November 22, 2024
  • November 22, 2024
Breaking News
March 8, 2024

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே சினிமா விமர்சனம்

By 0 161 Views

படத்தைப் பார்த்துவிட்டு முகம் சுளித்து, தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களை பத்தாம் பசலிகள் லிஸ்டில் சேர்த்துவிடலாம்.

ஆக்கத்தில் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அமைந்திருக்கிறது இந்தப் படம் என்று கட்டியம் கூறியே ஆரம்பிக்கலாம்.

நடுத்தர வர்க்க குடும்பங்களில் “அடுத்து என்ன..?” என்று யோசிக்க வேண்டிய அடாலசன்ஸ் பருவத்தைத் தாண்டிய இளைஞர்களைப் பற்றிய கதை இது.

காமம் மனத்தில் அடர்த்தியாக நிற்க, வாழ்வில் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று புரிய வழிகாட்டுதல் இல்லாத இளைஞர்கள் பலரும் கடந்து வரும் கடினமான பாதையை இதில் தொட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர் பிரசாத் ராமர்.

எல்லோருடைய நண்பர் குழுக்களிலும் ஒருவரோ, இருவரோ இப்படி இருப்பார்கள்.

அப்படி ஒரு இளைஞனின் வாழ்வில் இரண்டு நாள்களில் என்ன நடந்தது என்று காட்சிப் படுத்தி இருக்கிறார்.

இதன் மூலம் சமூகத்திற்கு எந்தச் செய்தியும் அவர் சொல்லவில்லை. மாறாக, இதிலிருந்து ஏதாவது பாடம் கிடைத்தால் இளைஞர்கள் கற்றுக் கொள்ளலாம். கதை மாந்தர்களும் இதற்குப் பிறகான காலங்களில் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளக்கூடும்.

இந்தப் படத்தின் சிறப்பான அம்சமே ஒருவனது வாழ்வை அவனறியாமல் இரண்டு நாள்ளகள் நம் கண்முன்னால் கேண்டிட் கேமரா வழியாகப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பதுதான்.

படமே ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தராமல் வாழ்க்கையைக் காட்டும் அனுபவமாக இருப்பதால் அதற்கான ஒளி, ஒலி அமைப்பு நடிப்பு இத்தியாதிகளுடன் கடக்கிறது படம்.

எனவே நாயகனுக்கு உரிய எந்த விதமான வாளிப்பான பூச்சோ , ஒப்பனையோ இல்லாமல் நம்மைக் கடந்து போகிற ஒரு வாலிபனைக் கண் முன் காட்டியிருக்கிறார் இயக்குனர். அவர்தான் செந்தூர்பாண்டியன்.

என்புதோல் போர்த்திய உடலுடன், ஐந்து கிலோ சதை கூடத் தேறாத, அவர் பெண் பிள்ளைகளின் சதை மீது (அல்ல, அல்ல… உடல் மீது – தோல் மீது என்றும் சொல்லக்கூடிய அளவில் இரண்டு நாள் அவர் தொடும் இரண்டு பெண்கள் அவரைப் போன்றே எலும்பினிகளாக இருக்கிறார்கள்…) அத்தனை ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

அகப்படும் பெண்களை ஆளில்லாத தியேட்டர்களுக்குக் கூட்டிப் போய் முடிந்தவரை அனுபவிப்பதுதான் அவரது முழு நேர வேலை.

அப்படி ஒரு லிப் லாக்குடன்தான் முதல் காட்சியே விரிய, ” அட… போதும் விடுடா…” என்று நாமே கத்தவேண்டிய அளவு நீள முத்தத்தை விடாமல் நீட்டிக்கிறார். 

தன் ஆர்வத்துக்குத் துளி பிரச்சினை வந்தாலும் சட்டென்று கோபமடையும் தன்மை கொண்ட அவர், அப்படியே அந்தப் பெண்ணுடன் கோபம் கொண்டு வெளியேறியது மட்டுமன்றி… அவள் தொடர்பையும் துண்டிக்கிறார்.

அடுத்த நாள்… அடுத்த பெண் என்ற அளவில் முகப்புத்தகத்தில் தேடி மறுநாள் பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் நாயகி பிரீத்தி கரனைக் கண்டுபிடித்து அவளுக்குப் பரிசு தர, மதுரையிலிருந்து மாயவரம் பயணிக்கிறார். அதுவும் தன் நண்பனை டியைவராக்கி, அவன் பைக்கிலேயே…

அப்படி நண்பனாக வருபவர் சுரேஷ் மதியழகன். இப்படி நண்பர்கள் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தன் பைக்கில் தன் செலவில் பெட்ரோல் போட்டு நண்பனை மாயவரம் கூட்டிப்போய், அவன் ஒரு பெண்ணை உஷார் பண்ணும்வரை தனியே காத்திருந்து… அவர் பாத்திரப்பெயர் காந்தி. அவ்வளோ நல்லவர்..! 

