ஒரு காலத்தில் தம்பியை ஒருபோதும் திறமை உள்ளவனாக அண்ணன்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்போது நிலைமையே வேறு.
அப்படித்தான் நடிகர் விஷ்ணு விஷால் தன் தம்பி ருத்ராவை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார், அதுவும் தனது சொந்தக் கம்பெனியிலேயே எனும்போது ருத்ராவின் திறமை மீது அவர் வைத்த நம்பிக்கைதான் காரணம் எனலாம்.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோ தயாரிக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தில் ருத்ராதான் நாயகன். படத்தை இயக்குபவர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.
தம்பியை அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்வில் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் மற்றும் ருத்ரா மீடியாக்களை சந்தித்தனர்.
தம்பி ருத்ரா பற்றி உற்சாகமாகச் சொல்ல ஆரம்பித்தார் விஷ்ணு விஷால்.
“ருத்ரா என் பெரியப்பா பையன். ஆனாலும் நாங்கள் கூட்டுக் குடும்பம் என்பதால் என்னுடைய சொந்தத் தம்பி போலவே வளர்ந்தான். நல்ல திறமைசாலி – உழைப்பாளி என்பதால் அவனை என் கம்பெனியிலேயே அறிமுகப்படுத்துகிறேன்..!” என்ற விஷ்ணு விஷாலிடம், “தம்பி மீது அவ்வளவு நம்பிக்கையா..?” என்றதற்கு இப்படித் தொடர்ந்தார்.
“நியாயப்படி பார்த்தால் அவன்தான் சினிமாவுக்காகவே தயாரானவன். என்னுடைய தொழிலாக சினிமா என்றைக்குமே இருந்ததில்லை. எனக்கு உயிர் மூச்சாக கிரிக்கெட்தான் இருந்தது ஆனால் ஒரு கட்டத்தில் என்னால் கிரிக்கெட்டை தொடர முடியாது என்ற நிலை வரும்போது ருத்ராவின் அப்பாதான் என்னை சினிமாவின் பக்கம் திருப்பி விட்டவர். நிறைய ஆலோசனைகள் சொல்வார். என் சினிமா வெற்றிக்கு அவரும் ஒரு காரணம்.
எனக்கே இப்படி சினிமாவின் மீது ஆர்வத்தை வளர்த்தவர் என்றால் தன்னுடைய சொந்த பிள்ளையை எப்படி வளர்த்திருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்..!”
தொடர்ந்து தம்பி ருத்ரா பேச ஆரம்பித்தார்.
“என்னதான் ஆர்வம் இருந்தாலும் சினிமாவை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஏ ஆர் முருகதாஸ் உள்ளிட்ட சிலரிடம் நான் உதவி இயக்குனராக வேலை பார்த்தேன். இதுதான் சினிமா என்று கற்றுக்கொண்ட பிறகு என்னுடைய நடிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினேன். என் மீது நம்பிக்கை வைக்கும் அண்ணன் தயாரிப்பதால் இதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.!”
படத்தை இயக்கும் கிருஷ்ணகுமார் ராம்குமார் வேறு யாருமல்ல. நமக்கு கிருஷ்ணா என்ற பெயரில் நடிகராக அறிமுகமானவர்தான். பல படங்களில் நடித்தவர் பின்னர் விளம்பரப் படங்கள் இயக்கப் போய்விட்டார்.
“இதுவரை 200க்கும் மேற்பட்ட விளம்பர படங்கள் இயங்கியிருப்பேன். அது பணம் சம்பாதிப்பதற்காக. ஆனால் என்னுடைய ஆசை சினிமா இயக்குவதாக இருந்தது. அமேசான் பிரைமில் வெளியான ‘மாடர்ன் லவ் இன சென்னை’ தொடரில் நானும் ஒரு எபிசோடு இயக்கியிருக்கிறேன். அந்த அனுபவங்கள் என்னை இங்கே இயக்குனர் ஆகியிருக்கிறது..!” என்றார் கிருஷ்ணகுமார்.
