January 25, 2022
  • January 25, 2022
Breaking News
October 6, 2018

நோட்டா படத்தின் விமர்சனம்

By 0 796 Views

அரசியல் நையாண்டிப் படங்களை சினிமா ரசிகர்கள் எபோதுமே அன்லிமிட்டட் மீல்ஸ் ஆக விரும்பிச் சுவைப்பார்கள். அதிலும் நடப்பு அரசியலை ஒரு பிடி பிடித்தால் அது அன்லிமிட்டட் ஆம்பூர் பிரியாணியாகவே ஆகிவிடும். அப்படி ஒரு அரசியல் சட்டயர் கொண்டு ரங்கராட்டினம் சுற்றியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர்.

படத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம் தெலுங்குப் படவுலகின் ‘ஹாட் ஸ்டார்’ விஜய் தேவரகொண்டாவைத் தமிழ் ஹீரோவாக இந்தப்படத்தில் பட்டம் சூட்டியிருப்பது. அந்த வகையிலும் குறிப்பிடத் தகுந்த படமாக மாறிவிட்டது நோட்டா.

ஹீரோவாக இருந்து அரசியல் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறிவிட்ட கதை தமிழ்நாட்டுக்குப் புதிதில்லை. அப்படி சிஎம் ஆக இருக்கும் நாசர் ஒரு ஊழல் புகாரால் உள்ளே போக, கட்சியின் கட்டுப்பாடு மற்றும் ஆன்மிக அரசியல் வழிகாட்டுதலின்படி அவரது வாரிசான விஜய் தேவரகொண்டாவை அரசியலுக்குக் கொண்டுவந்து சிஎம் ஆக்குகிறார்கள்.

தற்காலிகமாக அவரை அறிவித்துவிட்டு வழக்கை சட்டப்படி (!!!) சந்தித்து வெளியே வந்தவுடன் மற்ற வேலைகளை அல்லது லீலைகளைத் தொடரலாம் என்பது நாசரின் திட்டம். ஆனால், சிஎம் ஆன ஜோரிலேயே சித்தார்த்தனுக்கு ஞானம் வந்து பொதுமக்களின் பிரச்சினைகளை உணரும் விஜய் தேவரகொண்டா, புத்தனாக மாறி அரசியலுக்குப் புத்துயிர் ஊட்ட அதிரடி முடிவுகளை எடுக்கிறார். அதற்கு வலதுகரமாக இருந்து உதவுகிறார் பத்திரிகையாளரான சத்யராஜ்.

இன்னொரு பக்கம் நாசர் எப்போது வீழ்வார் என்று காத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் கேஎஸ்ஜி வெங்கடேஷும், அவரது புதல்வி சஞ்சனா நடராஜனும் நாசர் உள்ளே போய்விட்டாரென்று குதூகலிக்கும் நிலையில் விஜய் தேவரகொண்டாவின் அதிரடி அரசியல் அவர்களை நிலைகுலைய வைக்கிறது. எனவே விஜய்யை வீழ்த்தி மக்களிடம் செல்வாக்குத் தேட திட்டம் தீட்டுகிறார்கள்.

ஆனால், விஜய்யின் அதிரடி அரசியல் நடவடிக்கைகள் நாசருக்கே பிடிக்காத நிலையில் ஒருபக்கம் நாசரின் நேரடி எதிர்ப்பு, இன்னொரு பக்கம் எதிர்க்கட்சி வெங்கடேஷ், சஞ்சனாவின் அன்டர்கிரவுன்ட் எதிர்ப்புகளை மீறி விஜய்யால் நினைத்தை சாதிக்க முடிந்ததா என்பது மீதிக் கதை.

பீட்சாவை ஆர்டர் செய்தால் புயல் வேகத்தில் வந்துவிடும். ஆனால், திருப்பதி லட்டுக்கு லைனில் நின்றுதான் காத்திருந்து வாங்கவேண்டும். விஜய் தேவரகொண்டாவைப் பொறுத்தவரையில் பீட்சா வேகத்தில் தமிழுக்கு இறங்கிய திருப்பதி லட்டு.

ஆந்திராவில் புயலைக் கிளப்பி புகழை அறுவடை செய்துவிட்டுத் தமிழ்நாட்டுக்குள்ளும் வெப்பசலன சுழற்சியாக அறிமுகப்படத்திலேயே அரசியல் அனலடிக்க அறிமுகமாகி இருக்கிறார். இதுபோன்ற நடப்பு அரசியல் விமர்சனப் படங்களில் இங்கேயிருக்கும் முன்னிலை நடிகர்கள் யாரும் நடிக்க வாய்ப்பே இல்லை.

அந்த அட்டகாச ‘கேப்’பில் கச்சிதமாக கேரவனை உள்ளே நுழைத்து புறப்பட்ட விஜய் தேவரகொண்டா பரபரப்புடனும், பாதுகாப்புடனும் இங்கே ‘லேண்ட்’ ஆகிவிட்டார். அந்த பாதுகாப்புக்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும், பரபரப்புக்கு இயக்குநர் ஆனந்த் ஷங்கரும் உறுதியளித்து அவரை உள்ளே கொண்டுவந்து விட்டார்கள்.