நாயகி ப்ரீத்தி கரணையும் சொல்லியாக வேண்டும். அவரும் லேசுப்பட்ட ஆள் இல்லை. வரம்பு மீறிய செந்தூர் பாண்டியனை ‘பாய்ண்ட்’ டில் உதைத்து… நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டாலும் அவ்வப்போது அக்கறையாக “ரொம்ப வலிக்குதா..?” என்று விசாரித்து… வழியில் மடக்கும் போலீஸிடம் சுயமரியாதை காட்டி… பண்புள்ள இளைஞன் ஒருவனை வழியில் சந்தித்தபோது அவனைப் பற்றி அக்கறையாக விசாரித்து… (அடுத்த எபிசோட் காதலன் அவனாகத்தானிருக்கும்…) சிம்ப்ளி சூப்பர்ப்..!

இவர்களுடன் பிக்பாஸ் பூர்ணிமா, தமிழ்ச்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா என்று எல்லோருமே அறியாத அல்லது அதிகம் அறியாத முகங்கள்…

யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை. அந்த அளவுக்கு இயக்குனர் தெளிவாக இருந்திருக்கிறார்.

உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு எக்சலண்ட். ஒளியில் ஓவியம் எல்லாம் வரையாமல் நேரில் பார்த்தால் ஒரு காட்சி எப்படி இருக்குமோ அப்படியே பட்ஜெட்டுக்கும் பழுதில்லாமல் படமாக்கி இருக்கிறார். 

படத்தின் தரத்துக்கு செந்தூர் பாண்டியனை நண்பன் மாயவரம் அழைத்துச் செல்ல பைக்கில் காத்திருக்கும் அந்த அதிகாலைக் காட்சியை குறிப்பாகச் சொல்ல வேண்டும். அதிகாலை இருளில் வாசலில் அப்பா பல் விளக்கிக் கொண்டிருக்க… ஒரு வெற்று வெளி கடந்து காத்துக்கொண்டிருக்கும் நண்பனை நோக்கி நடையைக் கட்டுகிறார் செந்தூர்பாண்டி.

அவர்கள் வளர்க்கும் நாய்க்குட்டியும் வாலாட்டிக் கொண்டே அவருடன் செல்கிறது. அவர் பைக்கில் ஏறிச் சென்றவுடன் அங்கிருந்து வீட்டுக்கு ஓடிவரும் நாய்க்குட்டி பல் விலக்கி கொண்டிருக்கும் அப்பாவை பார்த்து வாலாட்டுகிறது.

இந்தக் காட்சியை எப்படிக் கற்பனை செய்து முயன்று எடுத்தார்களோ என்று பிரமிப்பாக இருக்கிறது. நாய்க்குட்டி சொதப்பி இருந்தாலும் அந்த ஷாட் தோல்வி அடைந்திருக்கும்.

இப்படியே படம் நெடுக அனாவசிய குளோஸ் அப், மிட் ஷாட் என்றெல்லாம் இலக்கணத்துக்குள் ஐக்கியமாகாமல் இயல்பான பார்வைக் கோணத்திலேயே படமாக்கச் சொன்ன இயக்குநருக்கும் படமாக்கிய ஒளிப்பதிவாளருக்கும் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதில் தவறே இல்லை.

ஒரு ஷாட்டை கட் செய்யும் இடம் கூட இதுவரை சினிமாவில் இல்லாத அழகில் முயன்றிருக்கிறார்கள்.

இசையமைத்து(ம்) இருக்கும் தயாரிப்பாளர் பிரதீப் குமாரும் ஸ்கிரிப்ட்டை முழுதாக உள்வாங்கி தன்னுடைய திறமையை செதுக்கிக் கொடுத்திருக்கிறார். 

‘அடல்ட் கன்டென்ட்’ என்ற ஒரு விஷயத்தை மட்டும் இதில் விலக்கி வேறு ஒரு சீரியஸ் பிரச்சினையை உள்ளே வைத்திருந்தால் எல்லோரும் கொண்டாடி இருக்கக் கூடிய படம் இது. அப்படி இருந்திருந்தால் அதுவே ஒரு ‘கிளிஷே’ தான்.

ஆனாலும், இதைக் கொண்டாடலாம். சரியான தளங்களுக்கு இந்த படத்தைக் கொண்டு சென்றால்  மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் படமாக இது இருக்கும்.

‘ஆரண்ய காண்டம்’ படத்தைப் போல திடீரென்று கொண்டாடப்படக்கூடிய படமாக இது மாறக் கூடிய சாத்தியம் உள்ளது.

முக்கியமாக சர்வதேச பட விழாக்களைக் குறி வைத்தால் எந்த விழாவிலும் பாராட்டப்படும் ப படமாக இது இருக்கும் என்பதில் துளி அளவு சந்தேகமும் தேவையில்லை.

ஜனரஞ்சக ரசிகனின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் இருந்தாலும் சினிமா ரசனையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் இதைப் போன்ற படங்கள் வரவேற்கப்பட வேண்டும்.

கான்டெம்பரரி சினிமா பிரியர்கள் சிலாகிக்கும் படமாக வந்திருக்கிறது, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..!

நவயுக சினிமாவாக தமிழுக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுக்கும் முயற்சி..!

– வேணுஜி