January 11, 2026
  • January 11, 2026
Breaking News
January 10, 2026

பராசக்தி திரைப்பட விமர்சனம் (4/5)

By 0 66 Views

மொழி அரசியலைக் குழப்பம் இல்லாமல் சொல்லி இருக்கும் படம். 

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களது தாய் மொழியை அழித்தால் மட்டுமே சாத்தியம் என்கிற உணர்வோடு வன்மையான சக்திகள் அதிகார வலை பின்ன, அதை எதிர்த்து நின்று தாய் மொழியான நம் தமிழ் மொழிக்காக உயிர் நீத்த பேர் தெரியாத போராளிகளுக்கான காணிக்கையாகிறது இந்தப் படம்.

1950இன் இறுதியில் இருந்து அறுபதின் முற்பகுதி வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தித் திணிப்பின் மீதான எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களின் பங்கு எப்படி இருந்தது என்பதை உணர்வும், உணர்ச்சியும், கூடவே வணிக ரீதியான கற்பனைகளும் சேர்ந்து படைத்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.

மாணவப் பருவத்தில் மொழிப் போராளியாக இருந்து பின்னர் வாழ்க்கைப் போராட்டத்துக்காக இந்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்து, அதன் பின்னர் இந்தித் திணிப்பின் விளைவுகள் உணர்ந்து போராளியாக மாறும் வேடத்தில் சிவகார்த்திகேயன் தன் பெயரை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக் கொள்கிறார். 

அதுமட்டுமன்றி தானே படத்தின் எல்லா பகுதிகளையும் ஆக்கிரமிக்க வேண்டும் என்கிற ஹீரோ வெறித்தனம் இல்லாமல் வரலாற்று பதிவின் தன்மை புரிந்து நடித்திருப்பது சிறப்பு. 

அவர் படத்தில் ஏற்றிருக்கும் ‘ புறநானூறு படை’ யின் தலைவரான செழியன் பாத்திரம் தமிழ் சினிமா உள்ளவரை நிலைக்கும்.

அமரனைத் தொடர்ந்து தமிழின் மிக முக்கியமான இந்தப் படத்தில் நடித்த அவருக்கு அடுத்த படத் தேர்வில் மிகப்பெரிய சவால் இருக்கிறது.

கொஞ்சம் உச்சரிப்பு முன்னே பின்னே இருந்தாலும் தமிழுக்காக உயிர் கொடுத்திருக்கிறார் அதர்வா முரளி. அவரது நடிப்பும் துடிப்பும் பலே..!

பாதி தமிழ் ரத்தம் (!) ஓடும் ரவி மோகன் ஒரு கட்டத்திலாவது தமிழுக்கு உதவி இருக்கலாம். அப்படி உதவுவார் என்றும் நம்புகிறோம். கடைசி வரை வில்லனாகவே விடை பெறுவது நெருடல். ஆனாலும் அந்த நடிப்பு மிரட்டல்..!

வீட்டில் தெலுங்கு, கற்றுக் கொடுப்பது இந்தி என்று இருந்தாலும் தமிழைக் காப்பாற்றப் போராடும் ஸ்ரீலீலாவின் மும்மொழிக் கொள்கை சிலிர்க்க வைக்கிறது. 

கள்ளமில்லா ஸ்ரீ லீலாவின் வரவு தமிழுக்கு நல்வரவாகட்டும்.

இப்படி ஒரு படைப்பை முன்னெடுத்த தயாரிப்பாளர்கள் Dawn pictures, இயக்குனர் சுதா கொங்கரா… முக்கியமாக நாயகனாக நடிக்க ஒத்துக் கொண்ட சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு வந்தனங்கள்..!

மட்டுமின்றி இந்தப் படத்துக்காக நட்புடன் பங்களித்த ஆந்திரத்து ராணா, கேரளத்து பாசில் ஜோசப் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழர்கள் சார்பாக நன்றி..!

“நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை… இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்..!” என்று தெள்ளத் தெளிவாக சொல்வதில் தொடங்கி, தாய்மொழி மட்டுமே சுய சிந்தனையை வளர்க்கும் என்கிற உண்மையையும் உறுதிபட சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது. 

பாத்திரங்களின் வடிவமைப்பிலேயே  முன்னாள் முதல்வர் பக்தவச்சலம், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு கருணாநிதி என்று கண்டுபிடித்து விடக்கூடிய அளவில் துல்லியமாகப் பணியாற்றி இருக்கிறார் சுதா. 

ஆனால் நாம் நன்கறிந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு இன்னும் கூட பொருத்தமான பெண்மணியைத் தேர்வு செய்திருக்கலாம்.

ஜிவி பிரகாஷின் காலம் உணர்த்தும் இசை, அதை கண்முன் கொண்டு வந்த ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு, கலை இயக்குனர் எஸ். அண்ணாதுரையின் இணையில்லாத கலை வடிவங்கள், எடிட்டர் சதீஷ் சூர்யாவின் உறுத்தல் இல்லாத படத் தொகுப்புடன் இப்படத்தில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் தமிழ் உணர்வுடன் கலந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம். 

இன்றைய மாணவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தாய்மொழியின் அவசியம் குறித்த வரலாற்றுப் பாடம் இது.

தமிழுக்கு மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களுக்கும் அவர்களது தாய்மொழி எத்தனை முக்கியம் என்று உணர்த்தி இருப்பதில் முழுமையான மற்றும் முதன்மையான பான் இந்தியப் படம் இதுதான்.

பராசக்தி – மொழிக்கான சுதந்திரப் போர்..!

– வேணுஜி