படத்தைப் பார்த்து டென்ஷனாகும் அரசியல்வாதிகளுக்கு அவர் ஒரு புதுமுகம்தான். அதனால் அவரை எதிர்ப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால், சினிமா ரசிகர்களுக்கோ தெலுங்கு சினிமாவில் அடுத்த ‘தேவுடா’வாகக் உருமாறிக் கொண்டிருப்பவர் என்பதால் பெரிய ஹீரோவுக்கு நிகராக இங்கே எதிர்பார்ப்பைக் கிளப்பியிருகிறார்.

‘பாடி ஃபிட்’டில் மட்டுமல்லாமல் பாடி லேங்குவேஜிலும் மனிதர் பிரித்து மேய்கிறார். நடிப்பு, உச்சரிப்பு சுத்தம் என்று முதல்நிலை ஹீரோக்களுடனான மேட்ச்சில் முதல் இன்னிங்சிலேயே சதமடித்து விட்டார் விஜய்.

அத்துடன் 50 படங்களாவது நடித்தால்தான் படத்துக்குள் ‘சிஎம்’ ஆகும் வாய்ப்பு சாத்தியம் என்கிற நிலையில் முதல் படத்திலேயே ‘சிஎம்’ ஆகி, இப்படி ஒரு இளைஞர் ‘சிஎம்’ ஆக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று யோசிக்கவே விட்டிருக்கிறார்.

மகளிருக்கான இடஒதுக்கீட்டில் நடிப்பில் சஞ்சனா மிளிர்கிறார். கிளாமருக்கு யாஷிகா பயன்பட்டிருக்கிறார். இருவரும் இல்லாத இடங்களில் சத்யராஜ் மகளாக வரும் மெஹ்ரின் பயன்பட்டிருக்கிறார். ஆனால், மூவருமே தேவரகொண்டாவுக்கு நேரடி ஹீரோயின்களாக முடியாமல் போனது துரதிஷ்டமே. காதல் என்ற ஒன்று காணவே காணோமே..?

இதுபோன்ற அரசியல் சட்டயர் படங்களில் சத்யராஜ் இமயம் தொட்டவர் என்பதால் இதில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டர் ஏற்காடு மலைக்குப் போன அளவில்தான் இருக்கிறது. ஆனால், கேரக்டருக்குண்டான நியாயத்தை அவர் செய்திருக்கிறார்.

நாசரும் அப்படியே. ஏற்கனவே அவர் மூக்குக்குப் பெயர் போனவர் என்றிருக்க, குண்டுவெடிப்புக்குப் பின்னால் அவர் மூக்குக்கு அத்தனை மெகா சைஸ் மேக்கப் தேவையா..? வழக்கமாக மூக்குக்கு மேல் கோபம் வரும் அவரது கேரக்டர்களில் இதில் வித்தியாசமாக மூக்குக்கு மேல் மேக்கப் வந்திருக்கிறது.

சின்ன வயது நாசர், சத்யராஜ் கேரக்டர்களுக்கு அவர்களையே நடிக்க வைத்திருப்பதில் இயக்குநரின் குசும்பு புரிகிறது.

அடக்கி வாசித்து அபாரப்படுத்தியிருப்பதில் எம்.எஸ். பாஸ்கரைச் சொல்ல வேண்டும். அந்த கபட சாமியார் மட்டும் வடக்கத்திய சாயலில் இருப்பதைத் தவிர்த்து தென்னிந்திய முகமாகவே காட்டியிருக்கலாம்.

கருணாகரனும், மொட்ட ராஜேந்திரனும் கறிவேப்பிலை, கொத்துமல்லி…

நடப்பு தமிழ்நாட்டு அரசியலை ஒத்திருக்கும் படத்தில் இது எந்தக் கட்சி, இந்தக் கேரக்டர் யார், இது என்ன சம்பவம் என்று நாம் யூகித்துக் களிப்படைவதிலேயே படம் பரபரப்பாக ஓடிவிடுகிறது.

விஜய் தேவரகொண்டாவை ‘ரவுடி சிஎம்’மாக வர்ணித்து அவர் போதையில் வெளிநாட்டுப் பெண்ணை முத்தமிடுவதை ரகசியமாகப் பதிவு செய்து அவர் இடைத்தேர்தலில் நிற்கும் வேளையில் வெளியே விட்டு சஞ்சனா ஓட்டுகளைத் திருப்ப நினைப்பதும், அந்தக் காட்சி விளம்பரத்துக்காக நடித்ததாக ஏ.ஆர்.முருகதாஸை வைத்தே வாக்குமூலம் பெற்று அதை விஜய் முறியடிப்பதும் ‘பலே’ கற்பனை.

அதிலும் முத்தமிட்ட நடிகர்களெல்லாம் அரசியலில் இருக்கக்கூடாதென்றால் இவர்களெல்லாம் எப்படி அரசியலில் இருக்க முடியுமென்று எம்.ஜி.ஆர் முதல் விஜய்காந்த் வரை படம் போட்டுக் காட்டி விஜய் கேட்பது ‘ரவுசு’.

தேவையற்ற கலவரத்தை உருவாக்கி அதில் பள்ளிச்சிறுமி பலியாகும் பஸ் எரிப்பு சம்பவம் திடுக்கிட வைக்கிறது. அந்தச் சிறுமியின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை அழுது நடித்திருப்பது மனதைப் பிசைய வைக்கிறது.

பாடல்களுக்காக இல்லாத படமானதால் சாம்.சிஎஸ் இசையில் பின்னணி இசையே பிரதானமாகத் தெரிகிறது. சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.

நோட்டா – போட்டுடலாம் ஓட்டா..!

– வேணுஜி