பொதுவாக வவ்வால்களின் சிறுநீர், உமிழ்நீரிலிருந்து உருவாகும் உயிர் கொல்லியான ‘நிபா வைரஸ்’ 1998-99ம் ஆண்டுகளில் பன்றிகளில் உருவாகி அதன்பிறகு மற்ற விலங்குகளுக்கு வந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோயாக மாறியுள்ளது. இந்த வைரஸின் அச்சம் இப்போது இந்தியாவில்… குறிப்பாக கேரளாவில் பரவியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இதுவரை ‘நிபா’ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை மூன்றுபேர் உயிரிழந்துளார்கள். இந்நிலையில் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு ‘நிபா’ வைரஸ் பரவியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது…
“தமிழ்நாட்டில் ‘நிபா’ வைரஸ் குறித்த அச்சம் தேவையில்லை. அது கேரளாவில் பரவத் தொடங்கியதும் அங்குள்ள சுகாதாரத்துறையுடன் தொடர்பு கொண்டு கேட்டுள்ளோம்.
அவர்கள் அதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக கூறி இருக்கிறார்கள். இது பரவக்கூடிய நோய் ஆனாலும் இந்த வைரஸ் கேரளாவில் இருந்து தமிழகத்தில் பரவக் கூடிய வாய்ப்புகள் இல்லை.
இது கேரளாவில் புதிதாக பரவுவதால் அதன் விவரங்களை வாங்கி அனைத்து பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர்களிடம் ஆய்வுக்காகக் கொடுத்துள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.இது கால்நடையில் இருந்து பரவக்கூடிய நோயாக இருப்பதால் கால்நடைத் துறையுடனும் கலந்து ஆலோசித்து வருகிறோம்.
இது வவ்வால்களில் இருந்து பரவும் என்று சொல்வதால் அதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். விலங்குகளுக்கு ஏற்படும் 70 சதவீத நோய்கள் மனிதர்களுக்கும் ஏற்படுகிறது. அதில் இதுவும் ஒன்று.
நோய் பரவாமல் தடுக்க மனிதர்களின் இருப்பிடமும், பன்றிகளின் இருப்பிடமும் ஒன்றாக இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு காய்ச்சல் என்றால் சுகாதாரத் துறையின் கண்காணிப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்..!”
‘நிபா’ வைரஸ் தாக்கினால் என்ன ஆகும்..?
லேசான காய்ச்சலுடன் நிபா வைரஸ் அறிகுறிகள் தொடங்கி பிறகு, தொடர் தலைவலி, உடல் சோர்வு, மனச் சோர்வு ஆகியவற்றைக் கடந்து, கோமா நிலையை அடைகிறது. இந்த வைரஸ் தாக்கி கோமாவுக்குச் சென்றவர்கள், இறுதியில் மரணத்தைச் சந்தித்தே ஆக வேண்டும். இதற்கு இன்னும் குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஓரளவு கட்டுப்படுத்த மட்டுமே தற்போது மருந்துகள் உள்ளன. இதுவரை இந்த வைரஸ் தாக்கியவர்களில் 75 சதவிகிதத்தினர் இறந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.