‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பேய்பசி’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.
இயக்குநர்கள் வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி நடிகர்கள் ஆர்யா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிகழ்வில் படம் பற்றி இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசியதிலிருந்து….
“முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது. இந்தப் படத்தின் முதுகெலும்பு யுவன் ஷங்கர் ராஜா தான். பின்னணி இசையை மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து கதையைக் கூட கேட்கவில்லை. இந்தப் படத்தில் லைவ் சவுண்ட் முயற்சி செய்திருக்கிறோம். படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்..!”
வெங்கட் பிரபு –
“இந்தப்பட ஹீரோ ஹரி என்னுடைய சகோதரன்தான். எங்கள் குடும்பத்தில் சிறு வயதில் இருந்தே நடிக்க விரும்பியவன். அவனை என் படத்தில் அறிமுகப்படுத்தவில்லை என்று அவனுக்கு என் மேல் கோபம். அதன் பிறகு தனியாக முயற்சித்து ஒரு படத்தில் நடித்து விட்டான். படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான முயற்சி. இந்த மாதிரி கதையெல்லாம் சொல்லி, புரிய வைத்து தயாரிப்பாளரை ஒப்புக் கொள்ள செய்வது கஷ்டம். அதை செய்து, ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ கான்செப்டில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்..!”
நலன் குமாரசாமி –
“இயக்குனர் சீனுவும், நானும் நண்பர்கள். சினிமாவில் எனக்கு நல்ல நண்பர்கள் அறிமுகமாக காரணம் சீனுதான். நல்ல சினிமா அறிவு உடையவர். ‘சூது கவ்வும்’ படத்தில் பல விஷயங்கள் ஸ்ரீநிவாஸ் சொன்னதுதான். இந்தப் படத்தில் பல புதுமையான, நல்ல விஷயங்களை எதிர்பார்க்கிறேன்..!”
ஆர்யா –
“ஹரி பாஸ்கர் என்னுடைய ஜிம் மேட். யுவன் இசையில் நாயகனாக அறிமுகமாவது ஒரு பெரிய பாக்கியம். இந்தப் படத்தை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். புது விஷயங்களைக் கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இந்த படமும் ஏற்றுக் கொள்ளப்படும்..!”
ஸ்ரீகாந்த் தேவா –
“நானும் ஹரியும் இதே சத்யம் தியேட்டர்ல நிறைய படங்கள் பார்த்திருக்கிறோம். அப்போது என்னுடைய படமும் இதே தியேட்டர்ல வரணும்னு ஆசையாக சொல்வான் ஹரி. தற்போது அதே இடத்தில் இசை வெளியீடு நடக்கிறது. தான் விரும்பியதை ஹரி சாதிப்பான்..!”
சந்தோஷ் நாராயணன் –
“சூது கவ்வும் படத்துக்கு இசையமைத்த காலத்தில் இருந்தே ஸ்ரீநிவாஸ் கவிநயம் எனக்கு அறிமுகம். அவருடைய குறும்படம் ஒன்றைப் பார்த்தேன். நல்ல திறமையாளர், அவர் படம் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அவர் இயக்கிய படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. என்னுடைய முதல் படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா சார் தான் ரிலீஸ் செய்தார். இன்று அவர் படத்தின் இசை வெளியீட்டில் அவருடன் மேடையில் அமர்ந்திருப்பது எனக்குப் பெருமை..!”
யுவன் ஷங்கர் ராஜா –
“ஹரிக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். எங்கள் வீட்டில் கோபித்து கொண்டு ஆஸ்திரேலியா கிளம்பி விட்டான். பின் நானே தயாரிக்க முடிவு செய்தேன், அதன் பின் இலங்கை சென்று விட்டான். தற்போது இந்தப் படத்தில் நடித்து விட்டான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்று சொன்னான். அன்புக்காக இசையமைத்திருக்கிறேன். அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது இந்த காலகட்டத்தில் அவசியம். காசு, பணம் தாண்டி அன்புக்காக எல்லோரும் முன்வர வேண்டும்..!”
நாயகன் ஹரி பாஸ்கர் –
“நடிக்க வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை. என்னை இயக்குனருக்கு அறிமுகப்படுத்தி வைத்த பூர்ணிமாவுக்கு நன்றி. நான் உட்பட 4 பேர் புதுமுகங்களாக அறிமுகம் ஆகிறோம். எங்களை வைத்து ‘லைவ் சவுண்டி’ல் இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம். மிகப்பெரிய சாதனை அது..!”
விழாவில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, தீரஜ் ரெட்டி, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, தேனாண்டாள் ஹேமா ருக்மணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர்.