்பத்தில் தமிழகத்தில் சாராயம் புகுந்த வரலாற்றைச் சொல்லி முடிக்கிறார்கள். அப்போது ராயபுரத்தில் இரண்டு கோஷ்டிகள் எதிரும் புதிருமாக தாதா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒருவரான அருள்தாஸ் ஏலம் எடுத்த பார்வதி ஒயின்ஸ் மிகவும் பாப்புலராக இருக்கவே, அதை ஏலத்தில் எடுப்பதுதான் பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. 

அது தொடர்பான மோதலில் அருள் தாஸுக்கு எதிரான தாதா கொல்லப்பட, பார்வதி ஓயின்ஸ் க்கு கோர்ட் சீல் வைக்கிறது. அப்போது அருள்தாசின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன்தான் நாயகன் சாலா. 

அதனால் அவனை சொந்தப் பிள்ளை போல் வளர்த்துக் கொண்டிருக்கிறார் அருள்தாஸ்.

பின்னர், தற்காலத்தில் நடக்கும் கதையில் சாலா வாலிபனாகி நாயகன் தீரன் அந்தப் பாத்திரத்தை ஏற்கிறார்.

அருள்தாஸ்க்கு எதிரான கோஷ்டியில் இப்போது தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தீரனின் வயதை ஒத்த சார்லஸ் வினோத். தற்காலத்தில் அவர் கையும் ஓங்கி இருக்க அரசியலிலும் ஏற்றத்தில் இருக்கிறார் அவர். 

ஆனாலும் அருள்தாஸ் மீது கை வைக்க முடியாத ஒரே காரணம் தீரன் அவர் அருகில் இருப்பதுதான்.

இதற்கிடையே தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் நாயகி ரேஷ்மா வெங்கடேஷ், மதுவின் தீமைகளை எதிர்த்து தொடர் பிரச்சாரத்தில் மாணவர்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். இது தீரன் தொழிலுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்க, இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டு பின்னர் அது காதலாக கனிகிறது.

பல வருடங்கள் கழித்து கோர்ட் உத்தரவால் பார்வதி ஒயின்ஸ் மீண்டும் ஏலத்துக்கு வர, அதை எடுப்பதே தங்களுக்குப் பெருமை என்ற நிலையில் இந்த இரு கோஷ்டிகளும் களத்தில் இறங்க, யாருக்கு வெற்றி என்பது ஒரு புறம் இருக்க, நாயகி ரேஷ்மாவின் மதுக்கடைகளை மூடும் போராட்டம் என்ன ஆனது என்பதும் மீதிக் கதை

அறிமுகக் காட்சியிலேயே இரண்டு பிளேட்டுக்குக் குறையாத பிரியாணியைத் தின்று தீர்க்கிறார் தீரன். ஆனால் அவரது அசுரத்தனமான உடல்வாகுக்கு அது சரியான அளவுதான். 

ஆனால் தீரனுக்கு வயிற்றுப் பசியை விட நடிப்புப் பசிதான் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. அந்த அர்னால்ட் உடலை வைத்து கொண்டு எந்த ஹீரோவுக்கும் குறைவில்லாத அளவில் அற்புதமாக நடனமாடுகிறார்… சண்டை போடுகிறார்… பெயருக்கு ஏற்ற அளவில் அவர் தீரன்தான்.

நியாயப்படி அவர் செய்யும் வேலைகளுக்கு அவர் முகத்தைப் பார்த்தாலே நாயகிக்குக் கோபம் வரவேண்டும். ஆனால் அவருக்கும் சரி, நமக்கும் சரி… தீரனின் முகத்தில் எந்தவிதமான குற்றமும் தெரியவில்லை – அதனால் கோபமும் வரவில்லை.

நாயகி ரேஷ்மாவின் முகமே சொல்லிவிடுகிறது அவர் கள்ளமில்லாத உள்ளத்துக்குச் சொந்தக்காரர் என்று. அத்துடன் அழகும் ஒருங்கே பொருந்தி இருக்க… நாயகி வேடத்துக்குப் பொருத்தமாகவும் இருக்கிறார் ரேஷ்மா.

அருள்தாஸ் நடிப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குவாட்டரும் கோழி பிரியாணியும் போல் அவருக்கு அந்தக் கேரக்டர் அத்தனைப் பொருத்தமாக இருக்கிறது.

வில்லன் சார்லஸ் நடிக்கவே வேண்டியதில்லை. அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே வந்து போனாலே அது வில்லத்தனம் என்றாகிவிட்டது. பிற படங்களைப் போலவே இதிலும் அதே ட்ரெண்டில் வில்லத்தனம் செய்துவிட்டுப் போகிறார்.

நீண்ட காலம் கழித்து ஹீரோயின் நண்பனாக வந்து அங்கங்கே நகைச்சுவைக்குப் பயன்பட்டிருக்கிறார் ஸ்ரீநாத். அந்த ‘சேட்டு ‘ காமெடியை ரசித்துச் சிரிக்கலாம்.

வழக்கம்போல ரவுடிகளுக்கு கையாளாக இருக்கும் காவல் அதிகாரி சம்பத் ராம், கடைசி காட்சியில் தன் நேர்மையைப் பறைசாற்றுகிறார்.

படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் அத்தனை ஷார்ப். வெகுகாலம் ஆயிற்று தமிழ்ப் படங்களில் இப்படிப் பொருத்தமான பொருளுள்ள வசனங்களைக் கேட்டு… எழுதியவருக்குத் தனியாக ஒரு ‘பொக்கே..!’

மற்றபடி சமுதாயத்துக்கு செய்தி சொல்லும் படமாக இதனைத் தந்திருக்கும் இயக்குனர் எஸ்.டி.மணிபால் நிச்சயமாக பாராட்டுக்குரியவர். தொய்வில்லாத திரைக்கதையும் படத்தை சீராகக் கொண்டு செல்கிறது. 

கடைசிக் காட்சியில் நேரும் அந்த கோர விபத்தை அற்புதமாகப் படமாக்கி இருக்கிறார் அவர். 

எந்த மொடாக் குடிகாரரும் இந்தப் படத்தைப் பார்த்து வட்டு வந்தால் இரண்டு நாளைக்கு மதுபானக் கடை பக்கமே போக மாட்டார் என்பது உறுதி.

படத்தின் ஒரே குறை இன்றைய ட்ரெண்டில் இல்லாததுதான். ஒரு பத்து வருடம் பின்தங்கிய ட்ரெண்டிலேயே ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவும் தீசனின் இசையும் அமைந்து போயிருக்கிறது. 

அதெல்லாம் கொஞ்சம் அப்டேட் ஆக இருந்தால் சாலாவை இன்னும் ரசித்திருக்க முடியும்.

சாலா – சால்னா..!

– வேணுஜி