கடந்தவாரம் வெளியான ‘ஓ மை கடவுளே’ நான்காவது நாளாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட, அதை ஒரு வெற்றிவிழாவாகக் கொண்டாடி விட்டனர் ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா செல்வம்.
மகிழ்ச்சியில் மிதந்த ரித்திகா சிங், “இது என் வாழ்க்கையில் முக்கியமான படம். உயர்வான விமர்சனங்கள் தந்த அனைவருக்கும் நன்றி. என்னையும் இந்த டீமின் அங்கத்தினராக ஏற்றுக்கொண்டு நடத்திய அனைவருக்கும் நன்றி..!” என்றதைத் தொடர்ந்து “இந்தப்படத்தைப் பார்த்து பிரிந்த ஒரு ஜோடி மீண்டும் இணைந்ததை எண்ணி வியக்கிறேன்…” என்றார் வாணி போஜன்.
அசோக் செல்வன் அகமகிழ்ந்து, “இந்தப்படம் வெற்றிபெறச்செய்தவர்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை சொன்னால் போதாது. இந்தப் படத்தை தொடங்கியபோது எங்களிடம் போதுமான பணம் இல்லை. டில்லிபாபு சார் உள்ளே வந்து எங்கள் கனவுகளை நிஜமாகச் செய்தார். அதேபோல் கேட்டவுடன் வந்து நடித்துக் கொடுத்து படத்தின் தன்மையை மேம்படச்செய்த விஜய் சேதுபதி அண்ணாவுக்கும் நன்றி..!” என்றார்.
தன் கனவை வெற்றிபெறச்செய்த அனைவருக்கும் தாள்பணிந்த நன்றி சொன்னது இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து என்றால், படத்தின் வெற்றியைக் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கும் வெளியீட்டாளர் சக்தி பிலிம் பேக்டரியின் சக்திவேலன், “இன்னும் நான்கு, ஐந்து வாரங்களுக்கு இந்தப்படம் வெற்றிகரமாக ஓடும் என்று வினியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். அந்த வெற்றியின் போது என் செலவில் ஒரு வெற்றிவிழாவை நடத்துவேன்…” என்றார் நம்பிக்கையுடன்.
எல்லாப்புகழுக்கும் காரணமான தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு, “அஷ்வத்துக்கும் அவர் டீமுக்கும் வாழ்த்துகள். இந்தப்படம், நல்லமுயற்சி வெற்றி பெறும் என்ற அளவில் எங்களுக்கு ஒரு மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது. இனியும் என் புதிய முயற்சிகள் தொடரும். இது போன்ற புதிய முயற்சிகளுடன் வருபவர்களுக்காக என் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்..!” என்றார்.