December 12, 2024
  • December 12, 2024
Breaking News
March 10, 2024

கார்டியன் திரைப்பட விமர்சனம்

By 0 231 Views

வில்லன்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் ஆத்மா பேயாகி தன் பழியைத் தீர்த்துக் கொள்ளும் கதை ஒன்றும் புதிதில்லை. அதற்கு அந்தப் பேய் உயிருடன் இருக்கும் ஹன்சிகாவைப் பயன்படுத்திக் கொள்வதிலும் எந்த புதிய சிந்தனையும் இல்லை.

ஆனால் பேய் என்றாலே கொடூரமாகவும் அவலட்சனமாகவும் இருக்க வேண்டுமா..? ஹன்சிகாவைப் போல் அழகான பேய், உலகில் இருக்காதா..? என்று இயக்குனர்கள் சபரியும் குரு சரவணனும் நினைத்திருப்பது ஒன்று மட்டும்தான் இதில் புதிய ஐட்டம்.

பிறந்ததிலிருந்து ஹன்சிகா ஒரு அதிர்ஷ்டக் கட்டையாம். அவர் தொட்டதெல்லாம் துலங்காமல் போய்விடுகிறது – கை பட்டதெல்லாம் பஸ்பம் ஆகிவிடுகிறது. இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் எல்லாமே அதிர்ஷ்டமாக மாறி தொட்டதெல்லாம் துலங்குகிறது – சொன்னதெல்லாம் நடக்கிறது.

அதன் காரணம் என்ன… அது எப்படி நேர்ந்தது… அதன் முடிவு என்ன..? என்பதுதான் மீதிப் படத்தின் கதை.

ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்துப் பெண்ணாக ஹன்சிகாவை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும் அவர் ஒரு துரதிஷ்டசாலி என்பதற்குப் படத்தில் சொல்லும் காரணங்கள் எதுவும் பொருந்தவில்லை.

நேர்முகத் தேர்வுக்குப் போன இடத்தில் உடன் அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் வேலைக்கு வந்தவர்கள் போல் இருக்க, ஃபுல் மேக்கப்பில் இருக்கும் ஹன்சிகாவோ அந்த நிறுவனத்துக்கு எம்டி போல் தோற்றமளிக்கிறார்.

ஒரு கேரக்டரை ஏற்றுக் கொள்ளும்போது அந்தக் கேரக்டருக்கு கொஞ்சமேனும் நியாயம் செய்ய வேண்டாமா ஹன்சிகா? லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கூட தான் ஏற்றுக்கொள்ளும் கேரக்டருக்குத் தக்கவாறு தன்னுடைய ஒப்பனையை மாற்றி அமைத்துக் கொள்வார்.

ஆனால், இதில் ஹன்சிகாவோ அயனிங் செய்யப்பட்ட தலை முடி, அல்ட்ரா மாடர்ன் ஆடைகள், அதீத மேக்கப்புடன் அதிர்ஷ்டக் கட்டையாக வருவதெல்லாம் நீர்மேல் ஊற்றிய விளக்கெண்ணெய் போல் ஒட்டாமலேயே மிதக்கிறது.

போதாக்குறைக்கு அப்பாவித் தனத்தை காட்டுகிறேன் என்று அவர் நடிப்பதெல்லாம் அரை லூசுத்தனமாக இருக்கிறது.

ஏதோ ஒரு ஹீரோவின் ஜோடியானோமா நாலு பாட்டுக்கு ஆடினோமா என்று இருந்தால் மட்டுமே ஹன்சிகாவால் காலம் தள்ள முடியும். இந்த தனி கதாநாயகி வேலையெல்லாம் அவரைப் பொறுத்தவரையில் வேலையற்ற வேலை.

பேய் உருவாகக் காரணமான வில்லன்களாக பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகிய நால்வரும் வருகிறார்கள். அப்படிப்பட்ட மோசமான அயோக்கியர்கள் அழகான கைம் பெண்ணான ஷோபனா பிரனேஷைதானா அத்தனை தில்லுமுள்ளுக்களுக்கும் ஆடிட்டராக வைத்திருப்பார்கள்..?

அவர் ஒத்துவரவில்லை என்றதும் உடனே நால்வருமே கிளம்பி வந்து அவரைக் கொலை செய்வார்களாம். 

காமெடியன்கள் (?) மொட்டை ராஜேந்திரனும், டைகர் கார்டன் தங்கதுரையும் நகைச்சுவை என்ற பெயரில் ஏதேதோ செய்து நேரத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அபிஷேக் வினோத், தியா, பேபி க்ரிஷிதா எல்லாம் மீதி நேரத்தை நிரப்புகிறார்கள்.

கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவும், சாம்.சி.எஸ்சின் இசையும் மட்டுமே இதை ஒரு நேர்த்தியான படம் போல் காட்ட உதவுகிறது.

பேய்ப் படம் என்றால் ஏதாவது ஒரு இடத்திலாவது நாம் திடுக்கிட வேண்டாமா..? 

அதெல்லாம் வேண்டியதில்லை என்று நினைத்திருக்கும் இரட்டை இயக்குநர்கள் கமர்சியல் படங்களின் கார்டியன் கே.எஸ். ரவிக்குமாரின் தயாரிப்பு என்பது வருத்தமான செய்தியாக இருக்கிறது.

படத்தில் வரும் ஒரு கல்லூரிக்கு கே எஸ் ஆர் கல்லூரி என்று பெயர் வைத்துத் தங்கள் குரு பக்தியை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையான குரு பக்தி, குருவின் பெயரைக் காப்பாற்றுகிற அளவுக்குப் படம் எடுப்பதுதானே பிரதர்ஸ்..?

கார்டியன் – காரம் குறைந்த.கரம் மசாலா..!