ஒரு படத்தினுடைய வெற்றி அதே தலைப்பில் இன்னும் சில படங்களைத் தயாரிக்க வைத்து விடுகிறது. அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் ‘பீட்ஸா 3 – தி மம்மி.’
தமிழ்த் திரையுலகில் எந்தப் பெரிய தயாரிப்பாளரும் செய்யாத சாதனையாக தயாரிப்பாளர் சி.வி.குமார் பல திறமையான இயக்குனர்களைத் தந்தார். அவரது பிராண்ட் வேல்யூ அதுதான்.
அப்படித்தான் மோகன் கோவிந்த் இயக்கி இருக்கும் இந்தப் படத்தையும் அதிக எதிர்பார்ப்புடன் பார்க்க நேர்ந்தது.
பட ஆரம்பத்தில் ஒரு மம்மி பொம்மையைக் காட்டுகிறார்கள். அந்த பொம்மை இருக்கும் இடத்தில் ஏதாவது ஒரு ஆவி இருந்தால் அது உயிர் பெற்று விடுகிறது.
அப்படி நாயகன் அஸ்வின் காகுமானு நடத்தும் ரெஸ்டாரென்ட்டுக்கு அந்த மம்மி பொம்மை வந்து சேர, அந்த ரெஸ்டாரண்டில் பல வினோத நிகழ்வுகள் நடக்கின்றன. சுத்தம் செய்து மூடி வைத்துவிட்டு போன ரெஸ்டாரன்ட் காலையில் அலங்கோலமாக இருப்பதுடன் புது வகையான ஸ்வீட் ஒன்றும் அங்கு செய்து வைக்கப்பட்டிருக்கிறது. சாப்பிட்டவர்கள் அதன் சுவையில் சொக்கிப் போகிறார்கள்.
ஒரு கட்டத்தில் அந்த ரெஸ்டாரண்டில் இருக்கும் ஆவிதான் அதை எல்லாம் செய்கிறது என்று தெரிகிறது.
அந்த ஆவி அடுத்தடுத்து சிலரைப் போட்டுத் தள்ளுகிறது. இதன் பழிகள் எல்லாம் அஸ்வின் காக்குமானு மீது விழ, ஏற்கனவே அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் கௌதம் நாராயணனுக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு உரசலில், எல்லா கேசையும் மொத்தமாக அவர் தலையில் தூக்கிப் போட நினைக்கிறார் கெளரவ்.
அஸ்வின் மீதான கௌரவவின் கோபத்திற்கு காரணம், அவரது தங்கையை அஸ்வின் காதலிப்பதுதான். ஆனால் வேறு ஒரு பணக்காரனைத் தன் தங்கைக்கு மணமுடிக்க நினைக்கும் கௌரவும் அஸ்வின் மீது கடும் கோபத்தில் இருக்க, இந்த கொலைப்பழிகளும் சேர்ந்து கொள்ள அதிலிருந்து அஸ்வின் எப்படி வெளியே வந்தார் – பிரச்சனைகள் எப்படி தீர்க்கப்பட்டன என்பதுதான் மீதிக் கதை.
பொன்னியின் செல்வன் நடித்துக் கொண்டிருக்கும் போது இந்தப் படமும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டு இருந்திருக்கலாம். அதே கெட்டப்பில் நடித்திருக்கும் அஸ்வின் இந்தப் படத்தில் ஏற்றிருப்பது கொஞ்சம் சீரியஸான பாத்திரம் தான்.
நாயகி பவித்ரா மாரிமுத்து பெரிதாக கவரவில்லை. பேய்களுடன் பேசக்கூடிய ‘ ஆப்’பை அவர் வடிவமைத்திருக்கிறார் என்றிருக்கையில் தன் ரெஸ்டாரன்ட்டில் ஆவி நடமாட்டம் இருப்பதை முதலில் பவித்ராவிடம் தானே அஸ்வின் சொல்லி இருக்க முடியும்..?
ஆனால் கடைசியில்தான் இந்த உண்மை பவித்ராவுக்கு தெரிவிக்கப்படுகிறது.
கௌரவ் நாராயணனுக்கு கௌரவ வேடம் போல் இருக்கிறது. ஒரு போலீசுக்குரிய எந்த இலக்கணமும் இல்லாமல் தவறான நபரை தங்கைக்கு மணமுடிக்க நினைத்து, யோக்கியமான அஸ்வினை விரோதியாகவே பார்ப்பதில் கௌரவை பார்த்தாலே காண்டாகி விடுகிறது.
பிளாஷ்பேக்கில் வருகிற அனுபமா குமார், அவரது மகளாக வருகிற அபி நட்சத்ராவின் நடிப்பு மனதைத் தொடுகிறது.
காளி வெங்கட், கவிதா பாரதி எல்லாம் அவரவர்களுக்கு என்ன வருமோ அதைச் செய்துவிட்டுப் போகிறார்கள்.
பிரபு ராகவின் ஒளிப்பதிவு டாப் கிளாஸ். அரை இருட்டிலேயே பெரும் பாதி படம் கடந்தாலும் அதில் ஒரு கவித்துவம் தெரிகிறது. அருண் ராஜின் இசை பாசத்தைப் பொழிந்து இருக்கிறது.
“வசதியாக எடுப்பதற்காக நாங்கள் புத்தகங்களை சீராக அடுக்கி வைக்கிறோம். ஆனால் வருகிறவர்கள் அதைக் கலைத்துப் போட்டு விடுகிறார்கள். அப்படித்தான் உங்கள் சீரான வாழ்க்கையையும் மற்றவர்கள் கலைத்துப் போட்டிருக்கிறார்கள்…” என்று ஒரு லைப்ரேரியன் பேசும் வசனத்தில் வசனகர்த்தா தமிழ் மகன் அடையாளம் தெரிகிறார்.
படத்தின் மிகப்பெரிய பலவீனம் அடுத்து இதுதான் நடக்கும் என்று வழக்கமான சினிமா ரசிகர்கள் அடுத்தடுத்த காட்சிகளை யூகித்து விட முடியும் என்பதுதான்.
இவ்வளவு சுமாரான திரைக்கதை இருந்தும் படமாக நாம் பீட்ஸாவை ரசிக்க முடிகிறது என்றால் அதன் தொழில்நுட்ப நேர்த்திதான்.
பீட்ஸா 3 – இத்தோட முடிச்சுக்கலாம்..!