“எனக்கு பத்து வருடங்களுக்கு முன்னரே கிருஷ்ணகுமார் ஒரு கதை சொல்லி இருந்தார் அதை இயக்க வாய்ப்பளிப்பதற்கு ஒரு தயாரிப்பாளராக என்னால் அப்போது முடியவில்லை. இப்போது ஓஹோ எந்தன் பேபி படத்தின் கதை ருத்ராவுக்கு சரியாக இருக்கும் என்று தோன்றவே கிருஷ்ணகுமாரிடம் அதற்கான திரைக்கதை அமைக்கும் பொறுப்பையும் இயக்கும் பொறுப்பையும் விட்டு விட்டேன். .!” என்ற விஷ்ணு விஷாலுக்கு தம்பி மேல் கொஞ்சம் பொறாமையும் இருக்கிறது.
“நானெல்லாம் சினிமாவில் அத்தனை கஷ்டப்பட்டு ஹீரோவானவன் அதில் கிடைத்த ஏற்ற இறக்க அனுபவங்களை எல்லாம் வைத்து தயாரிப்பாளர் ஆனவன். சினிமா எனக்கு அவ்வளவு எளிதாகக் கை வரவில்லை.
அதனால் ருத்ராவுக்கு சரியாக அறிமுகமாவதற்கான ஒரு களத்தை நான் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். அதோடு இத்தனை படங்களில் நான் நடித்தும் எனக்கு இதுவரை முத்தக்காட்சி அமையவே இல்லை. அவனுக்கு இந்த படத்தில் மூன்று முத்த காட்சிகள் இருக்கின்றன..!” என்று கண் சிமிட்டினார்.
அதைச் சொன்னபோது ருத்ராவின் முகத்தில் வெட்கத்தை பார்க்க வேண்டுமே..? ஒரு மாதிரி சமாளித்தார்.
“சார்… சினிமாவாக இதை பார்த்தால் எதுவும் தவறாகத் தோன்றாது சினிமாவை அதன் பின்னணியை ஒரு உதவி இயக்குனராக பார்த்து வளர்ந்தவன் என்பதால் இது எனக்கு புதிய அனுபவமாக இருக்கவில்லை..!” என்று சொல்லி சிரித்தார் ருத்ரா.
படத்தின் டைட்டிலில் இருக்கும் பேபி, மிதிலா பல்கர். நெட் பிலிக்ஸ் – இல் வெளியான லிட்டில் திங்ஸ் என்ற தொடரை பார்த்ததும் இவர் தான் இந்த படத்தின் நாயகி என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள்.
மிதிலா படு ஸ்மார்ட்… நடிப்பில் கெட்டி… சூட்டில் அவர் நடிப்பை பார்த்து நான் அசந்து போனேன். ருத்ராவிடமும் “நீ இவளுக்கு இணையாக நடிக்க முடியவில்லை என்றால் அது வெளியே தெரிந்துவிடும். மிதிலாவுக்கு ஈடாக நடித்து விட்டாலே உன் நடிப்பும் பேசப்படும் என்றேன்..!” என்ற விஷ்ணு விஷால்தான் ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற இந்த படத்துக்கான தலைப்பையும் பிடித்திருக்கிறார்.
(மிதிலாவை பார்த்ததில் உண்டான தலைப்பு என்னவோ..?)
“நீங்கள் நடிக்க வந்ததை பற்றி உங்கள் குருநாதர் முருகதாஸுக்கு தெரியுமா..?” என்று ருத்ராவிடம் கேட்டபோது, “முதலில் அவருக்கு தெரியாது ஆனால் நடிப்பதற்காக என்னுடைய கெட்டப்பை மாற்றிக் கொண்டு அவர் முன்னால் போய் நின்ற போது “இது என்ன ஆளை மாறிட்டே..?” என்று கேட்டார்.
அப்போதுதான் நான் நடிக்க இருப்பதை சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ந்து என்னை வாழ்த்தினார்.
“நீங்க இந்த படத்தில் நடிக்கலையா.?” என்று கேட்டபோதுதான் கடைசியாக ஒரு சர்ப்ரைஸ் உதிர்த்தார் விஷ்ணு விஷால்.
“நான் இந்த படத்தில் இருக்கிறேன் அதுவும் நானாகவே..!” என்றார்.
படத்துக்குள் அவர் நடிகர் விஷ்ணு விஷால் ஆகவே வர, ருத்ரா அசிஸ்டன்ட் டைரக்டராக வருகிறாராம். ஒரு அசிஸ்டன்ட் டைரக்டரின் நெருக்கடிகளுடன் காதலையும் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் லைனாக இருக்கிறது.
அண்ணன் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்..!