September 16, 2024
  • September 16, 2024
Breaking News
August 23, 2024

வாழை திரைப்பட விமர்சனம்

By 0 310 Views

விளையும் பொருள்கள் முதற்கொண்டு உற்பத்திப் பொருள்கள் வரை அவற்றின் முதலாளிகள் காலடியில் உழைப்பாளிகள் என்றும் மிதிபட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். 

இந்த அவலமான உண்மையைத் தன் வாழ்க்கை அனுபவமாகவே வாழைத்தோட்டத்தில் வைத்துக் கண்ணீர் காவியமாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். 

வாழைத் தோட்டத்தில் காய் சுமக்கும் கூலி வேலைக்கு போகும் மக்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே கொடுத்திருக்கிறார் அவர். 

படத்தின் நாயகன் பதின் பருவம்தொட்ட பதின்மூன்று வயது பொன்வேல்தான். அவனது வாழ்வின் ஒரு பகுதிதான் கதையாகக் காட்டப்படுகிறது. 

பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்து வரும் அவன், தந்தையை இழந்த நிலையில் தாய் மற்றும் தமக்கையுடன் வாழ்ந்து வருகிறான். பள்ளிநாள் தவிர மற்ற அத்தனை விடுமுறை நாள்களிலும் அவன் வாழைத்தோட்டத்துக்கு சென்று வாழைக்காய்களைச் சுமந்து வாழ்க்கையைச் சுமக்கும் தாய்க்கு உதவ வேண்டும். 

அதுவும் சாதாரண சுமை அல்ல. இரண்டு வாழைத்தார்களை தலையில் ஏற்றி வயல், வரப்பு, சேறு, சகதி வழியே அவற்றை தூக்கிக் கொண்டு வந்து லாரியில் ஏற்ற வேண்டும். இந்தச் சுமையை அவன் மட்டுமல்லாமல் தாய் தமக்கை இருவரும் கூட சுமக்கிறார்கள்.

அவனுக்கு மட்டுமல்லாமல் அவன் வயதைச் சேர்ந்த அத்தனை சிறுவர்களுக்கும் அதுதான் நிலைமை. அவனது உற்ற நண்பனாக வரும் ராகுலுக்கும் இதேதான் வாழ்க்கை.

இந்த வாழ்க்கையின் முன் பகுதியை சுவாரசியமாகக் கொடுத்து விடுகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

தங்கள் வகுப்பில் பொன்வேலும், ராகுலும் செய்கிற அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன. அவற்றுள் ஒன்று, தங்கள் ஆசிரியை நிகிலா விமல் மீது இனக்கவர்ச்சி மேலோங்கக் காதல் கொள்வது. 

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க டீச்சர்…” என்று நிகிலாவிடமே சொல்லும் அளவுக்கு பொன்வேலின் காதல் பொங்கி வருகிறது. அதனால் நிகிலா தவறவிட்ட கைகுட்டையைத் தனதாக்கிக் கொண்டு வீட்டில் கேட்கும் அக்காவிடம் ஆசிரியை பரிசளித்ததாகவும், பள்ளியில் இன்னொரு ஆசிரியை கேட்கும்போது அக்காவுடையது அது என்றும் சொல்லிக் கைக்குட்டையை வைத்து காதல் குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான். 

கைக்குட்டையை நாசியில் நுகர்ந்ததும் இசைஞானியின் இசைப்பிரவாகம் பொங்க  ‘பூங்கொடிதான் பூத்ததம்மா…’ பாடல் ஒலிப்பது அற்புத ரசனை. நிகிலாவின் பெயர் ‘பூங்கொடி’ என்பதில் பொருள் பொதிகிறது அந்தப் பாடல்.

இதில் பொன் வேல் ரஜினி ரசிகனாகவும், ராகுல் கமல் ரசிகனாகவும் வருவதை வைத்தும் படத்தின் பிரதான நகைச்சுவை அமைந்திருக்கிறது. 

காய் சுமக்கும் வேலைக்குப் பயந்து சேஃப்டி பின்னால் காலில் குத்தி முள் குத்தியதாகப் பொய் சொல்லி பொன்வேல் நாடகமாட “நாங்க எல்லாம் கமல் ரசிகரு, குத்தாமலே நடிப்போம்ல.!” என்று கித்தாய்ப்பு காட்டி ராகுல் அவன் தாயிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகளில் தியேட்டர் இரண்டு படுகிறது. 

இன்னொரு பக்கம் தாங்கள் சுமக்கும் காய்களுக்கு விலை கூட்டிக் கேட்டு சிவப்பு சிந்தனை கொண்ட கலையரசன் விரைத்து நின்று வேலை நிறுத்தம் அறிவிக்க, அதன் பலன் என்ன என்பதுதான் படத்தின் முடிவாக அமைகிறது.

