September 20, 2024
  • September 20, 2024
Breaking News
May 24, 2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் வினியோகம் துண்டிப்பு

By 0 983 Views

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள கொந்தளிப்பான நிலையில், இன்று முதல் ஸ்டெர்லைட்டுக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் 100-வது நாளை எட்டிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஊர்வலமாக சென்ற பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது கலவரமாக மாறியபோது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அதில் பத்து பேர் சம்பவ இடங்களிலேயே பலியாக, நேற்று அண்ணாநகர் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இறந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 13 ஆனது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேராசிரியை பாத்திமா தொடர்ந்திருந்த வழக்கில், ஸ்டெர்லைட் 2வது பிரிவு அனுமதி பெறப்பட்ட இடத்தில் தொடங்கப்படாததால் விரிவாக்கப் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும் எனவும், இந்த விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் கேட்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தும்படி நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் நேற்று உத்தரவிட்டனர்..

அது ஒருபுறமிருக்க, மாசுக்கட்டுப்பாடு வாரிய பரிந்துரையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிவந்த மின்சார இணைப்பை மின்சார வாரியம் இன்று அதிகாலை 5.30 மணி முதல் துண்டித்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அதேபோல் அரசாங்க அறிவுரையின்படி இன்டர்நெட் சேவைகள் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் துண்டிக்கப் பட்டுள்ளன.