November 29, 2026
  • November 29, 2026
Breaking News
November 25, 2026

மௌன மொழிகள் திரைப்பட விமர்சனம்

By 0 4 Views

ஒரு இனிமையான காதல் கதை இனிமையாகவே முடிந்ததா என்பதுதான் கதையின் உயிர் முடிச்சு.

தன் நண்பன் அர்ஜுனனுடன் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நாயகன் ஷகீர் மனோ, தனது விளம்பரங்களுக்கான நாயகியை தேடப் போக, நாயகி அர்ச்சனாவின் விவரங்கள் அவரைக் கவர்கின்றன.

அர்ச்சனாதான் தனது காதலி என்று முடிவு செய்து அவரைக் கண்டுபிடிக்க முயற்சி எடுக்கிறார்.

அதே நேரத்தில் மிஸ். இந்தியா ஆவதே தனது லட்சியம் என்று தனது மேனி அழகை பாதுகாத்து வரும் நாயகி அர்ச்சனா, ஷகீருடனான முதல் சந்திப்பில் கசப்பான அனுபவம் பெறுகிறார்.

தான் தேடிய தேவதை அவர்தான் என்பது தெரியாத ஷகீர் தொடர்ந்து அர்ச்சனாவை தேடிக் கொண்டிருக்க, அர்ச்சனாவின் தோழியான திவ்யா நாகேஷ், அந்தத் தேடலுக்கு உதவி புரிய போய் ஒரு கட்டத்தில் ஷகீரைக் காதலிக்கத் தொடங்குகிறார்.

ஒரு வழியாக ஷகீர் அர்ச்சனாவைக் கண்டுபிடித்து விடும் வேளையில் அர்ச்சனாவுக்கு பெரும் பிரச்சனை ஒன்று முளைத்திருக்கிறது. அதையும் மீறி அர்ச்சனாவை ஷகீர் மணக்க விரும்பி திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்க, ஷகீர் மீதான திவ்யா நாகேஷின் காதல் அந்த திருமணத்திற்கு அடுத்த பிரச்சனையாக உருவெடுக்கிறது.

இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து ஷகீரும் அர்ச்சனாவும் இணைந்தார்களா என்பதுதான் மீதி கதை.

நாயகன் ஷகீர் மனோ, ஒரு வணிக நாயகனுக்கு உண்டான அனைத்து அம்சங்களையும் கற்றுக்கொண்டு எல்லா ஏரியாக்களையும் திறம்பட மேற்கொண்டு இருக்கிறார். நல்ல பையன் என்ற பெயருக்கு பொருத்தமாகவும் இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா, மிஸ் இந்தியா பட்டம் பெற வேண்டும் என்று முதல் காட்சியில் யோசித்ததோடு சரி, அதற்குப் பின் எந்த விதமான முயற்சியும் அதற்காக எடுக்கவில்லை. ஆனால் கவர்ச்சியான அழகுடன் அழகிப் போட்டிக்கு பொருத்தமாக இருப்பவருக்கு அப்படி ஒரு விபத்து நேர்ந்திருக்கவும் வேண்டியது இல்லை.

இன்னொரு நாயகியான திவ்யா நாகேஷ், எல்லா ஆண்களுடனும் இயல்பாகப் பழகி ஒரு கட்டத்தில் அவர்கள் வரம்பு மீறும்போது ஒவ்வொருவரையும் திட்டித் தீர்ப்பது நியாயமாக இல்லை.

நாயகனின் நண்பராக வரும் அர்ஜுனன், காமெடி ஏரியாவை சரியாக பயன்படுத்தி அங்கங்கே சிரிக்க வைக்கிறார். 

ஷகீரின் அப்பாவாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய் மற்றும் அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன், அர்ச்சனாவின் பெற்றோராக நடித்திருக்கும் இளவரசன் – அஞ்சலி தேவி பாசத்துக்கு குறை வைக்காமல் பயணித்திருக்கிறார்கள்.

காதலுக்கேற்ற கலர்ஃபுல்லான காட்சிகளை கவனம் கவருகிறார் ஒளிப்பதிவாளர் எம்.ஜி.ராய்.

நல. இளந்திரையன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கவர்கிறது. குறிப்பாக ‘காதலியே…’ பாடல் மீண்டும் கேட்க வைப்பதுடன் காட்சிகளாகவும் மனதில் பதிகிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஏ.சி.சௌந்தர்.எம்.ஏ., ஒரு காதல் கதையை கவித்துவமாக சொல்ல ஆசைப்பட்டிருக்கிறார். அதை அவர் காவியமாக முடிக்க நினைத்திருப்பதும் புரிகிறது. முக்கால்வாசி படம் வரை தான் நினைத்ததை சரியாக எடுத்திருப்பவர் கடைசி கால்வாசி படத்தில் கொஞ்சம் குழம்பி இருப்பது புரிகிறது.

இப்படித்தான் இந்த படத்தை முடிக்க வேண்டும் என்று முதலிலேயே அவர் முடிவு செய்திருந்தால் அதற்கேற்ற காட்சிகளை அடுக்கி இருக்கலாம்.

மெளன மொழிகள் – நீ வருவாய் என..!

– வேணுஜி