பொன்வேலும், ராகுலும் அத்தனை இயல்பாக நெல்லைத் தமிழ் பேசி நெஞ்சுக்கு நெருக்கமாகிறார்கள். கனமான தங்கள் வாழ்க்கையிலும் ரசமாக அவர்கள் வாழ்வது ரசிக்க வைக்கிறது.

காதல் என்றால் என்ன என்று தெரியாத பருவத்தில், ஆசிரியையே காதலிக்கலாமா என்றெல்லாம் எந்த விவாதமும் நிகழ்த்தாமல் உள்ளத்தில் ஊற்றெடுத்த அன்பை அவர்கள் வெளிக்காட்டி இருப்பது அத்தனை இயல்பு. 

அந்த இயல்பைப் புரிந்து கொண்ட நிகிலா விமலின் கள்ளம் இல்லாத களையான முகமும் அந்தக் காதலைக் கொச்சைப்படுத்தாமல் பாசத்துடன் கடந்து செல்கிறது. 

பொன்வேலின் அம்மா, அக்காவாக வரும் ஜானகியும், திவ்யா துரைசாமியும் கூட மண்ணின் மக்களாக அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். 

அதிலும் ஜானகியின் இறுக்கமும், தீர்க்கமும் நடிப்புக்கு அப்பாற்பட்டது. கையில் அரிவாள், சுத்தியல் பச்சை குத்தி, மகன் உழைக்க வேண்டியதன் அவசியத்தை மகளிடம் விளக்கும்போது உயர்ந்து தெரிகிறார். பண விஷயத்தில் வார்த்தை மீறிப் பேசிய தரகரிடம் கெஞ்சாமல், புலம்பாமல் காதுகளில் இருக்கும் பொட்டுத் தங்கத்தையும் கழற்றி வீசி எரியும்போது அவர் தன்மானத்தின் மீது செம்மை படருகிறது..!

அதே செம்மையில் வாலிபமும், வாழ்வுரிமையும் ஒருங்கே முட்டிக்கொண்டு நிற்கும் வேடத்தில் கலையரசன். அவருக்கும் திவ்யா துரைசாமிக்குமான மெல்லிய காதலும் மருதாணியில் எழுதிய கவிதையாகிறது. அதன் முடிவோ டைட்டானிக் சோகம்..!

படத்தின் கடைசி அரை மணி நேரம் எதை கவனிப்பது, எதை விடுவது… எந்தத் துன்பத்தைப் பெரிதாக நினைப்பது என்று புரிந்து கொள்ள முடியாத அளவில் அத்தனை துயர்கள் அடுத்தடுத்த நிகழ…

அதையெல்லாம் மிஞ்சிய பொன்வேலின் பசித்துயர் நம் வயிற்றை மட்டுமல்லாமல் இதயத்தையும் பிசைகிறது. வறியவர்களுக்கு உணவின் தேவை எத்தனை அவசியம் என்பதை நம் உணர்வு நரம்புகள் வழியாக நெஞ்சுக்குள் கடத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ். 

ஆயிரக்கணக்கான வாழைக்காய்களைத் தலையில் சுமந்தாலும் பசிக் கொடுமைக்காக ஒரே ஒரு வாழைப்பழத்தை உண்ணப்போய் பொன் வேல் வாங்கும் அடி, வாழையடி வாழையாக வறியவர்கள் வாங்கிய அடிகளின் அடையாளத் தழும்பு.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு முந்துகிறதா அல்லது சந்தோஷ் நாராயணனின் இசை முந் துகிறதா என்று விவாதமே வைக்க முடியும். 

வீடுகள் தோறும் சவங்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும் அந்தக் கடைசிக் காட்சி… (தேனி) ஈஸ்வரா..!

ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் தன் முழு பலத்துடன் வெளியே வந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அந்த ‘தென்கிழக்கு தேன் சிட்டு…’ பாடலும் அதில் ‘தீ’யின் குரலும் சேர்கையில் செவிகளில் தீப்பற்றிக் கொள்கிறது.

எந்தக் கதையாக இருந்தால் என்ன… உணர்வுகளை எப்படிக் கடத்த வேண்டும் என்கிற வித்தையை நன்றாக அறிந்து வைத்திருக்கிற மாரி செல்வராஜ் இனிவரும் படங்களிலும் தோற்க மாட்டார் என்பது உறுதி. 

அவரது சிக்னேச்சராக… இதில் ஒரு பசுவும்… ஏன் மரவட்டையும் கூட பாத்திரங்களாகின்றன. உயிரை விட்டவர்களின் ஆன்மா உடன் இருப்பவர்களை உற்று கவனிப்பதும் மாரி செல்வராஜ் மாற்றாத பாணி.

வாழை – சுளை சுமந்து தோலாகும் வாழ்க்கை..!

– வேணுஜி