சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப மாதத்திற்கு இரண்டு முறை இந்திய எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த பழைய சிஸ்டத்தை மாற்றி, சென்ற ஆண்டு ஜூனில் இருந்து தினந்தோறும் விலையை நிர்ணயிக்கும் முறை கொண்டு வரப்பட்டது.
இதன் விளைவாகக் கண்ணுக்குத் தெரியாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதன் அடிப்படையில் இன்று பெட்ரோல் விலை இதுவரை 2013 செப்டம்பரில் உச்சமாக இருந்த ரூபாய் 79.55 ஐ நோக்கி வேகமாக உயர்கிறது.
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 77.43. கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை அதிகரித்த விலை ரூபாய் 4.94 ஆகும். ஏற்கனவே உச்சத்தைத் தொட்டு விட்ட டீசல் விலை இன்று ரூபாய் 69.56. கடந்த ஜனவரி 1ம் தேதியைவிட ரூபாய் 6.66 கூடுதலாகும்.
தலைநகரான டெல்லியிலும் பெட் ரோல் மற்றும் டீசல் புதிய உச்சத்தைத் தொட்டதைத் தொடர்ந்து பெட்ரோலிய பொருட்கள் மீதான மத்திய அரசின் கலால் வரியை குறைக்கவும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவும் வேண்டுமென்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது.