November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஒரு தந்தையின் அழுகுரலைப் பாடியிருக்கிறேன் – எஸ். ஏ.சி உருக்கம்
November 21, 2021

ஒரு தந்தையின் அழுகுரலைப் பாடியிருக்கிறேன் – எஸ். ஏ.சி உருக்கம்

By 0 399 Views

இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார்.

விழாவில் படத்தின் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ், படத்தொகுப்பாளர் பிரபாகர், நடிகர்கள் ‘பருத்திவீரன்’ சரவணன், சமுத்திரகனி, நடிகைகள் சாக்ஷி அகர்வால், இனியா, குழந்தை நட்சத்திரம் டயானாஸ்ரீ , தயாரிப்பாளர் பி. டி .செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில்,

 ”இந்தப் படத்தின் ஆடியோவை யார் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும்? என எண்ணினேன். சமூக அக்கறை கொண்ட படம் என்பதால், சமூகத்தின் மீது பேரன்பும், அக்கறையும் கொண்ட இயக்குநர் அமீர் கலந்து கொண்டு, வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அவரை போனில் தொடர்பு கொண்டு அழைத்தேன். விசயத்தை தெரியப்படுத்திய போது “எத்தனை மணிக்கு வர வேண்டும்? எங்கு வர வேண்டும்? அதை மட்டும் சொன்னால் போதும்…” என்றார். 

இந்தப் படத்தை நான் அமீருக்குப் போட்டியாகத் தான் இயக்கி இருக்கிறேன். இந்த வயதிலும் உங்களைப் போன்ற இயக்குநர்களுடன் பயணிப்பதை பெருமையாகக் கருதுகிறேன். இந்தப் படத்தை நீங்கள் பார்க்க வேண்டும். பார்த்துவிட்டு கால்ஷீட் கொடுக்க வேண்டும்.

இந்தப்படத்தில் அண்மைக்காலமாக யாரும் சந்திக்காத சமுத்திரகனியைப் பார்க்கலாம். அழகான ஹீரோ அமைதியான ஹீரோ. இனிமையான ஹீரோ. அவருக்குள் ஒரு கமர்சியல் ஹீரோ ஒளிந்து கொண்டிருக்கிறார். அது அவருக்குத் தெரியவில்லை. நான் அதை வெளிப்படுத்தி இருக்கிறேன். ஒரு கமர்சியல் ஹீரோவிற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருக்கின்றன. இந்தப் படத்தில் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு 80 காலக்கட்டத்துப் பாணியில் மனதிற்கு நிறைவாக ஒரு படத்தை இயக்கி இருக்கிறேன்.

சினிமாவில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்கும் நடிகர்களுக்குத்தான் நடிப்பதற்கான சந்தர்ப்பம் அமையும். ரஜினி கூட நெகட்டிவ் கேரக்டரில் அறிமுகமாகி பிரபலமானவர். இந்தப்படத்தில் நாயகனை விட பல இடங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கும் சரவணன்தான் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்.

நடிகர் விஜய் இன்று இந்த அளவு உயரத்தில் இருக்கிறார் என்றால், அதற்கு நானோ, இயக்குநர்களோ மட்டும் காரணமல்ல பி.டி. செல்வகுமார் போன்றவர்களின் கடின உழைப்பும் ஒரு காரணம். அதனால் அவரும் எங்கள் குடும்பத்தில் ஒருவர்தான். 

இந்தப் படத்திற்கு முதலில் பாடல்களே வேண்டாம் என்று தான் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். படத்தில் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான உறவை – ஆழமான புரிதலை காட்சிப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த இடத்தில் பாடல்கள் வந்தால் பொருத்தமாக இருக்குமென படத்தொகுப்பாளர் சுட்டிக்காட்டினார்.

அதன்பிறகு அங்கு ஒரு பாடலை வைத்தோம். பாடலுக்கு இடையில் ஒரு தந்தையின் அழுகுரல் இடம் பெற வேண்டும் என எண்ணினேன். அதனை நானே பாடினேன். நான் பாடினேன் என்பதைவிட அந்த இடத்தில் ஒரு தந்தையின் அழுகுரலைப் பதிவு செய்தேன்..!” என்றார். 

நடிகர் சமுத்திரகனி பேசுகையில்,

“இயக்குநர் எஸ்ஏசி இந்த வயதிலும் இளமைத் துடிப்புடன் பணியாற்றுவதைப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படும். உங்களைப் போன்றவர்களைப் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்வது எங்களது கடமை. இதற்காகத்தான் நீங்கள் அழைத்தவுடன் உடனடியாக ஓடோடி வந்தேன்.

படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிடுமாறு நான் பரிந்துரை செய்தது உண்மைதான். ஏனெனில் திரையரங்குகளில் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சிறிய பட்ஜெட் படங்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ‘அப்பா’ என்றொரு படத்தை நான் தயாரித்து இயக்கி வெளியிட்டேன். அந்தப் படம் வெளியாகி நான்கு நாட்களுக்குள் பெரிய படம் ஒன்று வெளியாகிறது என்று சொல்லி என் படத்தைத் திரையரங்கிலிருந்து எடுத்து விட்டனர். இதுபோன்ற படங்களுக்கு மக்கள் முதல் நாளில் வரமாட்டார்கள். மக்களால் பேசப்பட்டு.. பேசப்பட்டு… பிறகுதான் திரையரங்கிற்கு வருவார்கள். பத்து நாளுக்குப் பிறகுதான் இது போன்ற படங்களுக்கு வசூல் அதிகரிக்கும்.

‘வினோதய சித்தம்’ என்று ஒரு படத்தை இயக்கினேன். அந்தப் படம் டிஜிட்டல் தளத்தில் இருக்கிறது என்று தைரியமாகச் சொல்வேன். ஆனால் திரையரங்கில் வெளியாகி இருந்தால், அந்தப் படத்தை நான் எங்கு சென்று பார்க்க வைப்பது? அதனால்தான் நான் இயக்குநரிடம் டிஜிட்டல் தளத்தில் வெளியிடுமாறு பரிந்துரை செய்தேன்.

இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களுக்கு கிடைக்கக்கூடிய ஆதரவு என்பது மிகவும் குறைந்து விட்டது என்ற ஆதங்கம் என்னுள் இருக்கிறது.

மறைந்த என்னுடைய குருநாதர் கே. பாலச்சந்தர் சாருக்கு வழங்கக்கூடிய அதே மரியாதையையும் அதே அன்பையும் இன்றும் எஸ் ஏ சி சாரிடமும் வைத்திருக்கிறேன்..!”

இயக்குநர் அமீர் பேசுகையில்,

”கொரோனா காலகட்டத்தில் ஏராளமானவர்களை இழந்திருக்கிறோம். கொரோனாவிற்குப் பிறகு நாமெல்லாம் இங்கு இருக்கிறோம் என்பதே சந்தோஷம்.

இயக்குநர் எஸ் ஏ சி பேசுகையில் இந்த விழாவிற்கு அழைத்தவுடன் நான் ஏற்றுக்கொண்டு கலந்து கொண்டதைக் குறிப்பிட்டார். எனக்கும் எஸ் ஏ சி சாருக்குமான உறவு ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தைப் பார்த்த போதே தொடங்கிவிட்டது. அந்தப் படத்தை நான் பள்ளியில் படிக்கும்போது மதிய வேளையில் கட் அடித்து பார்த்தேன்.

ஒரு திரைப்படம் எந்த மாதிரியான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்த முடியும் என்பதை நாம் அண்மைக்காலமாகப் பார்த்து வருகிறோம். ஆனால் அன்றைய காலகட்டத்திலேயே சட்டம் என்ற ஒரு வார்த்தையை வைத்து படத்தை இயக்கியவர் எஸ் ஏ சி. அதில் குறிப்பாக சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ‘சட்டம் ஒரு இருட்டறை அதை பேரறிஞர் அண்ணா சொன்னாரு.. ’என ஒரு பாடல் இருக்கும்.. அண்ணா சொன்னார் என்பதே எனக்கு அந்தப் படத்தை பார்த்த பிறகுதான் தெரியும். ஏனெனில் அண்ணா எழுதிய புத்தகத்தை நான் படிக்கவில்லை. அந்தப் பாட்டுதான் என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது. ஒரு ரசிகனாக பள்ளியில் படிக்கும் காலத்திலேயே எஸ் ஏ சி யின் படத்தை பார்த்து இருக்கிறேன்.

2010 வாக்கில் என்னை தொடர்புகொண்டு நேரில் சந்திக்க வேண்டும் எனக் கேட்டார். அப்போது நான் ‘யோகி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அலுவலகத்திற்கு வருகை தந்து நீங்கள் எனக்கு ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும். உடனடியாக 40 நாள் கால்ஷீட் வேண்டும் எனக் கேட்டார். என்னால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. அப்போது தேர்தலுக்கு மூன்றரை மாதங்கள் தான் இடைவெளி இருந்தது. அதற்குள் படத்தை எடுத்து வெளியிட வேண்டும் எனச் சொன்னார். எப்படி சார் முடியுமா? எனக் கேட்டபோது, ‘அதெல்லாம் என் பொறுப்பு’ என்று துணிச்சலாகச் சொன்னார்.
 
அதன் பிறகு அவருடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை. அதன் பிறகு அவர் சத்யராஜை வைத்து அவர் நினைத்த கதையை ‘சட்டப்படி குற்றம்’ என்ற பெயரில் எடுத்து வெளியிட்டார். அப்போதும் நான் அவரை வியந்து பார்த்தேன்.
 
மேடையில் உங்களுக்கு அருகில் அமர்ந்ததை நான் இறைவனின் ஆசியாக கருதுகிறேன். எங்களைப் போன்ற இயக்குநர்களுக்கு படத்தைவிட நீங்கள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதுதான் முக்கியம். இதைத்தான் நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறோம். 
 
சமுத்திரகனியும், நானும் ஒரே அறையில் வசித்தவர்கள் தான். அவன் எப்போதும் ஏதேனும் புத்தகத்தை படித்துக் கொண்டே இருப்பான். எனக்கு படிக்கும் பழக்கம் இல்லை. கேட்கும் பழக்கம் இருக்கிறது.இரவில் சமுத்திரகனி படித்ததை காலையில் அவன் சொல்லும் போது கேட்கும் பழக்கம் எனக்கு இருக்கிறது. அந்த உழைப்பு தான் அவனை இந்த உயரத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது.  இன்னும் உயரத்திற்குச் செல்வார். 
 
நான் கடவுள் இல்லை படத்தை ஓ டி டி தளத்தில் வெளியிடலாம் என சமுத்திரகனி எஸ் ஏ சியிடம் பரிந்துரை செய்தார். எனக்கும் அது சரி என்று தோன்றுகிறது. ஆனால் எஸ் ஏ சி இது திரையரங்கில் தான் வெளியாகும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஓ டி டி யில் வெளியிட்டால் அது ரசிகர்களைச் சென்று சேராது என்ற நிலை தற்போது இல்லை.
 
ஏனெனில் இன்று ஓ டி டி டி இல் வெளியான ‘ஜெய்பீம்’ என்ற படம்தான் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நாம் இங்கு 100 பேரை அழைத்து வந்து சொல்வதைவிட, ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சொல்வது என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்…” என்றார்.